75-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது தமிழ் சினிமா. இது நமக்கெல்லாம் பெருமிதம் அளிக்கின்ற அம்சம். இந்த முக்கால் நூற்றாண்டில் குறிப்பிடத்தக்கதொரு மாற்றத்தையும், மதிப்பிடத்தக்க வளர்ச்சியையும் நமது தமிழ் சினிமா பதிவு செய்திருக்கிறது.
இதை நிறுவ ஏராளமான உதாரணங்களை மகிழ்வோடும், பெருமையோடும் முன் வைக்கலாம். வரலாற்று நாயகர்களையும், நாயகிகளையும், ஒட்டுமொத்த இந்தியாவையும் ஆட்டிப் படைக்கும் தொழில்நுட்பக் கலைஞர்களையும் ஒரு சேர உருவாக்கித் தந்துள்ளது தமிழ் சினிமா.
அது மட்டுமின்றி தனது மாநிலத்திற்கான நான்கு முதல்வர்களைத் தந்த உலகின் ஒரே திரையுலகம் என்ற பெருமையையும், உலக சினிமா வரலாற்றுக் குறிப்பேட்டில் தனித்துவமிக்கப் பக்கத்தில் தமிழ் சினிமா பொறித்திருக்கிறது.
தமிழ் சினிமா அந்தளவுக்குத் தமிழ் சமூகத்தின் நாடி, நரம்புகளோடும், ஊன், உள்ளம், உதிரத்தோடும் உறவாடிக் கொண்டிருக்கிறது. அதன் சமீபத்திய விஸ்வரூப வளர்ச்சியையும், எல்லைகள் கடந்து ஜொலிக்கும் பெருமையையும், ஒவ்வொரு தமிழனும் நினைத்துப் பெருமைப்படும் வகையில் விரிவாக அலசுகிறது இந்தக் கட்டுரை.
ஒரு முக்கியக் குறிப்பு... இந்தக் கட்டுரை, எம்.கே.தியாகராஜ பாகவதரின் காலத்திலிருந்து ஆரம்பித்து படிப்படியாக ஏற்பட்ட வளர்ச்சியை வியப்பதல்ல! மாறாக "சிவாஜி'யுடன் ஆரம்பித்து "அதிருகிற' ரகம்! எல்லாமே லேட்டஸ்ட்!
இமயங்கள் இணைந்த "சிவாஜி' திரைப்படம் தான் இன்று தமிழ் சினிமாவை குன்றின் மேல் வைத்த ஒளி விளக்காய் புகழ் சிகரத்தில் ஏற்றியிருக்கிறது. "சிவாஜி' தொடங்கப்பட்ட நாளிலிருந்து, படத்தைப் பற்றிய எல்லையற்ற எதிர்பார்ப்புகள் இந்திய தேசத்தின் எல்லைகள் வரை எதிரொலித்தன.
அட்டகாச "சிவாஜி'
90 கோடிகளில், சர்வதேசத் தரம் வாய்ந்த கலைஞர்களின் 2 வருட கடினமானக் களப் பணியில் உருவான "சிவாஜி', இந்திய சினிமா வரலாற்றிலேயே இல்லாத அதிசயமாக, எடுத்த எடுப்பிலேயே 800 பிரிண்டுகள் போடப்பட்டு, சுமார் 70 கோடிகளுக்கு விலை போனது. வெளிநாடுகளுக்கு மட்டும் 151 பிரிண்டுகள் அனுப்பப்ட்டது இன்னொரு சாதனை.
தமிழகத்தில் 200-க்கும் மேற்பட்ட தியேட்டர்களிலும், அதைவிட அதிகமாக ஆந்திராவில் 250 தியேட்டர்களிலும் (டப் செய்யப்பட்டு) திரையிடப்பட்டது "சிவாஜி'.
அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா போன்ற நாடுகளில், ஹாலிவுட் படங்களுக்கு அடுத்து, பாலிவுட் படங்கள்தான் அதிகம் ரசிக்கப்படும்.
ஆனால், அதே பாலிவுட்டைத் தன் தயாரிப்புச் செலவிலும், வியாபாரத்திலும் அநாயசமாக மிஞ்சி சாதனை படைத்த கோலிவுட் "சிவாஜி' அமெரிக்காவிலும், கனடாவிலும், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் 40-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.
அதுமட்டுமில்லை, "சிவாஜி'க்கு கிடைத்த வரவேற்பைக் கண்ட "லாஸ் ஏஞ்சலிஸ் டைம்ஸ்' எனும் அமெரிக்க நாளிதழ் படத்தைப் பற்றி முழுக் கட்டுரை வெளியிட்டுள்ளது. மேலும் இந்தியாவில் பாலிவுட் மட்டுமின்றி, தெற்கில் கோலிவுட் எனும் திரையுலகம் இருப்பதையும், தமிழ் என்ற மொழி 7 கோடி மக்களால் பேசப்படுவதையும் அக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது அந்நாளிதழ்.
அமெரிக்காவில் இப்படியென்றால், பிரிட்டனிலோ தமிழ்ப் படங்கள் பொதுவாகத் திரையிடப்படாதாம். அப்படியே திரையிடப்பட்டாலும், ஒன்றிரண்டு தியேட்டர்களில் மூன்று நாட்களுக்கு மேல் ஓடாதாம். ஆனால், "சிவாஜி' சிங்கம் பிரிட்டனையும் விட்டு வைக்காமல், 20 தியேட்டர்களில் திரையிடப்பட்டு, 15க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் நான்கு வாரங்களைக் கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது.
அந்நாட்டின் பிரசித்தி பெற்ற பி.பி.சி. நிறுவனம் எடுக்கும், உலகப் புகழ்பெற்ற யு. கே டாப்-டென்னில், இதுவரை எந்தத் தமிழ் படமும் நுழைந்ததில்லை. ஆனால் "சிவாஜி' அதில் எடுத்த எடுப்பிலேயே 7வது இடத்தைப் பிடித்து விட்டாரென்றால் நம்மால் நம்ப முடிகிறதா? ஆனால்... அதுதான் உண்மை.
மலேசியாவில் மட்டும் 60 தியேட்டர்களில் ரிலீஸ். ஆஸ்திரேலியா, ஸ்ரீலங்கா என்று பல நாடுகளிலும் அட்டகாசம் செய்துவரும் "சிவாஜி' அடுத்து ரஷ்யாவிலும், ஜப்பானிலும் வெளியாகிறது. ஜப்பான் ரஜினியின் கோட்டை. அங்கே "சிவாஜி'யின் கொடி நிச்சயம் பறக்கும்.
ஆனால், ரஷ்யர்களுக்கோ இந்தியா என்றால் பாலிவுட்டைத்தான் தெரியும். பாலிவுட்டின் "நடிகர் திலகம்' ராஜ்கபூருக்கு ரஷ்யாவில் ஏராளமான ரசிகர்கள் உண்டு. அவரது படங்கள் அங்கு "ஒஹோ'வென்று ஓடிய காலங்கள் உண்டு.
அதே ரஷ்யர்கள், அதே இந்தியாவில் பாலிவுட்டுக்கு இணையாக இன்னொரு பிரமாண்டமானத் திரையுலகமும் செயல்படுகிறது என்பதையறிந்து ஆச்சரியப்பட்டார்கள். விளைவு, சமீபத்தில் தான் ரஷ்ய அரசுக்கும், நம் ஃபிலிம் சேம்பருக்கும் இடையில் தமிழ்ப் படங்களை ரஷ்யாவில் வெளியிடுவது குறித்து ஒப்பந்தம் ஒன்று போடப்பட்டது.
"நடிகர் திலகம்' சிவாஜியின் "தில்லானா மோகனாம்பாள்' தமிழ்ப் படத்தை மட்டுமே இதுவரை பார்த்துள்ள ரஷ்யர்களின் தேசத்துக்கு செல்லும் சிவாஜி, அவர்களுடனான ஒப்பந்தத்துக்கு உரையெழுதி, அங்கும் தமிழ் சினிமாவுக்கு ஒரு வியாபாரக் கிளையைத் திறந்துவிட்டு வருவார் என்று நம்பலாம்.
"அமிதாப்பை விட, ரஜினி தான் அதிக செல்வாக்குடையவர்' என்பதை உலகுக்கு உணர்த்தியது ஓர் கருத்துக் கணிப்பு. அதில் ரஜினிக்கு அதிக வாக்குகள் விழுந்தது, தென்னிந்தியாவில் கூட இல்லை. "பிக்-பி' என பாலிவுட்காரர்களால், ஒருவித மரியாதையோடு அழைக்கப்படும் அமிதாப், "ஜாம்பவானாக' இருக்கும் வட இந்தியாவில்தான்.
ரஜினி ஏற்கனவே பாலிவுட்டில் எல்லோருக்கும் அறிமுகமானவர்தான். "அந்தாகானூன்' உட்பட பல ஹிந்திப் படங்களில் நடித்தவர். மேலும், ரஜினி நடித்து வெற்றி பெற்ற "பில்லா', "தீ', "போக்கிரிராஜா', "மாவீரன்' உள்ளிட்டப் பல படங்கள் ஹிந்தியில் அமிதாப் நடித்து வெற்றி பெற்றவை. ஆனால், இன்று நிலைமை தலைகீழாகிவிட்டது.
ரஜினி நடித்த சாதனைப் படமான "சந்திரமுகி'யின் ஹிந்தி ரீமேக்கில் நடித்து வருகிறார் அமிதாப். "ரஜினி இந்தியாவுக்கே சூப்பர் ஸ்டார் ஆயிட்டார்லே' என்று ஒரு பேட்டியில் மகிழ்வோடு வரவேற்றிருக்கிறார் ஆமிர்கான்.
சூப்பர் ஸ்டாரின் "சூப்பர்' பாய்ச்சல்
ரஜினியைப் பொறுத்தவரை இந்திய சினிமா, புருவத்தைச் சுருக்கி அவரைத் திரும்பிப் பார்த்தது, "முத்து' திரைப்படம் ஜப்பானில் "டான்சிங் மகாராஜா' என்ற பெயரில் ஒரு வருடத்திற்கும் மேல் ஓடி வசூலைக் குவித்தபோதுதான்.
அங்கே அவருக்கு ரசிகர் மன்றங்கள் முளைத்ததும், ஜப்பானியர்கள் ரஜினியை மகாராஜாவாகக் கொண்டாடுவதையும் கண்டு மூக்கின் மேல் விரல் வைத்தது ஒட்டுமொத்த இந்தியாவும். அன்று இந்தியாவைத் திரும்பிப் பார்க்க வைத்த ரஜினி, இன்று "சந்திரமுகி', "சிவாஜி' படங்களின் மூலம் உலகையே தன் பக்கம் ஈர்த்துள்ளார்.
மயக்கும் தொழில் நுட்பத்தால் ஹாலிவுட் படங்களும், நட்சத்திரங்களின் ஜொலிஜொலிப்பால் பாலிவுட் படங்களும் வசூலைக் குவிக்கின்றன. ஆனால், ஒருசாண் முகத்துக்காக கோடிக்கணக்கானோர் தியேட்டர்களில் திரள்வதும், கோடிகள் குவிவதும் ரஜினி என்ற மந்திர சொல்லுக்கு மட்டும்தான் என்றால் அது மிகையில்லை!
நன்றி - சினிமா எக்ஸ்பிரஸ்