12.2.04

நமது தமிழக அரசியல் போல் ஒரு 'மன்னிக்கும் மனப்பான்மை' கொண்ட அரசியல் நாகரீகம், இந்தியாவிலேயே எந்த மாநிலத்துக்கும் கிடையாது என்று என்னால் உறுதியாய் சொல்ல முடியும். ஒரு தேநீர் விருந்தில் சோனியாவோடு கொஞ்சியபடி, வாஜ்பாய் அமர்ந்திருந்த நாற்காலியின் கால்களைப் பதம் பார்த்த செல்வி.ஜெயலலிதா, இன்று கன்னியாகுமரிக்கு ஓடோடி சென்று அதே வாஜ்பாயிடம், 'நன்னடத்தை' சர்ட்டிபிகெட் வாங்கிப் 'பச்சையாய்' சிரிக்கிறார். தனது நாற்காலியின் மேல் குறி வைத்து, உயிரையும் எடுக்கத் துணிந்த திரு.வை.கோவோடு கலைஞர் 'அண்ணன் தம்பி உறவு' கொண்டாடி, தொல்காப்பியப் பூங்காவைப் பற்றி அளவளாவுகிறார். போன தேர்தலில், 'கோவணத்தையும் உருவிவிடுவார்' என்று நடுநடுங்கிய திரு.ராமதாஸ், இன்று இறுகக்கட்டிய வேட்டியோடு கோபாலபுரத்தில் கூட்டணி நெய்கிறார்.

சரி..கூட்டணி, கொள்கைகளை எல்லாம் விட்டுத் தள்ளுங்கள் - நேற்று வெளியானதொரு அரசியல்வாதியின் பேட்டி லட்சணத்தைக் கொஞ்சம் அலச வேண்டியது அவசியமாகிறது. திரு.ரஜினிகாந்த் எனும் நடிகர் ரசிகர்களின் சாயங்கால சந்தோஷங்களுக்காக...அவ்வப்போது அரசியல் வசனங்களைப் பேசி, திரை வீரராய் ஜொலித்துக் கொண்டிருந்தார். அவரது காட்டில் மழை பெய்த காலம் போய், தானுண்டு தன் வேலையுண்டு என்று ஆன்மீக ரீதியாய் அமைதியாய் இருப்பவரை, இந்த அரசியல்வாதிகள் விடுவதாய் இல்லை போலிருக்கிறது.

என்னதான் சொன்னாலும், திரு.ரஜினிகாந்த் என்பவர், தமிழ்த் திரையுலகின் பல இலக்கணங்களைத் தகர்த்தெறிந்த நடிகர் என்பதிலும், சிறந்த மனிதர் என்பதிலும் பலருக்கு ஐயமிருக்காது. அவரது பாபா படத்திற்குத் தேவையில்லாமல் பிரச்சினைகள் செய்த காலம் போய், திரு.ராமதாஸ் அவர்கள் நேற்று, 'ரஜினிகாந்த் சேற்றில் ஊறும் பன்றி' என்று அருவருக்கத்தக்க வார்த்தைப் பிரயோகங்களை அள்ளி வீசி இருக்கிறார். இதை விட, ஒரு அசிங்கமான வார்த்தைகள் நிரம்பிய வாக்கியம் ...ஒரு நல்ல 'மனிதரைப்' பற்றி யாராலும் பகிரங்கமாய் பேச முடியாது.

எம்.ஜி.ஆர் என்ற நடிகரும், இது போன்ற அசிங்கமான அர்ச்சனைகளால் தான் அரசியலுக்கு இழுத்து அழைத்து வரப்பட்டார். அவரும் உயிருள்ளவரை முதல்வர் பதவியில் இருந்து, 'அரசியல் சாணக்கியர்களுக்கு' சிம்ம சொப்பனமாய்த் திகழ்ந்து வந்தார். அதே போல், திரு.ராமதாஸ் அவர்கள் பூனைக்கு மணி கட்டுவதாய் நினைத்து, புலியின் கழுத்தை தடவிக் கொண்டிருக்கிறார். இந்தப் 'புலி வருது' கதை, ராமதாஸ் அவர்களால் முற்றுப்புள்ளி அடையும் போல் தெரிகிறது.

அட...இன்றைய ஒரு சில அரசியல்வாதிகளின் லட்சணங்களைப் பார்க்கும் போது, இந்த வெள்ளை மனிதர் வந்தால் தவறில்லை தான்! ரஜினிகாந்தோ, விஜய்காந்தோ...யாரோ ஒருவர் வரட்டும். அவர்கள் நல்ல அரசியல்வாதிகளாய் நடித்தால் கூட போதுமய்யா, அரசியல் சாக்கடையின் மேல் வாசனைத் திரவியம் அடித்த சந்தோஷமாவது இருக்கும்.

- அருண் வைத்யநாதன்

Courtesy : http://arunviews.rediffblogs.com

No comments: