10.2.04

சென்னை, பிப்.10- வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியை தோற்கடிக்க ரஜினி ரசிகர்கள் தீர்மானித்துள்ளனர். இதுகுறித்து ரஜினி தலைமை ரசிகர் மன்றத் தலைவர் சத்யநாராயணன் விழுப்புரத்தில் நடந்த ரஜினி ரசிகர்கள் கூட்டத்தில் நேரடியாக உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.


விழுப்புரம் மாவட்ட ரஜினி ரசிகர் மன்றக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இதில், சிறப்புரையாற்றிய சத்யநாராயணன் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார்.


வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வீடு வீடாக சென்று பாமகவுக்கு எதிராக பிரசாரம் செய்யும்படியும் ரஜினி ரசிகர்களுக்கு அவர் கட்டளையிட்டுள்ளார்.


கடந்த வாரம் ரஜினி குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் கடுமையாக சாடியிருந்தார். இதற்கு பதிலடி தரும் வகையில் பாமகவுக்கு எதிராக பிரசாரத்தில் ஈடுபடுமாறு ரசிகர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


ரஜினி குறித்து ராமதாஸ் விமர்சித்தையடுத்து அவரது கொடும்பாவி ஒரு சில இடங்களில் ரஜினி ரசிகர்களால் எரிக்கப்பட்டது. இதில், சில ரசிகர்களும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.


நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெறவுள்ளது. சத்யநாராயணனின் உத்தரவையடுத்து, பாமக போட்டியிடும் புதுவை, திண்டிவனம், சிதம்பரம் ஆகிய நாடாளுமன்றத் தொகுதிகளில் தீவிர எதிர்பிரசாரத்தில் ஈடுபட கடலூர், விழுப்புரம் மாவட்ட ரசிகர்கள் தீர்மானித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் மாவட்டக் கூட்டத்தில் தீர்மானமும் நிறைவேற்றியுள்ளனர்.


ரஜினி ரசிகர்கள் பாமகவுக்கு எதிராக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் நிலையில், அது பாமகவின் தேர்தல் முடிவில் பாதகத்தை ஏற்படுத்தலாம் என்று கருதப்படுகிறது!

Courtesy : Dinamani, dated today

No comments: