29.3.04

சிங்கம் ஒன்று புறப்பட்டதே...

பா.ம.க.,வுக்கு எதிராக ரஜினி பொங்கி எழுந்து விட்டார். லோக்சபா தேர்தலில் அக்கட்சி போட்டியிடும் ஆறு தொகுதிகளிலும் தோற்கடிக்க, தன்னுடைய ரசிகர்களுக்கு பகிரங்க கட்டளை பிறப்பித்து விட்டார். இத்தொகுதிகளில், அ.தி.மு.க., மற்றும் பா.ஜ.,வுக்கு அவர் ஆதரவு தெரிவித்துள்ளார். பா.ம.க.,வின் மீது கடும் ஆத்திரத்தில் உள்ள ரசிகர்கள், ரஜினியின் இந்த முடிவால் உற்சாகம் அடைந்துள்ளனர். பா.ம.க.,வை தோற்கடிக்க முழு வீச்சில் செயல்பட ஆரம்பித்து விட்டனர்.

அரசியலில் ரஜினி இதுவரை நேரடியாக இறங்கவில்லை என்றாலும், தனது "வாய்ஸ்' மூலம் அரசியல் செய்து வருகிறார். கடந்த 1996ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தல் முதல், அவருடைய "அரசியல் வாய்ஸ்' ஒலித்துக் கொண்டிருக்கிறது. அத்தேர்தலில், ஜெயலலிதா ஆட்சிக்கு வரக் கூடாது என்று "வாய்ஸ்' கொடுத்தார். "ஜெ., மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது' என்றார். தி.மு.க., த.மா.கா., கூட்டணியை வெற்றி பெறச் செய்யும்மாறு "டிவி' மூலமும், அறிக்கை மூலமும் வேண்டுகோள் விடுத்தார். அந்த தேர்தலில் அ.தி.மு.க., படுதோல்வி அடைந்தது.

அதன் பின், 1998ம் ஆண்டு கோவையில் தொடர் குண்டுவெடிப்புகள் நடந்த போது தி.மு.க.,வுக்கு ஆதரவாக அவர் கொடுத்த "வாய்ஸ்' எடுபடவில்லை. அதற்கு பிறகு, 1999ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலிலும், 2001ல் நடந்த சட்டசபை தேர்தலிலும் அடக்கி வாசித்து விட்டார். யாருக்கும் ஆதரவு தெரிவிக்கவில்லை.

இந்த லோக்சபா தேர்தலில் அவருடைய "வாய்ஸ்' ஒலித்துள்ளது. "பாபா' பட ரிலிசின் போது பா.ம.க., ராமதாஸ், ரஜினியை தனிப்பட்ட முறையில் கடுமையாக விமர்சித்தார். அப்படம் வெளியான தியேட்டர்களில் பா.ம.க.,வினர் நுழைந்து திரைகளை கிழித்தனர். படச்சுருள் பெட்டிகளை கடத்திச் சென்றனர். பேனர்களை வெட்டி வீழ்த்தினர். அச்சமயம், பா.ம.க.,வுக்கும் ரஜினி ரசிகர்களுக்கும் பல இடங்களில் மோதல் ஏற்பட்டது.

சமீபத்தில், திருவண்ணாமலை மாவட்டத்தில் பேசிய ராமதாஸ், ரஜினியை மிகவும் கீழ்தரமாக விமர்சித்தார். இதனால், ராமதாசுக்கும், ரஜினிக்கும் மீண்டும் மோதல் வலுத்தது. இந்த மோதலால், பா.ம.க., தொண்டர்களால் ரஜினி ரசிகர்கள் பல இடங்களில் தாக்கப்பட்டனர். அப்போதே, லோக்சபா தேர்தலில் பா.ம.க.,வுக்கு எதிராக செயல்பட ரஜினி ரசிகர்கள் முடிவெடுத்து, செயல்பட ஆரம்பித்து விட்டனர். தங்களுக்கு அனுமதி வழங்கும்படி ரஜினியையும் வலியுறுத்தி வந்தனர்.

ரசிகர்களின் கோரிக்கைக்கு தனது ரசிகர் மன்றத் தலைவர் சத்யநாராயணா மூலம், நேற்று பச்சைக்கொடி காட்டினார் ரஜினி. லோக்சபா தேர்தலில் பா.ம.க.,வை தோற்கடிக்க அனுமதி வழங்கியதுடன், இக்கட்சிக்கு எதிராக போட்டியிடும் அ.தி.மு.க., மற்றும் பா.ஜ.,வின் வெற்றிக்கு பாடுபடும்படியும், அக்கட்சிகளுக்கு ஓட்டு போடும்படியும் ரசிகர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரியில் நேற்று நடந்த ரஜினி ரசிகர்கள் மன்றக் கூட்டத்தில் , ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் சத்யநாராயணா இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

ரஜினியின் முழு ஒப்புதலோடு வெளியாகியுள்ள இந்த அறிவிப்பால், அவருடைய ரசிகர்களிடையே உற்சாகம் கரைபுரண்டோடுகிறது. பா.ம.க.,வுக்கு எதிராக வரிந்து கட்டிக் கொண்டு வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டனர்.

தி.மு.க., தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் பா.ம.க., இடம் பெற்றுள்ளது. இக்கூட்டணியில், செங்கல்பட்டு, அரக்கோணம், திண்டிவனம், சிதம்பரம், தர்மபுரி, புதுச்சேரி ஆகிய ஆறு லோக்சபா தொகுதிகளில் பா.ம.க., போட்டியிடுகிறது. அக்கட்சிக்கு எதிராக இத்தொகுதிகளில், அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணி போட்டியிடுகிறது. செங்கல்பட்டு, அரக்கோணம், திண்டிவனம் தொகுதிகளில் அ.தி.மு.க.,வும் சிதம்பரம், தர்மபுரி, புதுச்சேரி தொகுதிகளில் பா.ஜ.,வும் பா.ம.க.,வை எதிர்த்து போட்டியிடுகின்றன.

இந்த ஆறு தொகுதிகளிலும் அ.தி.மு.க., மற்றும் பா.ஜ.,வுக்கு ஆதரவாக ரஜினி ரசிகர்கள் பிரசாரம் செய்ய உள்ளனர். அதோடு, பிரசாரத்தில் சத்யநாராயணாவும் பங்கேற்கிறார். இந்த ஆறு தொகுதிகளைத் தவிர, தமிழகத்தில் உள்ள மற்ற தொகுதிகளில் யாருக்கு ஆதரவு என்பதை ரஜினி இன்னும் முடிவு செய்யவில்லை. இதனால், ரசிகர்களிடையே குழப்பம் நிலவுகிறது. "ரஜினி தற்போது வெளியூர் சென்றுள்ளார். அவர் திரும்பியதும், இது குறித்த முடிவை அவர் எடுப்பார்' என்று சத்யநாராயணா தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் புதுச்சேரியில் நேற்று அளித்த பேட்டி:

*""பா.ம.க., போட்டியிடும் 6 தொகுதிகளிலும் ரஜினிகாந்த் பிரசாரத்தில்

ஈடுபடுவாரா?''

மாட்டார். தேவைப்பட்டால் நான் பிரசாரம் செய்வேன்.

*""பிரசாரத்தில் ஈடுபடாவிட்டாலும் ரஜினி "வாய்ஸ்' கொடுப்பாரா?''

இதை அவரிடம் தான் கேட்க வேண்டும்.

*""பா.ம.க.,வை 6 தொகுதிகளிலும் தோற்கடிப்போம் என்கிறீர்கள். அதற்கான காரணம் என்ன?''

"பாபா' படம் வெளி வந்தபோது ரஜினி ரசிகர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு, மன உளைச்சல், இதை எல்லாம் தாண்டி ரஜினிகாந்த்தை நேரிடையாக கொச்சைப்படுத்தி விமர்சனம் செய்தது தான் காரணம். அதனால், ஜனநாயக முறையில் பா.ம.க.,விற்கு எதிராக அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணிக்கு ரஜினி ரசிகர்கள் ஓட்டு கேட்பார்கள்.

*""ஜெ., ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என்று சொன்ன ரஜினிகாந்த், தற்போது அ.தி.மு.க., விற்கு ஆதரவு தருவது முரண்பாடாக இல்லையா?''

அப்போதைய நிலை வேறு. இப்போதுள்ள நிலை வேறு. இப்போது பா.ம.க.,வினரால் ரசிகர்களின் மனம் புண்பட்டுள்ளது. ரசிகர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு தான் பா.ம.க.,வை தோற்கடிக்க வேண்டும் என்ற முடிவை எடுத்துள்ளோம்.

*""பா.ம.க., வினரை விட , ரஜினியை அ.தி.மு.க.,வினர் அதிகம் திட்டியுள்ளார்களே?''

பா.ம.க.,வை போல் அ.தி.மு.க., தரக்குறைவாக நடந்து கொள்ளவில்லை. ரஜினிகாந்த்தை அ.தி.மு.க.,வினர் நேரடியாக எப்போதும் விமர்சனம் செய்தது கிடையாது.

*""பா.ம.க., போட்டியிடும் 6 தொகுதிகளில் தான் பா.ஜ., அ.தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவாக செயல்படுவோம் என்று கூறியுள்ளீர்கள். தமிழகத்தில் உள்ள மற்ற தொகுதிகளில் உங்களுடைய நிலை என்ன?''

தமிழகத்தில் உள்ள மற்ற தொகுதிகளின் நிலை குறித்து ரசிகர்கள் மத்தியில் குழப்பம் இருக்கிறது. ரஜினிகாந்த் தற்போது வெளியூர் சென்றிருப்பதால் அவர் வந்த பிறகு உரிய நேரத்தில் முடிவு அறிவிக்கப்படும்.

*""தி.மு.க., தலைவர் கருணாநிதி, ரஜினிகாந்துடன் பேசினால் பா.ம.க.,வை எதிர்க்கும் முடிவை மாற்றிக் கொள்வீர்களா?''

அதை ரஜினி தான் முடிவு செய்வார்.

*""பா.ம.க., உயர்மட்ட தலைவர்கள் ரஜினிகாந்திடம் பேசிவிட்டதாக அன்புமணி சொல்லியிருக்கிறாரே?''

அது போல் யாரும் ரஜினியை சந்தித்து பேசவில்லை.

*""ரஜினி காந்த் அரசியலில் வருவதற்கான எதிர்கால திட்டமாகத் தான் தற்போது 6 தொகுதிகளில் பா.ம.க.,வை நேரிடையாக எதிர்க்கிறீர்களா?''

அதற்கும், இதற்கும் சம்பந்தமே இல்லை.

*""பா.ஜ., வினர் உங்களை சந்தித்து ஆதரவு கேட்டார்களா?''

கேட்டார்கள்.

*""இந்த தேர்தலில் ரஜினி ரசிகர்களின் பங்கு எவ்வாறு இருக்கும்?''

பா.ஜ., அ.தி.மு.க., வேட்பாளர்கள் இந்த 6 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்கு கடுமையாக உழைப்பார்கள். மக்கள் முகம் சுளிக்காத வகையில் ஜனநாயக முறையில் தேர்தல் பணியில் ஈடுபடுவார்கள்.

நன்றி - தினமலர்

No comments: