17.3.04

டாக்டர் ராமதாசுக்குப் பத்து கேள்விகள்!

அன்பிற்கும் மரியாதைக்குமுரிய திரு.ராமதாசுக்கு வணக்கங்கள் பல! உங்களது ஆவேசமான பேட்டியையும், ரஜினிக்கான பத்து கேள்விகளையும் படித்தவுடன் இந்தக் கடிதம் எழுதுகிறேன். இந்தக் கடிதத்தை எழுதுவதால், நான் ரஜினி ரசிகன் என்று தவறாய் எடுத்துக் கொள்ள வேண்டாம். ஒரு சராசரி குடிமகன், கொஞ்சம் சமூகத்தின் மீது அக்கறை உள்ள பார்வையாளன் என்று வைத்துக் கொள்ளுங்கள். உங்களின் 'கனிவான' பார்வைக்கு, நான் ஒரு பத்து கேள்விகளை வைக்கிறேன்.

(1) தற்போது நடிகர்களையும், திரையுலகையும் கண்ட மேனிக்கு விமர்சிக்கும் தாங்கள்..சில வருடங்களுக்கு முன்பு மன்சூர் அலிகான் என்ற 'ஒழுக்கமான' நடிகரை உங்கள் கட்சியில் சேர்த்துக் கொண்டது ஞாபகம் இருக்கிறதா? அப்போது திரையுலகம் நல்ல முறையில் செயல்பட்டுக் கொண்டிருந்ததா அல்லது திரு.மன்சூர் அலிகான் சிறந்த மனிதர் என்ற முறையில் சேர்த்துக் கொள்ளப்பட்டாரா?

(2) திருவாளர். வீரப்பன் தமிழர் என்பதால், அவரை கன்னடரான
திரு.ரஜினிகாந்த் விமர்சிக்கக்கூடாது என்று சொல்லி இருக்கிறீர்கள்?
அப்படியென்றால்...'தாவூத் இப்ராகிம்' என்ற இந்தி பேசும் கொள்ளைக்காரன்,
லல்லு பிரசாத் யாதவ் என்ற பீகாரி ஆகியவர்களை விமர்சிக்கும் தகுதி
'மரத்தமிழனுக்கு' கிடையாதா?

(3) 'நான் நினைத்தால் தமிழகத்தில் ஒரு பத்திரிக்கை கூட வரமுடியாது!
காடுவெட்டி குருவுக்கு ஒரு 'சிக்னல்' கொடுத்தால் போதும்' என்றெல்லாம் பேசுவது,
ஒரு பொறுப்பான தலைவருக்கு அழகாகுமா? காடுவெட்டி குரு என்ற கட்சிக்காரரை,
நீங்களே வன்முறைக்கு தகுந்தவர் என்று அடையாளம் காட்டி அழகுபடுத்துவது
பொறுப்பான தலைமையாகுமா?

(4) பாட்டாளி மக்கள் கட்சிக்கும், உங்களுக்கும் 'பதவிகளில்' ஆசை இல்லாதது
போலவும், கொள்கை தான் முக்கியம் என்பது போலவும் சில சமயங்களில்
பேசுகிறீர்கள். ஆனால், 'ஜெயலலிதாவோடு உறவு வைத்துக் கொள்வது....'
என்று ஆரம்பித்து, பச்சை பச்சையாய் நீங்கள் பேசிய அசிங்கங்களை மறந்து,
'சகோதரி பார்த்துக் கொள்வார்' என்று ஒரு 'அந்தர் பல்டி' அடித்தீர்கள்.
'கருணாநிதியோடு இருந்தால் கோவணத்தையும் உருவி விடுவார்' என்று சொல்லி
விட்டு, இப்போது அவரோடு கை கோர்த்து இருக்கிறீர்கள். (ஜெவுக்கும்,
கலைஞருக்கும் 'வெட்கம்' இல்லை என்பது வேறு விஷயம்). உங்கள் கட்சியின்
கொள்கையில், 'வெற்றிக்காக தாவலாம்.. தவறில்லை!' என்று
பொறிக்கப்பட்டிருக்கிறதா?

(5) 'ஜாதி மத பேதங்கள் கூடாது!' என்று மிக சமீபத்தில் பேசி
இருக்கிறீர்கள். ஆனால், தங்களது பாட்டாளி மக்கள் கட்சியே..'வன்னியர்'
சங்கத்திலிருந்து உதித்தது என்பதும், 'வன்னியர் ஓட்டு அன்னியருக்கில்லை!'
என்பதை தேர்தல் சமயங்களில் கோஷங்களாக சொல்லப்பட்டதும், தாங்கள்
சாதிகளைக் கடந்து வந்து நிற்கும் ஒப்பற்ற தலைவராக காண்பிக்கவில்லையே?

(6) 'ஊழல் புரிந்தார்கள் என்று தெரிந்தால் சவுக்கால் அடிப்பேன்!' என்று
மேடைகளில், சவுக்கை கட்டி தொங்க விட்டு பிரச்சாரம் செய்தீர்கள்.. தவறு
செய்தவர்களை 'சவுக்கால்' அடிப்பது கட்சிக்குள் ஜனநாயகம் வளர்க்க நினைக்கும்
செயலா அல்லது தாங்கள் சர்வாதிகாரத்தின் மேல் நம்பிக்கை உள்ளவர் என்பதன்
பறைசாற்றுதலா? இப்போது கூட, பெட்ரோல் பங்க் ஊழல் என்று சகல
பத்திரிக்கைகளிலும் பாமகவின் பெயர் கொட்டை எழுத்துகளில் இடம் பெற்றும்...
அது சம்பந்தமாக எந்த ஒரு அறிக்கையும் ஆதாரத்தோடு உங்கள் தரப்பிலிருந்து
தரப்படவில்லையே? இல்லை... 'ஊழல் உண்மைதான்' என்று உணர்ந்து, உங்கள்
மந்திரிகளை சவுக்கால் அடித்து விட்டீர்களா?

(7) 'ஒரு காலத்தில் மரம் வெட்டினோம். ஆனால் அதற்கப்புறம் 'பசுமைத்
தாயகத்தின்' மூலம் எத்தனை கன்றுகளை நட்டிருக்கிறோம். அதை ஏன்
பத்திரிக்கைகளில் எழுதுவதில்லை?' என்று கேட்கிறீர்கள்? அப்படிப்பார்த்தால்...
ரஜினி புகை பிடிக்கிறார், குடிக்கிறார்...ஆனால், அவர் எவ்வளவோ நல்ல
விஷயங்களை படங்களில் போதிக்கிறார், அதை ஏன் நீங்கள் பார்ப்பதில்லை?
'வீட்டைக் கவனி' என்று யார் வேண்டுமானாலும் சொல்லலாம், அதற்கு சூப்பர்ஸ்டார் தேவையில்லை!' என்று சொல்லி இருக்கிறீர்கள்...யார் வேண்டுமானாலும் சொல்லலாம், ஆனால் சூப்பர்ஸ்டார் சொன்னால் கேட்பதற்கு ஒரு பெரிய கூட்டமே இருக்கிறதே?

(8) 'பாபா பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டேன். நமக்கு நிறைய
வேலை இருக்கிறது!' என்று சொல்லி இருக்கிறீர்கள். ரஜினியால் சமூகமே
சீரழிந்து கொண்டிருக்கிறது என்று 'லபோ திபோ' வென அடித்துக் கொண்டு விட்டு,
வீர வசனங்கள் பேசி விட்டு... 'இன்றோடு அந்தப் பிரச்சினை முடிந்து விட்டது,
விட்டுவிடுங்கள்!' என்று சொன்னால்..சமூகம் திருந்தி விட்டதா? அல்லது,
ரஜினிகாந்த் இனி புகைப்பதில்லை என்று உங்களிடம் வாக்கு கொடுத்திருக்கிறாரா?
இல்லை.. உங்களுக்கு கிடைக்க வேண்டிய விளம்பரம் கிடைத்துவிட்டது என்ற
திருப்தியின் வெளிப்பாடா?

(9) ' நான் ஏன் தமிழகத்தை பிரிக்க வேண்டும் என்று புரிந்து கொள்ளாமல்,
பிரிவினைவாதம் பேசுகிறேன் என்று சொல்வது மடத்தனம். என்னோடு மேடையில்
யாராவது விவாதிக்க தயாரா?'என்று கேட்கிறீர்கள். நீங்கள் ஏன் அது குறித்த
விவாதங்களை பத்திரிக்கைகளில் பத்து கேள்விகளாக வைக்க கூடாது? மூன்று
நாளில் முற்றுப்புள்ளி பெறும் சமாச்சாரங்களை எல்லாம் பத்து கேள்விகளாய்
வைக்கும் நீங்கள், ஏன் ஒரு நல்ல விவாதத்துக்கு உங்கள் நேரத்தை
செலவிடக்கூடாது? (எங்கள் நேரத்தையும்..)


(10) கடைசியாக, 'ரஜினிகாந்தே நான் அறிக்கை விட்ட மறுநிமிடம்
சமாதானக் கொடி காண்பித்துவிட்டார்...நீ யாரடா பொடியன்?' என்று யாருக்கும்
'சிக்னல்' கொடுத்து விட மாட்டீர்களே? ரஜினிகாந்துக்கும் ராமதாசுக்கும் அடுத்த
வேலைகள் நிறைய இருக்கிறது..ஆனால், அவர்களைப் பின்பற்றும் ரசிகர்களும்,
தொண்டர்களும் ஜென்மத்துக்கும் அடித்துக்கொள்ளப் போகிறார்களே, அந்தக்
கவலையில் தான் கேள்விகள் கேட்டேன். சத்தியமாய்..எனக்கும் நிறைய
வேலை இருக்கிறது!


டாக்டர். ராமதாஸ் திரு.ரஜினிகாந்திற்குப் பத்துக் கேள்விகள் ஆனந்த விகடன் மூலம் கேட்டிருந்த போது, எழுதிய கட்டுரை இது. பாபா படப்பெட்டிகள் சூறையாடப்பட்டு, களேபரங்கள் நடந்து கொண்டிருந்த காலம். இப்போது 'ரஜினி ஒரு நல்ல நடிகர்,அவருக்கும் எங்களுக்கும் பிரச்சினை இல்லை' என்று டாக்டர் அந்தர் பல்டி அடித்துக் கொண்டிருக்கிறார். ரஜினியும் எப்போதும் போல மிஸ்டர்.கழுகாரின் உளவிலும், சுவாமி.வம்பானந்தாவின் கனவிலும்
காய்களை நகர்த்தியபடியே இருக்கிறார். ரசிகர்களும், தொண்டர்களும் அவ்வப்போது கோதாவில் இறங்க, அப்பாவி பொதுஜனம் அத்தனையும் பார்த்தபடி இருக்கிறது

நன்றி - அருண் வைத்யநாதன்

No comments: