ஈரோடு: நதிகள் ஒருங்கிணைப்பு, வறட்சியை போக்குதல் போன்ற கோரிக்கைகளை முன் வைத்து "தண்ணீர்' என்ற பெயரில் பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்க திட்டமிட்டுள்ள தமிழக விவசாயிகள் கூட்டமைப்பினர், ரஜினியையே வேட்பாளராக நிறுத்த முயற்சி மேற்கொண்டுள்ளன.
தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக பருவ மழை தொடர்ந்து பொய்த்து வருவது, அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையின்மை காரணமாக நீர் வரத்து கிடைக்காமை, கர்நாடக அரசின் காவிரி நீர் புறக்கணிப்பு போன்றவை, தமிழக விவசாயத்தை பெரிதும் பாதித்து வருகிறது.
உணவு தானிய உற்பத்தியில் சிறந்து விளங்கிய காவிரி டெல்டா பாசனப் பகுதிகளும், பவானிசாகர் அணை சார்ந்த பாசனப் பகுதிகளும் தொடர்ந்து வறட்சிக்கு இலக்காகி விட்டன. குறிப்பாக, ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம் மாவட்டங்களில் பாசன விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டிருப்பது உண்மை.
விளைப் பொருட்களுக்கு விலை நிர்ணயம், நிலவரி ரத்து, பயிர்க் கடன் நிலுவை தள்ளுபடி, இலவச மின்சாரம் நீடிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை மட்டுமே விடுத்து போராட்டம் நடத்தி வந்த தமிழக விவசாய சங்கம், தற்போது பாசன நீர் வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முழு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை பிரதானமாகக் கொண்டு போராட்ட களத்தில் குதித்துள்ளனர்.
போராட்டங்கள் நடத்தினாலும், தங்களுக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை என உணர்ந்த விவசாய சங்கங்கள், வரும் லோக்சபா தேர்தலில் எந்த கட்சியையும் ஆதரிக்காமல், தங்களுக்கென தண்ணீர் வேட்பாளர் ஒருவரை நிறுத்த முடிவு செய்தன. இதன் மூலம் தங்களுக்காக குரல் கொடுக்கவும், தங்களின் பிரச்னையை அரசின் கவனத்துக்கு சரியாக கொண்டு செல்லவும், உரிமைகளை முறையாக பெறவும் முடியும் என அவை நம்புகின்றன. தமிழக அளவிலான விவசாய சங்கங்கள் ஒரு கூட்டமைப்பின் கீழ் கொண்டு வரப்பட்டு, தற்போது பல்வேறு கட்ட ஆலோசனைகளும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
தண்ணீர் வேட்பாளர் பொதுவானவர், கட்சி சார்பற்றவர், அவருக்கு விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் மற்றும் மக்களின் ஆதரவு கண்டிப்பாக கிடைக்கும் என ஒரு தீர்மானத்துக்கு வந்துள்ள விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு, தற்போது தண்ணீர் வேட்பாளருக்கு ஆதரவு கோரி நடிகர் ரஜினியுடன் பேச முடிவு செய்துள்ளனர். அதற்கான முயற்சி தீவிரமடைந்துள்ளது.
ரஜினியின் ஆன்மிக குரு மறைந்த சச்சிதானந்தரின், சிஷ்யர் ஒருவர் மூலமாக, ரஜினியின் ஆதரவுக்காக தற்போது பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. ரஜினி, "தேசிய நதிகள் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும்' என வலியுறுத்தி வருகிறார். அத்திட்டத்தை செயல்படுத்த ஒரு கோடி ரூபாயை தனது பங்குத் தொகையாக அளிப்பதாகவும் அறிவித்துள்ளார்.
இதனால், விவசாயிகளின் பிரச்னை உணர்ந்து, விவசாய நலன் கருதி நதிகள் இணைப்பு திட்டத்தை துரிதப்படுத்தும் தண்ணீர் வேட்பாளருக்கு, ரஜினி ஆதரவு தெரிவிக்க வேண்டும் என விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு கோரியுள்ளது.
ரஜினியுடன் விரைவில் நடக்க இருக்கும் பேச்சுவார்த்தையின் போது, "தண்ணீர் வேட்பாளராக ரஜினியே போட்டியிட வேண்டும் அல்லது அவரது ஆதரவாளர் ஒருவர் போட்டியிட வேண்டும் அல்லது விவசாய சங்கங்களில் கூட்டமைப்பு சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்கப்பட உள்ளதாக, தமிழக விவசாய சங்கங்களில் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
வேலுõர்: அரக்கோணம் லோக்சபா தொகுதியில் பா.ம.க.,வை தோற்கடிக்க ரஜினி ரசிகர்கள் ரகசிய கூட்டங்கள் நடத்தி வருவதால், அ.தி.மு.க.,வினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், நடிகர் ரஜினியை தகாத வார்த்தைகளால் விமர்சனம் செய்ததை தொடர்ந்து பா.ம.க.,வினர் மீது ரஜினி ரசிகர்கள் கடும் ஆத்திரத்தில் உள்ளனர். இதனால், வரும் லோக்சபா தேர்தலில் ஆறு தொகுதிகளில் போட்டியிடும் பா.ம.க., வேட்பாளர்களை தோற்கடித்தே தீருவோம் என்று மாநிலம் முழுவதும் ரஜினி ரசிகர்கள் அறிவித்துள்ளனர். இதன்படி, பா.ம.க., போட்டியிடும் தொகுதிகளில் ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் ரகசிய கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ரஜினிகாந்த் ரசிகர் மன்றத் தலைவர் சத்தியநாராயணா கடந்த சில நாட்களாக வேலுõர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். குறிப்பாக அரக்கோணம் தொகுதிக்குட்பட்ட சோளிங்கர் பகுதியில் ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் சத்யநாராயணா ரகசிய ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில், அரக்கோணம் தொகுதியில் போட்டியிடும் பா.ம.க., வேட்பாளர் வேலுவை தோற்கடிக்க மேற்கொள்ள வேண்டிய யுக்திகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
இந்நிலையில், பா.ம.க.,வை தோற்கடிக்க அணி திரளும் ரஜினி ரசிகர்களால் ஓட்டுகள் சிதறுவது உறுதி என்று கூட்டணி கட்சியான தி.மு.க., அச்சம் தெரிவித்துள்ளது. இதனால், அ.தி.மு.க.,வினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
"பா.ம.க.,வை வீழ்த்த ரஜினி ரசிகர் மன்றங்களே போதும்' என்பதால் அவர்கள் மீது எந்த விதமான நடவடிக்கைகளும் எடுக்காமல், அவர்களுக்கு ஆதரவாக செயல்படும்படி போலீசாருக்கு ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அரக்கோணம் தொகுதியில் பா.ம.க.,வை வீழ்த்த அ.தி.மு.க.,வினரை விட ரஜினி ரசிகர்களே தீவிரமாக களத்தில் இறங்கி பணியாற்றி வருவது பா.ம.க., தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது அ.தி.மு.க.,வினருக்கு எதிர்பாராத "போனஸ்' என்பதால் அதிக உற்சாகமடைந்துள்ளனர்.
Couresy : Dinamalar
No comments:
Post a Comment