4.3.04

பார்லிமென்ட் தேர்தலில் எந்த கட்சிக்கு ஆதரவு ?

நாகர்கோவில்: பார்லிமென்ட் தேர்தலில் எந்த கட்சிக்கு ஆதரவு அளிப்பது என்பது தொடர்பாக உரிய நேரத்தில் தலைவர் ரஜினி முடிவை அறிவிப்பார் என எதிர்பார்ப்பதாக நாகர்கோவிலில் அகில இந்திய ரஜினிகாந்த் நற்பணி மன்ற தலைவர் சத்தியநாராயணன் கூறினார்.
வரும் தேர்தலில் எந்த கட்சிக்கு ஆதரவு அளிப்பது என்பது தொடர்பாக ரஜினி "வாய்சை' ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில், பல்வேறு மாவட்டங்களில் ரஜினி மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களிடையே ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அகில இந்திய ரஜினிகாந்த் நற்பணி மன்ற தலைவர் சத்தியநாராயணன் இந்த ஆலோசனையை நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று கன்னியாகுமரி மாவட்டத்திற்கு அவர் வர முடிவு செய்திருந்ததால் ரஜினி ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

சென்னையில் இருந்து ரயில் மூலம் நேற்று காலையில் நாகர்கோவிலுக்கு அகில இந்திய ரஜினிகாந்த் நற்பணி மன்ற தலைவர் சத்தியநாராயணன் வந்தார். நாகர்கோவில் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தி.மு.க.,வை விமர்சித்து ரஜினி ரசிகர்கள் பெயரில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள் குறித்து விசாரணை நடத்தினார். ஏற்கனவே இந்த செய்தி சென்னைக்கு கிடைத்ததால் தலைவர் ரஜினி இதுகுறித்து விசாரிக்கும்படி உத்தரவிட்டதாக அவர் கூறினார். எதற்கும் அவசரப்பட வேண்டாம். தற்போதைய சூழ்நிலையில் அவசரப்பட்டால் பல்வேறு பிரச்னைகள் உண்டாகும் என்பதால் ரசிகர்கள் அமைதியாக இருக்கும்படி அவர் கேட்டுக் கொண்டார். ரசிகர்களின் உணர்வுகள் அனைத்தும் தலைவரிடம் தெரிவிக்கப்படும். நேரம் வரும் போது உரிய அறிவிப்புகள் வெளிவரும் எனவும் சத்தியநாராயணன் தெரிவித்தார்.

பின்னர் துவரங்காட்டில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள ஆஸ்பத்திரியை திறந்து வைக்க செல்வதற்காக நாகர்கோவிலில் இருந்து புறப்பட முயன்றார். ஆனால் நிர்வாகிகள், ரசிகர்கள் ஆர்வத்துடன் சத்தியநாராயணனை முற்றுகையிட்டு பல்வேறு விபரங்களை கேட்ட வண்ணம் இருந்தனர். பலர் அவருடன் இணைந்து போட்டோக்களையும் எடுத்துக் கொண்டனர்.

பின்னர் நிருபர்களிடம் அவர் பேசியதாவது:

ஒவ்வொரு மாவட்டத்திலும் ரஜினி ரசிகர்களின் நற்பணிகளை தீவிரமாக செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறேன். ரசிகர்கள் பொதுமக்களுக்காக பல்வேறு நற்பணிகளை செய்து வருவது பாராட்டத்தக்கது. வரும் பார்லிமென்ட் தேர்தலில் ரஜினி ரசிகர்கள் என்ன முடிவை மேற்கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த தகவல்களினால் ஏதாவது பிரச்னையும், பாதிப்பும் ஏற்பட்டு விடக் கூடாது என நாங்கள் நினைக்கிறோம்.

ஏனெனில் அனைத்து கட்சிகளிலும் ரஜினி ரசிகர்கள் காணப்படுகின்றனர். உரிய நேரத்தில் தலைவர் முடிவை அறிவிப்பார் என உங்களை போல நானும் எதிர்பார்க்கிறேன். என்ன முடிவை எடுப்பார் என்று அவருக்கு மட்டும் தான் தெரியும். பார்லிமென்ட் தேர்தலில் ஆதரவு அளிக்க தலைவரிடம் ஆதரவு கேட்போம் என பா.ஜ., கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை எந்த கட்சிகளும் அவரிடம் ஆதரவு கேட்டதாக எனக்கு தெரியவில்லை.

தலைவரும், விஜயகாந்தும் தனியாக சந்தித்து பேசியது உண்மை தான். விஜயகாந்த் தனி கட்சி ஆரம்பிக்கப் போவதாகவும், அதற்கு தலைவரின் ஆதரவு கேட்டதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. என்ன பேசினர் என்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும். சென்னையில் ரஜினி ரசிகர்கள் மாநாடு நடத்தும் திட்டம் எதுவும் இல்லை. தலைவரை பா.ம.க., விமர்சித்ததை தொடர்ந்து இதற்கு கண்டனம் தெரிவித்து ஒவ்வொரு மாவட்டத்திலும் மன்ற நிர்வாகிகள் தீர்மானங்களை நிறைவேற்றி தலைமைக்கு அனுப்பியுள்ளனர்.

தலைவர் புதிய படத்தில் நடிப்பது தொடர்பாக தீவிரமாக ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. விரைவில் புதிய படம் தொடர்பான அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Courtesy : Dinamalar dated today.

No comments: