15.3.04

ஐயாவும் ரஜினியும் - ஆனந்தத்தில் அம்மா!!

ஐயாவும் ரஜினியும் - ஆனந்தத்தில் அம்மா!! - மீனா

தமிழகத்தில் எம்.ஜி.யாருக்கு அடுத்தபடியாக மக்கள் செல்வாக்கு கண்மூடித்தனமாக இருக்கும் ஆள் யாரென்று பார்த்தால் அது ரஜினி தான் என்று குட்டிக் குழந்தை கூடச் சொல்லும். அந்த அளவிற்கு ஆறு முதல் அறுபது வரை(ஏன் எண்பது வரை கூட) அனைத்து தரப்பு மக்களையும் தன் விஷ¤க் விஷ¤க் ஸ்டைலால் கவர்ந்தவர் சூப்பர் ஸ்டார். என்ன எம்.ஜி.யார் எல்லா விஷயங்களிலும் தேங்காய் உடைத்தமாதிரி நறுக்கென்று முடிவெடுப்பார். ரஜினியோ வழ வழா கொழ கொழா..

தமிழ் நாட்டில் அ.தி.மு.க எதிர்ப்பு அலை வீசிய காலத்தில், கலைஞர் - மூப்பனார் கூட்டணிக்கு ஆதரவாக பேசி, அவர்களுக்கு அமோக வெற்றி தேடிக் கொடுத்தது அவரது வாய்ஸ். ஆனால் அடுத்த தேர்தலில் அது எடுபடவில்லை. சூப்பர் ஸ்டார் அத்தோடு மெளன சாமியாரானார். பாபா பட விவகாரங்க ளில் கூட வாயைத் திறக்கவில்லை. அதனாலேயே பா.ம.க தலைவர் டாக்டர் ஐய்யாவும் ரஜினியை கண்டபடி திட்டித் தீர்த்தார் (திட்டிக் கொண்டே இருக்கிறார்). பொருத்தது போதும்.. பொங்கியெழு மனோகரா ஸ்டைலில் கடைசியாக பா.ம.கவிற்கு எதிராக தன் ரசிகப் பெருமக்களை பிரச்சாரம் செய்யச் சொல்லி ரஜினி உத்திரவிட்டிருக்கிறார் என்று பிரபல வார இதழ் வெளியிட்டு இருக்கிறது. இது நிஜமா?? உண்மையாகவே அவர் இப்படிச் சொன்னாரா என்பது நிச்சயமாக யாருக்கும் தெரியாது. காரணம் என்னவென்றால் 2 நாட்களுக்கு முன்பு கூட பெங்களூர் போவதற்கு முன்பாக பத்திரிக்கையாளர்கள் அவரிடம் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் "தெரியாது.. தெரியாது" என்று அவரது அரசியல் நிலைப்பாடு பற்றி அனைவருக்கும் தெரிந்த பதிலையே கூறியுள்ளார் சூப்பர் ஸ்டார்.

இந்த எதிர்ப்பு பிரச்சாரம் மகத்தான வெற்றி பெற்றால் - பா.ம.க இருந்த இடம் இல்லாமல் ஆகிவிடும். குதிக்கும் குட்டிக் குரங்குகளைப் போல ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு கட்சியுடன் கூட்டு வைக்கும் அவர்களை தங்களுடன் சேர்த்து வெற்றி வாய்ப்பை கோட்டை விட்டார் தலைவர் என்று தி.மு.க வில் உள்நாட்டுக் கலகங்கள் தோன்ற ஆரம்பிக்கும். அரசியல் கனவில் அடிக்கடி மிதக்கும் விஜயகாந்த் புதுக் கட்சி ஆரம்பிப்பார். தி.மு.கவின் முன்னாள் அனுதாபி ஒருவரே அந்தக் கூட்டணியின் வீழ்ச்சிக்கு சங்கு ஊதுவதைப் பார்த்த சந்தோஷத்தில் முதல்வர் மிதப்பார்.

ஒருவேளை இந்தப் பிரச்சாரம் தோற்றால் - ரஜினியின் பாடு மேலும் திண்டாட்டம் தான். பாபா தோல்விக்குப் பிறகு அடுத்த படம் பண்ணவே வருஷக் கணக்கில் தயங்கும் அவர், இதற்கு மேல் ஊரிலேயே இருக்க மாட்டார். கட்சி ஆரம்பிக்கலாமா வேண்டாமா என்று யோசித்து, அப்போ அப்போ தன் பவரைக் காட்டும் விஜயகாந்த் தான் உண்டு, படப்பிடிப்பு உண்டு, தன் காலேஜ் உண்டு, தன் பஞ்சாயத்து என்று சாதுப் பிள்ளையாக மாறிவிடுவார். ஏற்கனவே சினிமாக்காரர்களைக் கண்டபடி திட்டித் தீர்க்கும் டாக்டர் ஐயா பூஸ்ட் குடித்த ரேன்ஜிற்கு ரஜினியையும், இன்ன பிற கலைஞர்களையும் உண்டு இல்லை என்று ஒரு வழி பண்ணுவார். ரஜினி இனி டோட்டலாக காலி என்ற சந்தோஷத்தில் அப்போதும் முதல்வர் மிதப்பார்.

ஆக ரஜினி அரசியலுக்கு வந்தாலும் வராவிட்டாலும் ஆனந்தப்படும் ஒரே நபர் - அம்மா தான்!!

நன்றி : தமிழோவியம்

No comments: