5.4.04

ஏமாத்திப்புட்டீகளே அய்யா... கலைஞர் அய்யா!

மதுரையில் டாக்டர் ராமதாஸ¥க்கு எதிராக நடைபெற்ற வன்முறையை (?) கண்டித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் செய்ய போகிறதாம் திமுக தலைமையிலான ஜனநாயக முன்னேற்ற கூட்டணிக்கட்சிகள். கருப்புக்கொடி காட்டியவர்கள் ரஜினி ரசிகர்களே இல்லையாம்! ஆளுங்கட்சி அரேன்ஜ் பண்ணியவர்களாம். டாக்டரின் கண்டுபிடிப்பு இது! ரஜினி ரசிகர்களை விட கணிசமான ஜாதி ஓட்டுகளை கைவசம் வைத்திருக்கும் பாமகதான் முக்கியம் என்று முடிவெடுத்துவிட்டார் தென்னிந்தியாவின் மூத்த அரசியல்வாதியும் அரசியலில் பழம் தின்னு கொட்டை போட்டவருமான கருணாநிதி.... ஸாரி கலைஞர்!

பாபா படம் வெளியான போது நடந்த பிரச்சினைகளின் போது திமுகவுடன் பாமக நெருக்கம் காட்டாத பட்சத்திலும் கலைஞரால் வாய் திறக்க முடியவில்லை. பாஜகவை வெறுப்பேத்த பாபாஜியின் ஆயிரம் வருஷத்து பிறப்பை கிண்டலடித்தார்... அவலை நினைத்து உரலை இடிக்கிற மாதிரி! குறைந்த பட்சம் இரு தரப்புக்கும் மீடியேட்டராக செயல்படக்கூட கலைஞருக்கு நேரமுமில்லை மனசுமில்லை!

கூட்டணியில் பாமக இணைந்ததும் விழுப்புரத்தில் ரஜினி பற்றி ராமதாஸ் உதிர்த்த முத்துக்களை கண்டிக்க மனசில்லை. கூட்டணியை விட்டு கோவிச்சுக்கிட்டு போய்ட்டா என்னாவறது என்கிற நியாயமான கவலை அவருக்கு.

பாண்டிச்சேரி கூட்டத்தில் ரஜினி ரசிகர்கள் வெளிப்படையான எதிர்ப்பு நிலை எடுத்த பிறகாவது இரு தரப்பையும் தொடர்பு கொண்டிருக்கலாம் கலைஞர். அதனால் தனக்கு பாதிப்பு வராது என்று நினைத்தாரோ என்னவோ?!

குறைந்த பட்சம் மதுரையில் ரசிகர்கள் தாக்கப்பட்டபோதாவது ப.சிதம்பரம் மாதிரி வழ வழ கொழ கொழ பாணியில் ஒரு அறிக்கை கொடுத்து (அது கலைஞருக்கு அல்வா சாப்பிடற மாதிரி!) வெள்ளைக்கொடி அசைத்து விஷயத்தை சிக்கலாக்காமல் இருந்திருக்கலாம். கூட்டணிக் கட்சிகளை மெனக்கெட்டு கூட்டி தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுக்க தீர்மானம் போட்டு ரஜினி ரசிகர்களின் உணர்வுகளை அசிங்கப்படுத்தி ஜாதி அரசியலுக்கு ஒட்டு போட்டிருக்கிறார் கலைஞர். ஜாதீயத்தோடு கூட்டணி போட்டு 2001ல் கலைஞர் பட்ட பாட்டை மக்கள் மறந்திருக்கமாட்டார்கள்.

எது எப்படியோ,

நீலச் சாயம் வெளுத்துப் போச்சு...டும், டும், டும்!
ராசா வேஷம் கலைஞ்சுப் போச்சு...டும், டும், டும்!
நரி காட்டை விட்டே ஓடிப் போச்சு...டும், டும், டும்!

மக்கள் சொல்வார்கள்...நிச்சயமாக!

- ஜெ. ரஜினி ராம்கி

No comments: