12.4.04

ரியாக்ஷன் ரவுண்ட் அப்

உச்சி வெய்யில் மண்டையை பொளந்து கட்டிக்கிட்டிருந்த நேரத்தில் பிரஸ் மீட் முடிஞ்சதும் நமக்கு அந்த விபரீதமான யோசனை ஸ்ட்ரைக்கானது. ரஜினியின் ஸ்டேட்மெண்ட்டுக்கு ரியாக்ஷன் எப்படியிருக்கும்? ஒரு ரவுண்ட் போய் பார்த்துட்டு வந்தா என்னா? சோ, ஒரு ஜாலி கற்பனை ரவுண்ட் அப்! (அப்ப நிஜமாவே போய் பார்க்கலியான்னு கேட்குறவங்களுக்கு.... என்னை ஒழிச்சுக்கட்டணும்னு முடிவே பண்ணிட்டீங்களா?!)

மொதல்ல நேரா லாயிட்ஸ் ரோடு அதிமுக ஆபிஸ். எதோ இழவு வூட்டுக்கு வந்த மாதிரி கப்சிப். ரஜினி அறிக்கை பத்தி என்ன நினைக்கிறீங்கன்னு கேட்டதும் மிரண்டு போய் ஓடப் பார்த்தாங்க. அவங்க தர்மசங்கடத்தை புரிஞ்சுகிட்டு நேரா வண்டியை போயஸ் கார்டன் ஜெயா டிவி ஆபிஸ் பக்கம் விட்டோம். மதுரை தாக்குதல் சம்பவத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்த காவல்துறைக்கும் தமிழக அரசுக்கும் ரஜினி தெரிவித்த நன்றியை மட்டும் எடிட் செய்து கொண்டிருந்தார்கள். என்னது...மத்த விஷயத்தையெல்லாம் வுட்டுட்டு ரஜினி சர்ட்டிபிகேட் கொடுத்ததை மட்டும் எடுத்துட்டிருக்கிங்களே.. அம்மாவுக்கு தெரிஞ்சா ருத்ரதாண்டவம் ஆடமாட்டாங்களான்னு எடுத்து வுட்டதும் கலவரமாகிப் போனவங்களை கண்டுக்காம நேரா அறிவாலாயம்!

உள்ளே நுழையும்போதே எதிர்பார்த்த மேட்டருதானேன்னு கரைவேஷ்டிங்க பேசிட்டிருந்தபோதே ரீயாக்ஷன் தெரிஞ்சு போச்சு. நடுராத்திரியில் போலீஸ் கதவை உடைச்சு அவசர அவசரமா கலைஞரை அழைச்சுட்டு போனதுக்கே அவ்வளவா ரீயாக்ஷன் காட்டாத ஆளுங்களாச்சே! அறிவாலயத்தை தாண்டி அப்படியே சன் டிவி ஸ்டுடியோவில் நுழைஞ்சா....முதல்நாள் சேலத்து மீட்டிங்கில் நதிநீர் இணைப்பு பத்தி பேசினதை காலைல எட்டு மணி நியூஸில் கவர் பண்ணாம போயிட்டோமேன்னு நொந்து நுடூல்ஸாய் நின்னுட்டிருந்தவங்களை ஒருத்தர் தேற்றிக் கொண்டிருந்தார். பரவாயில்லை.. இப்ப ஒண்ணும் கெட்டுப் போயிடலை. நதிநீர் பத்தி கலைஞர் பேசின கிளிப்பிங்ஸை போடுங்கப்பான்னு அட்வைஸ¥ம் கொடுத்தார். அப்ப இன்னும் ஒரு மாசத்துக்கு ரஜினி நடிச்ச படம் போடமாட்டீங்களான்னு கேட்க நினைச்சோம்! கூடவே வந்த நண்பர்தான் சன் டிவி வேற; சன் டிவியில் வரும் நியூஸ் வேறன்னு சொல்லி வயித்துல பெப்சி வார்த்தார்!

அங்கேயிருந்து நேரா கமலாலயம், காவி கோஷ்டிகள் மத்தியில் சந்தோஷம் இருந்தாலும் அதிகமாக வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. உள்ளே நுழைந்ததும் அம்மா ஆட்களான்னு சந்தேகமா கேட்டாங்க. இல்லேன்னு சொன்னதும்தான் நிம்மதியா முகத்திலே சிரிப்பே வந்துச்சு. நமக்கும் பழைய ஞாபகம் வந்துடுச்சு. 98ம் வருஷம் கோவைக்கு பிரச்சாரம் பண்ண வந்த அத்வானி ரஜினி பேச்சு எடுபடாதுன்னு சொன்னாரே இப்ப என்ன சொல்வாருன்னு அப்பாவியா கேட்டோம். அது அத்வானியின் கருத்து; வாஜ்பாயியின் கருத்து அல்ல என்று ஒரு அதிரடி பதில். அட நம்மூர் பாலிடிக்ஸில் காவி கோஷ்டிகளும் தேறிட்டாங்கப்பா!

வண்டியை நேரா புரசைவாக்கம் பக்கமிருக்கும் ப.சிதம்பரம் கட்சி பக்கம் விட்டோம். ஆபிஸில் யாருமில்லை. ஹி...ஹி எல்லோரும் பிரச்சாரத்துக்கு சிவகங்கை போயிருக்காங்களாம்! ஒரு எம்.பி சீட்டில் நின்னதற்காக ஒரு கூட்டணியையே நியாயப்படுத்தி பேச வேண்டிய நிலையிலிருக்கும் ப.சியின் மீது மனசில் அனுதாப அலை வந்து அடித்தது. ஸார், ஜெயிச்சு டில்லிக்கு போய்ட்டா ரெண்டு வருஷத்துக்குள் வரப்போகும் சட்டசபை எலெக்ஷனுக்கு யார் வேலை பார்க்கிறது?!


அங்கேயிருந்து நேரா தாயகம். ரஜினிதான் எங்களை நண்பர்கள்னு சொல்லிட்டாரே! அப்படின்னா என்ன அர்த்தம்? எங்களுடைய எதிரிகள் அவருக்கும் எதிரிகள்தானே... இதே டைப்பில் ஏகப்பட்ட வியாக்கியானங்கள். 'அண்ணே எதுக்குண்ணே இதெல்லாம்? நாப்பது தொகுதியை பார்க்காம உங்க நாலு தொகுதியை மட்டும் பார்த்து கரையேற வழியை பார்க்கலாமே'ன்னு நாம தைரியமா சொன்னதும் உள்ளேயிருந்து வந்த 'எவன்டா அவன்' குரலுக்கு ரீயாக்ஷன் காட்டி எஸ்கேப்பானோம்!

எக்மோர் பிரிட்ஜை தாண்டி நுங்கம்பாக்கம் வந்து விஜய் டிவி ஆபிஸ¤க்குள் நுழைஞ்சா கோபிநாத் கவலையா உட்கார்ந்திருந்தார். என்ன ஸார்.. நேரடி ஒளிபரப்பு காட்டி அசத்தினீங்க? இப்போ அசந்து போய் உட்கார்ந்திருக்கீங்களேன்னு கேட்டோம். ரசிக கண்மணிகள், 'யோவ்.......எங்களை வுட்டுட்டியே'ன்னு கேட்டதில் மிரண்டு போய்ட்டாராம். சரி வுடுங்க... ரஜினி அறிக்கை பத்தி ஷோக்கா கலக்கும் ஷாலினி என்ன சொன்னாங்கன்னு ஒரு வழிசலான கேள்வியை எடுத்துவுட்டதும் துரத்தி வுட்டுட்டார்!

ஷாலினி பத்தின நினைப்பால் ஜிவ்வானதும்தான் அந்த மடத்தனமான காரியத்தை செஞ்சேன். நண்பரை போத்தீஸ் பக்கம் டிராப் பண்ணிவிட்டு டி.நகரிலிருக்கும் பாமக தேர்தல் ஆபிஸில் ஆஜரானேன். ரஜினி அறிக்கை பத்தி கேட்டதும், ஏன் தம்பி வெட்டியா பேசணும்னு வெட்டி விடறதிலேயே குறியாய் இருந்தார் ஒரு கரை வேட்டி. 'பேசியாச்சு'ன்னு சின்ன அய்யா சொல்லியும் பத்திரிக்கைகாரனுங்க சும்மா இருக்காம பத்த வெச்சுட்டானுங்களேன்னு ஒரு சேம் சைடு கோல் போட்டதும் பார்ட்டி அம்பேல். எலெக்ஷன் முடியட்டும்....இலை வெட்டி, வேர் வெட்டி, விறகு வெட்டின்னு வெட்டியா சுத்திட்டிருக்கவனுங்களை கூப்பிட்டு வந்து ஒரு கை பார்க்குறோம்னு கர்ஜித்தது அந்த கிருதா மீசை! அந்த நேரம் பார்த்தா என் ·பிரெண்டு (நிஜமான எதிரி!) 'செல்'லடிக்குணும்?! ரிங் டோனில் வந்த ரஜினி பாட்டை கேட்டு டென்ஷனாகி, என் செல் போனை உடைச்சு, தடுத்த என்னோட காலையும் உடைச்சு... அது ஒரு சோக கதை வாத்யாரே!

- ராயப்பேட்டை ஆஸ்பிடலிலிருந்து ஜெ. ரஜினி ராம்கி

No comments: