நடிகர்கள்: ரஜினிகாந்த், மாதவி, தேங்காய் சீனிவாசன், சௌகார்
ஜானகி, பூர்ணம் விஸ்வநாதன், மாஸ்டர் சந்திரசேகர்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
வசனம்: விசு
இயக்கம்: கே.பாலச்சந்தர்
ஹ்ரிஷிகேஷ் முகர்ஜியின் 'கோல்மால்' இந்திப் படத்தின் தழுவல் தான்
என்றாலும் எனக்கு மிகவும் பிடித்தமான சூப்பர் ஸ்டார் படமென்றால் அது தில்லு முல்லு தான். தனது அநாயாசமான நகைச்சுவை நடிப்பின் மூலம் என் மனசுக்குள் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து கொண்ட படம். எந்த வகையிலும் குறை சொல்ல முடியாத படம்.
நகைச்சுவை என்பது ஒரு கடினமான கலை என்று சொல்வார்கள். நகைச்சுவைக்
கதையோ அல்லது குறைந்த பட்சம் ஒரு ஜோக்கோ எழுதிப் ர்த்தவர்களுக்கும்,
நகைச்சுவை நாடகத்தில் நடித்துப் பார்த்தவர்களுக்கும் அந்தக் கஷ்டம் புரியும்.
அந்த வகையில் மிகத் திறமையாகக் கட்டுமானம் செய்யப்பட்ட இந்தப்
படத்திற்குத் தமிழ்த் திரையுலக வரலாற்றில் போட்டி என்ற வகையில் மிகச்
சில நகைச்சுவைப் படங்களே இருக்க முடியும்.
"என்னவும் செய்யலாம், நன்மை தான் முக்கியம்" என்ற கண்ணதாசனின் வரிகளைத்தாரக மந்திரமாக எடுத்துக் கொண்டு, பட்டையைக் கிளப்பியிருக்கிறார்கள். படம் பார்ப்பவர்கள் சிரிப்பது தான் அந்த 'நன்மை'. நகைச்சுவைக் கதைகளுக்கெல்லாம் ஆதாரமான ஆள்மாறாட்டக் குழப்பங்கள் தான் இந்தப் படத்திற்கும் கரு. ஆனாலும் சொன்ன விதத்தில் அவ்வளவு சுவாரஸ்யமும் கலக்கலும் சேர்ந்து மறக்க முடியாத ஒரு படமாக்கி விடுகின்றன.
எந்த •ப்ரேமிலும் வருகிற எந்த கதாபாத்திரமானாலும் அதை நகைச்சுவையாகப்
பயன்படுத்தியே தீருவது என்ற வைராக்கியம் படம் முழுக்கத் தெரியும். முதல் காட்சியில் பூர்ணம் விஸ்வநாதனின் மருத்துவ அறையில் வாயில் தெர்மாமீட்டர்வைத்துக் கொள்ளப் போராடும் ஒரு நோயாளி முதல், இறுதிக் காட்சியில் கமல்ஹாசனுடன் (கௌரவத் தோற்றம்) வந்து, அவர் அதிரடியாக தேங்காய்சீனிவாசன் மேல் சுமத்தும் குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் "யெஸ் யெஸ் யெஸ் யெஸ் யெஸ் யெஸ் யெஸ் யெஸ்" என்று சொல்லி மிரள வைக்கும் நாற்பது ஐம்பது போலி வக்கீல்கள் வரை.
ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியாக வரும் தேங்காய் சீனிவாசனுக்கு அப்படி ஒரு
அமர்க்களமான பாத்திரம். "ஏய் ஜினுக்கு ஜிக்கா ஜிங்" போன்ற வசனங்கள்
இல்லாமல் மிகவும் குணச்சித்திரமான பாத்திரத்தில் அரசாங்கம்
நடத்தியிருப்பார். அந்த நேர்முகத் தேர்வு காட்சி பற்றி மட்டுமே
மணிக்கணக்கில் பேசலாம். சுப்பிரமணிய பாரதி என்ற பெயருடன் வருகிற
ஒருவரைக் கண்டு பெருமிதமாக நெஞ்சு விம்முவதாகட்டும், "பலக்கம் இல்லை", "கஸ்டப்படும்" என்று அவர் கூறக் கூற முகம் றுவதாகட்டும், 'எங்கே சொல்லு பார்ப்போம், ஒரு கட்டு சுள்ளியில ஒரு சுள்ளி கோண சுள்ளி' என்று சொல்லக் கேட்டு பதிலுக்கு, "வேண்டாம் சார், ரிஸ்க்கு" என்று பதில் வரவும் மூஞ்சியை ஷ்டகோணலாக்குவதாகட்டும், "ழானாவும் வராது ஷானாவும் வராது. பேரு மட்டும்சுப்பிரமணிய பாரதி!" என்று அங்கலாய்ப்பதிலாகட்டும், பதிலுக்கு, "ஷார்ட் நேம் சுப்பி சார்" என்று அவர் சொல்ல உச்சகட்ட கடுப்பில் "சுப்பியாவது குப்பியாவது, கெட் அவுட்" சொல்வதாகட்டும், அடேயப்பா..!! என்னமாய்க் கலக்கியிருக்கிறார்.
அவரைப் பற்றி அனைத்து தகவல்களும் அறிந்து கொண்டு வரும் சூப்பர்ஸ்டார்,
'அய்யம்பேட்டை அறிவுடைநம்பி கலியபெருமாள் சந்திரன்' என்ற பெயரோடு
நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டு அவரை ஒவ்வொரு விஷயத்திலும்
பூரிப்படைய வைத்து 100-க்கு 987 மதிப்பெண்கள் வாங்கி ரொம்ப சுலபமாக
வேலையை வாங்கி விடுகிறார். கதாநாயகனுக்கு வயசான நோயாளி அம்மா,
அடுத்த நிமிடமே கல்யாணம் செய்தே தீர வேண்டிய தங்கை போன்ற தமிழ்த்
திரையுலகின் க்ளிஷேக்களைத் தூக்கியெறிந்து விட்டு சுதந்திரமாக உலவ
விட்ட பாத்திரப் படைப்புக்கு ஒரு சபாஷ் போட வேண்டும். "Black Peleஆ?
அப்படின்னா யாரு?" என்று கேட்டு கால்பந்தாட்டம் பற்றிய தனது
அறியாமை/பிடிப்பின்மையை வெளிப்படுத்தி வேலை வாங்கும் சூப்பர்ஸ்டார்,
கொஞ்ச நாளில் கால்பந்தாட்டப் போட்டி ஒன்றில் நண்பர் குழாம் சூழ ஆஜராகி
இல்லாத கூத்தெல்லாம் அடிப்பது கண்டு தேங்காய் சீனிவாசன் பொங்கியெழும்
போது படம் சூடு பிடிக்கிறது.
அவரிடமிருந்து தப்பிக்க, வேலையைத் தக்கவைத்துக் கொள்ள, அரங்கேறுகிறார்
அய்யம்பேட்டை அறிவுடைநம்பி கலியபெருமாள் இந்திரன் - சந்திரனின்
சகோதரனாக - மீசை இல்லாமல். இந்திரனே ஒரு தில்லுமுல்லு எனும்போது,
மகளுக்குப் பாடல் கற்றுத் தரும் வேலை கொடுக்கப்பட்டு தேங்காய்
சீனிவாசனால் வீட்டுக்கு வரும் 'இந்திரன்' மாதவியைக் காதலிப்பது
இன்னொரு தில்லுமுல்லு. ஆள்மாறாட்டத்தைக் கண்டுபிடித்து விடும் வீட்டு வேலை செய்யும் சிறுவன் (சூப்பர் ஸ்டார் மாதிரியே தலைமுடியும் ஸ்டைலுமாய் - என்ன ஒரு கே.பி. டச்!!) அதை வெளியே சொல்லிவிடப் போவதாய் மிரட்டிப்
பணம் பறிப்பது இன்னொரு தில்லுமுல்லு. நடிப்பிலே ஆர்வம் கொண்ட 'மிஸஸ்.
மீனாட்சி துரைசாமி' சௌகார் ஜானகியை தனது தாயாக நடிக்க வைத்து
முதலாளியை ஏமாற்றுவது இன்னொரு தில்லுமுல்லு. உச்சகட்டமாய் தேங்காய்
சீனிவாசன் வழிபடும் முருகர் படம் கூட மாறுவேடத்தில் இருக்கும் விநாயகர் என்று ஒரே தில்லுமுல்லு மயம். அத்தனையும் அவ்வளவு ரசிக்கும்படியாக.
மகாத்மா காந்திக்கே சமைத்துப் போட்ட பெருமைக்குச் சொந்தக்காரர் என்று
சௌகார் ஜானகியை தேங்காய் சீனிவாசன் தூக்கி வைத்துக் கொண்டாடுவதும்,
அவரோ ஒவ்வொன்றாய் உளறி மாட்டிக் கொண்டு சமாளிப்பதுமாக சுவாரஸ்யமான
அதிர்வேட்டுக்கள். பார்ட்டி ஒன்றில் மிஸஸ் மீனாட்சி துரைசாமியை நேரில்
சந்திக்க நேர்ந்து தேங்காய் சீனிவாசன் அதிர்ந்து போவதும், சௌகார்
ஜானகி மிகுந்த முன்யோசனையுடன் அதிரடி மேல் அதிரடியாகக் கலக்கி விட்டு
அவசரமாக வெளியேறி, வீட்டுக்கு வந்து பின் சுவற்றின் வழியாக குழாயின்
மீதேறி வீட்டுக்குள் நுழைந்து அமைதியின் சொரூபமாய் காத்திருந்து,
கோபத்துடன் உணமையை ஆராய வரும் தேங்காய் சீனிவாசனை பாந்தமாய்
வரவேற்று அவரை அசரடிக்கும் காட்சிக்கு நிகர் ஏது?! "ஏய் தோட்டக்காரா,
உன் மொதலாளி இருக்கானா?" என்று இந்திரன் வேஷத்தில் இருக்கும்
தெனாவெட்டில் சூப்பர்ஸ்டார், தேங்காய் சீனிவாசனைக் கலாய்ப்பதும், ஒரு தம் பத்த வைப்பதும், பதிலுக்கு அவர் கடுப்பாவதும், "உன் அண்ணனுக்காக உன்னை சும்மா விடுறேன்" என்று அறிவிப்பதும், அசட்டையாக அதை 'இந்திரன்'
கண்டுகொள்ளாமல் மேலும் கலாய்ப்பதும் என்று இருவரும் போட்டி போட்டுக் கொண்டு நடித்திருக்கும் காட்சிகள் என்றைக்கும் நெஞ்சை அள்ளும். சூப்பர்ஸ்டாருக்கும்
மாதவிக்கும் இடையிலான காதல் காட்சிகளிலும் பெரிதாகக் குறை கண்டுவிட
முடியாது. ஆசையாக வளர்த்த மீசையை மழித்துக்கொள்ள உட்காரும்போது
சூப்பர்ஸ்டாரின் முகத்தில் வந்து குடியேறும் சோகமான ரியாக்ஷன்கள் அத்தனையும் பவுன் தங்கம்.
எம்.எஸ்.வி.யின் இசையும் அதற்கு கண்ணதாசனின் வரிகளும் பாடல்களை
அழகாக்கியிருக்கும். "ராகங்கள் பதினாறும் உருவான வரலாறு" மிகச் சுகமான ஒரு அனுபவம்.
இதைப் போலவே சூப்பர்ஸ்டார் இன்னும் நிறைய படம் நடித்திருக்கலாமே என்ற
ஏக்கம் மனதுக்குள் ஒருபுறம் இருந்தாலும், இன்னொரு புறம் அதற்கு சமாதானமும் தோன்றுகிறது. ஒரு சந்திரன், ஒரு சூரியன், ஒரு சூப்பர்ஸடார் என்பது போல் ஒரு தில்லுமுல்லு!! அது என்றைக்கும் அவரது திறமைக்கு சாட்சியம் கூறும்.
- Meenaks (m_meenaks@yahoo.com)
2 comments:
//
"என்னவும் செய்யலாம், நன்மை தான் முக்கியம்" என்ற கண்ணதாசனின் வரிகளைத்தாரக மந்திரமாக எடுத்துக் கொண்டு, பட்டையைக் கிளப்பியிருக்கிறார்கள்.
//
" பொய்மையும் வாய்மையிடத்து " என்ற வள்ளுவரின் வரிகளைத் தாரகமாய்க் கொண்டு கண்ணதாசன் எழுதிய "என்னவும் செய்யலாம், நன்மை தான் முக்கியம்" என்ற வரிகளைத்தாரக மந்திரமாக எடுத்துக் கொண்டு, பட்டையைக் கிளப்பியிருக்கிறார்கள் என்றிருக்க வேண்டுமோ?
அய்யம்பேட்டை அறிவுடைநம்பி கலியபெருமாள் - ரசிகர்களின் நெஞ்சில் என்றும் நினைவிலிருக்கும் பெயர்.
Post a Comment