29.3.04

சிங்கம் ஒன்று புறப்பட்டதே...

பா.ம.க.,வுக்கு எதிராக ரஜினி பொங்கி எழுந்து விட்டார். லோக்சபா தேர்தலில் அக்கட்சி போட்டியிடும் ஆறு தொகுதிகளிலும் தோற்கடிக்க, தன்னுடைய ரசிகர்களுக்கு பகிரங்க கட்டளை பிறப்பித்து விட்டார். இத்தொகுதிகளில், அ.தி.மு.க., மற்றும் பா.ஜ.,வுக்கு அவர் ஆதரவு தெரிவித்துள்ளார். பா.ம.க.,வின் மீது கடும் ஆத்திரத்தில் உள்ள ரசிகர்கள், ரஜினியின் இந்த முடிவால் உற்சாகம் அடைந்துள்ளனர். பா.ம.க.,வை தோற்கடிக்க முழு வீச்சில் செயல்பட ஆரம்பித்து விட்டனர்.

அரசியலில் ரஜினி இதுவரை நேரடியாக இறங்கவில்லை என்றாலும், தனது "வாய்ஸ்' மூலம் அரசியல் செய்து வருகிறார். கடந்த 1996ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தல் முதல், அவருடைய "அரசியல் வாய்ஸ்' ஒலித்துக் கொண்டிருக்கிறது. அத்தேர்தலில், ஜெயலலிதா ஆட்சிக்கு வரக் கூடாது என்று "வாய்ஸ்' கொடுத்தார். "ஜெ., மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது' என்றார். தி.மு.க., த.மா.கா., கூட்டணியை வெற்றி பெறச் செய்யும்மாறு "டிவி' மூலமும், அறிக்கை மூலமும் வேண்டுகோள் விடுத்தார். அந்த தேர்தலில் அ.தி.மு.க., படுதோல்வி அடைந்தது.

அதன் பின், 1998ம் ஆண்டு கோவையில் தொடர் குண்டுவெடிப்புகள் நடந்த போது தி.மு.க.,வுக்கு ஆதரவாக அவர் கொடுத்த "வாய்ஸ்' எடுபடவில்லை. அதற்கு பிறகு, 1999ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலிலும், 2001ல் நடந்த சட்டசபை தேர்தலிலும் அடக்கி வாசித்து விட்டார். யாருக்கும் ஆதரவு தெரிவிக்கவில்லை.

இந்த லோக்சபா தேர்தலில் அவருடைய "வாய்ஸ்' ஒலித்துள்ளது. "பாபா' பட ரிலிசின் போது பா.ம.க., ராமதாஸ், ரஜினியை தனிப்பட்ட முறையில் கடுமையாக விமர்சித்தார். அப்படம் வெளியான தியேட்டர்களில் பா.ம.க.,வினர் நுழைந்து திரைகளை கிழித்தனர். படச்சுருள் பெட்டிகளை கடத்திச் சென்றனர். பேனர்களை வெட்டி வீழ்த்தினர். அச்சமயம், பா.ம.க.,வுக்கும் ரஜினி ரசிகர்களுக்கும் பல இடங்களில் மோதல் ஏற்பட்டது.

சமீபத்தில், திருவண்ணாமலை மாவட்டத்தில் பேசிய ராமதாஸ், ரஜினியை மிகவும் கீழ்தரமாக விமர்சித்தார். இதனால், ராமதாசுக்கும், ரஜினிக்கும் மீண்டும் மோதல் வலுத்தது. இந்த மோதலால், பா.ம.க., தொண்டர்களால் ரஜினி ரசிகர்கள் பல இடங்களில் தாக்கப்பட்டனர். அப்போதே, லோக்சபா தேர்தலில் பா.ம.க.,வுக்கு எதிராக செயல்பட ரஜினி ரசிகர்கள் முடிவெடுத்து, செயல்பட ஆரம்பித்து விட்டனர். தங்களுக்கு அனுமதி வழங்கும்படி ரஜினியையும் வலியுறுத்தி வந்தனர்.

ரசிகர்களின் கோரிக்கைக்கு தனது ரசிகர் மன்றத் தலைவர் சத்யநாராயணா மூலம், நேற்று பச்சைக்கொடி காட்டினார் ரஜினி. லோக்சபா தேர்தலில் பா.ம.க.,வை தோற்கடிக்க அனுமதி வழங்கியதுடன், இக்கட்சிக்கு எதிராக போட்டியிடும் அ.தி.மு.க., மற்றும் பா.ஜ.,வின் வெற்றிக்கு பாடுபடும்படியும், அக்கட்சிகளுக்கு ஓட்டு போடும்படியும் ரசிகர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரியில் நேற்று நடந்த ரஜினி ரசிகர்கள் மன்றக் கூட்டத்தில் , ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் சத்யநாராயணா இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

ரஜினியின் முழு ஒப்புதலோடு வெளியாகியுள்ள இந்த அறிவிப்பால், அவருடைய ரசிகர்களிடையே உற்சாகம் கரைபுரண்டோடுகிறது. பா.ம.க.,வுக்கு எதிராக வரிந்து கட்டிக் கொண்டு வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டனர்.

தி.மு.க., தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் பா.ம.க., இடம் பெற்றுள்ளது. இக்கூட்டணியில், செங்கல்பட்டு, அரக்கோணம், திண்டிவனம், சிதம்பரம், தர்மபுரி, புதுச்சேரி ஆகிய ஆறு லோக்சபா தொகுதிகளில் பா.ம.க., போட்டியிடுகிறது. அக்கட்சிக்கு எதிராக இத்தொகுதிகளில், அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணி போட்டியிடுகிறது. செங்கல்பட்டு, அரக்கோணம், திண்டிவனம் தொகுதிகளில் அ.தி.மு.க.,வும் சிதம்பரம், தர்மபுரி, புதுச்சேரி தொகுதிகளில் பா.ஜ.,வும் பா.ம.க.,வை எதிர்த்து போட்டியிடுகின்றன.

இந்த ஆறு தொகுதிகளிலும் அ.தி.மு.க., மற்றும் பா.ஜ.,வுக்கு ஆதரவாக ரஜினி ரசிகர்கள் பிரசாரம் செய்ய உள்ளனர். அதோடு, பிரசாரத்தில் சத்யநாராயணாவும் பங்கேற்கிறார். இந்த ஆறு தொகுதிகளைத் தவிர, தமிழகத்தில் உள்ள மற்ற தொகுதிகளில் யாருக்கு ஆதரவு என்பதை ரஜினி இன்னும் முடிவு செய்யவில்லை. இதனால், ரசிகர்களிடையே குழப்பம் நிலவுகிறது. "ரஜினி தற்போது வெளியூர் சென்றுள்ளார். அவர் திரும்பியதும், இது குறித்த முடிவை அவர் எடுப்பார்' என்று சத்யநாராயணா தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் புதுச்சேரியில் நேற்று அளித்த பேட்டி:

*""பா.ம.க., போட்டியிடும் 6 தொகுதிகளிலும் ரஜினிகாந்த் பிரசாரத்தில்

ஈடுபடுவாரா?''

மாட்டார். தேவைப்பட்டால் நான் பிரசாரம் செய்வேன்.

*""பிரசாரத்தில் ஈடுபடாவிட்டாலும் ரஜினி "வாய்ஸ்' கொடுப்பாரா?''

இதை அவரிடம் தான் கேட்க வேண்டும்.

*""பா.ம.க.,வை 6 தொகுதிகளிலும் தோற்கடிப்போம் என்கிறீர்கள். அதற்கான காரணம் என்ன?''

"பாபா' படம் வெளி வந்தபோது ரஜினி ரசிகர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு, மன உளைச்சல், இதை எல்லாம் தாண்டி ரஜினிகாந்த்தை நேரிடையாக கொச்சைப்படுத்தி விமர்சனம் செய்தது தான் காரணம். அதனால், ஜனநாயக முறையில் பா.ம.க.,விற்கு எதிராக அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணிக்கு ரஜினி ரசிகர்கள் ஓட்டு கேட்பார்கள்.

*""ஜெ., ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என்று சொன்ன ரஜினிகாந்த், தற்போது அ.தி.மு.க., விற்கு ஆதரவு தருவது முரண்பாடாக இல்லையா?''

அப்போதைய நிலை வேறு. இப்போதுள்ள நிலை வேறு. இப்போது பா.ம.க.,வினரால் ரசிகர்களின் மனம் புண்பட்டுள்ளது. ரசிகர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு தான் பா.ம.க.,வை தோற்கடிக்க வேண்டும் என்ற முடிவை எடுத்துள்ளோம்.

*""பா.ம.க., வினரை விட , ரஜினியை அ.தி.மு.க.,வினர் அதிகம் திட்டியுள்ளார்களே?''

பா.ம.க.,வை போல் அ.தி.மு.க., தரக்குறைவாக நடந்து கொள்ளவில்லை. ரஜினிகாந்த்தை அ.தி.மு.க.,வினர் நேரடியாக எப்போதும் விமர்சனம் செய்தது கிடையாது.

*""பா.ம.க., போட்டியிடும் 6 தொகுதிகளில் தான் பா.ஜ., அ.தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவாக செயல்படுவோம் என்று கூறியுள்ளீர்கள். தமிழகத்தில் உள்ள மற்ற தொகுதிகளில் உங்களுடைய நிலை என்ன?''

தமிழகத்தில் உள்ள மற்ற தொகுதிகளின் நிலை குறித்து ரசிகர்கள் மத்தியில் குழப்பம் இருக்கிறது. ரஜினிகாந்த் தற்போது வெளியூர் சென்றிருப்பதால் அவர் வந்த பிறகு உரிய நேரத்தில் முடிவு அறிவிக்கப்படும்.

*""தி.மு.க., தலைவர் கருணாநிதி, ரஜினிகாந்துடன் பேசினால் பா.ம.க.,வை எதிர்க்கும் முடிவை மாற்றிக் கொள்வீர்களா?''

அதை ரஜினி தான் முடிவு செய்வார்.

*""பா.ம.க., உயர்மட்ட தலைவர்கள் ரஜினிகாந்திடம் பேசிவிட்டதாக அன்புமணி சொல்லியிருக்கிறாரே?''

அது போல் யாரும் ரஜினியை சந்தித்து பேசவில்லை.

*""ரஜினி காந்த் அரசியலில் வருவதற்கான எதிர்கால திட்டமாகத் தான் தற்போது 6 தொகுதிகளில் பா.ம.க.,வை நேரிடையாக எதிர்க்கிறீர்களா?''

அதற்கும், இதற்கும் சம்பந்தமே இல்லை.

*""பா.ஜ., வினர் உங்களை சந்தித்து ஆதரவு கேட்டார்களா?''

கேட்டார்கள்.

*""இந்த தேர்தலில் ரஜினி ரசிகர்களின் பங்கு எவ்வாறு இருக்கும்?''

பா.ஜ., அ.தி.மு.க., வேட்பாளர்கள் இந்த 6 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்கு கடுமையாக உழைப்பார்கள். மக்கள் முகம் சுளிக்காத வகையில் ஜனநாயக முறையில் தேர்தல் பணியில் ஈடுபடுவார்கள்.

நன்றி - தினமலர்

17.3.04

டாக்டர் ராமதாசுக்குப் பத்து கேள்விகள்!

அன்பிற்கும் மரியாதைக்குமுரிய திரு.ராமதாசுக்கு வணக்கங்கள் பல! உங்களது ஆவேசமான பேட்டியையும், ரஜினிக்கான பத்து கேள்விகளையும் படித்தவுடன் இந்தக் கடிதம் எழுதுகிறேன். இந்தக் கடிதத்தை எழுதுவதால், நான் ரஜினி ரசிகன் என்று தவறாய் எடுத்துக் கொள்ள வேண்டாம். ஒரு சராசரி குடிமகன், கொஞ்சம் சமூகத்தின் மீது அக்கறை உள்ள பார்வையாளன் என்று வைத்துக் கொள்ளுங்கள். உங்களின் 'கனிவான' பார்வைக்கு, நான் ஒரு பத்து கேள்விகளை வைக்கிறேன்.

(1) தற்போது நடிகர்களையும், திரையுலகையும் கண்ட மேனிக்கு விமர்சிக்கும் தாங்கள்..சில வருடங்களுக்கு முன்பு மன்சூர் அலிகான் என்ற 'ஒழுக்கமான' நடிகரை உங்கள் கட்சியில் சேர்த்துக் கொண்டது ஞாபகம் இருக்கிறதா? அப்போது திரையுலகம் நல்ல முறையில் செயல்பட்டுக் கொண்டிருந்ததா அல்லது திரு.மன்சூர் அலிகான் சிறந்த மனிதர் என்ற முறையில் சேர்த்துக் கொள்ளப்பட்டாரா?

(2) திருவாளர். வீரப்பன் தமிழர் என்பதால், அவரை கன்னடரான
திரு.ரஜினிகாந்த் விமர்சிக்கக்கூடாது என்று சொல்லி இருக்கிறீர்கள்?
அப்படியென்றால்...'தாவூத் இப்ராகிம்' என்ற இந்தி பேசும் கொள்ளைக்காரன்,
லல்லு பிரசாத் யாதவ் என்ற பீகாரி ஆகியவர்களை விமர்சிக்கும் தகுதி
'மரத்தமிழனுக்கு' கிடையாதா?

(3) 'நான் நினைத்தால் தமிழகத்தில் ஒரு பத்திரிக்கை கூட வரமுடியாது!
காடுவெட்டி குருவுக்கு ஒரு 'சிக்னல்' கொடுத்தால் போதும்' என்றெல்லாம் பேசுவது,
ஒரு பொறுப்பான தலைவருக்கு அழகாகுமா? காடுவெட்டி குரு என்ற கட்சிக்காரரை,
நீங்களே வன்முறைக்கு தகுந்தவர் என்று அடையாளம் காட்டி அழகுபடுத்துவது
பொறுப்பான தலைமையாகுமா?

(4) பாட்டாளி மக்கள் கட்சிக்கும், உங்களுக்கும் 'பதவிகளில்' ஆசை இல்லாதது
போலவும், கொள்கை தான் முக்கியம் என்பது போலவும் சில சமயங்களில்
பேசுகிறீர்கள். ஆனால், 'ஜெயலலிதாவோடு உறவு வைத்துக் கொள்வது....'
என்று ஆரம்பித்து, பச்சை பச்சையாய் நீங்கள் பேசிய அசிங்கங்களை மறந்து,
'சகோதரி பார்த்துக் கொள்வார்' என்று ஒரு 'அந்தர் பல்டி' அடித்தீர்கள்.
'கருணாநிதியோடு இருந்தால் கோவணத்தையும் உருவி விடுவார்' என்று சொல்லி
விட்டு, இப்போது அவரோடு கை கோர்த்து இருக்கிறீர்கள். (ஜெவுக்கும்,
கலைஞருக்கும் 'வெட்கம்' இல்லை என்பது வேறு விஷயம்). உங்கள் கட்சியின்
கொள்கையில், 'வெற்றிக்காக தாவலாம்.. தவறில்லை!' என்று
பொறிக்கப்பட்டிருக்கிறதா?

(5) 'ஜாதி மத பேதங்கள் கூடாது!' என்று மிக சமீபத்தில் பேசி
இருக்கிறீர்கள். ஆனால், தங்களது பாட்டாளி மக்கள் கட்சியே..'வன்னியர்'
சங்கத்திலிருந்து உதித்தது என்பதும், 'வன்னியர் ஓட்டு அன்னியருக்கில்லை!'
என்பதை தேர்தல் சமயங்களில் கோஷங்களாக சொல்லப்பட்டதும், தாங்கள்
சாதிகளைக் கடந்து வந்து நிற்கும் ஒப்பற்ற தலைவராக காண்பிக்கவில்லையே?

(6) 'ஊழல் புரிந்தார்கள் என்று தெரிந்தால் சவுக்கால் அடிப்பேன்!' என்று
மேடைகளில், சவுக்கை கட்டி தொங்க விட்டு பிரச்சாரம் செய்தீர்கள்.. தவறு
செய்தவர்களை 'சவுக்கால்' அடிப்பது கட்சிக்குள் ஜனநாயகம் வளர்க்க நினைக்கும்
செயலா அல்லது தாங்கள் சர்வாதிகாரத்தின் மேல் நம்பிக்கை உள்ளவர் என்பதன்
பறைசாற்றுதலா? இப்போது கூட, பெட்ரோல் பங்க் ஊழல் என்று சகல
பத்திரிக்கைகளிலும் பாமகவின் பெயர் கொட்டை எழுத்துகளில் இடம் பெற்றும்...
அது சம்பந்தமாக எந்த ஒரு அறிக்கையும் ஆதாரத்தோடு உங்கள் தரப்பிலிருந்து
தரப்படவில்லையே? இல்லை... 'ஊழல் உண்மைதான்' என்று உணர்ந்து, உங்கள்
மந்திரிகளை சவுக்கால் அடித்து விட்டீர்களா?

(7) 'ஒரு காலத்தில் மரம் வெட்டினோம். ஆனால் அதற்கப்புறம் 'பசுமைத்
தாயகத்தின்' மூலம் எத்தனை கன்றுகளை நட்டிருக்கிறோம். அதை ஏன்
பத்திரிக்கைகளில் எழுதுவதில்லை?' என்று கேட்கிறீர்கள்? அப்படிப்பார்த்தால்...
ரஜினி புகை பிடிக்கிறார், குடிக்கிறார்...ஆனால், அவர் எவ்வளவோ நல்ல
விஷயங்களை படங்களில் போதிக்கிறார், அதை ஏன் நீங்கள் பார்ப்பதில்லை?
'வீட்டைக் கவனி' என்று யார் வேண்டுமானாலும் சொல்லலாம், அதற்கு சூப்பர்ஸ்டார் தேவையில்லை!' என்று சொல்லி இருக்கிறீர்கள்...யார் வேண்டுமானாலும் சொல்லலாம், ஆனால் சூப்பர்ஸ்டார் சொன்னால் கேட்பதற்கு ஒரு பெரிய கூட்டமே இருக்கிறதே?

(8) 'பாபா பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டேன். நமக்கு நிறைய
வேலை இருக்கிறது!' என்று சொல்லி இருக்கிறீர்கள். ரஜினியால் சமூகமே
சீரழிந்து கொண்டிருக்கிறது என்று 'லபோ திபோ' வென அடித்துக் கொண்டு விட்டு,
வீர வசனங்கள் பேசி விட்டு... 'இன்றோடு அந்தப் பிரச்சினை முடிந்து விட்டது,
விட்டுவிடுங்கள்!' என்று சொன்னால்..சமூகம் திருந்தி விட்டதா? அல்லது,
ரஜினிகாந்த் இனி புகைப்பதில்லை என்று உங்களிடம் வாக்கு கொடுத்திருக்கிறாரா?
இல்லை.. உங்களுக்கு கிடைக்க வேண்டிய விளம்பரம் கிடைத்துவிட்டது என்ற
திருப்தியின் வெளிப்பாடா?

(9) ' நான் ஏன் தமிழகத்தை பிரிக்க வேண்டும் என்று புரிந்து கொள்ளாமல்,
பிரிவினைவாதம் பேசுகிறேன் என்று சொல்வது மடத்தனம். என்னோடு மேடையில்
யாராவது விவாதிக்க தயாரா?'என்று கேட்கிறீர்கள். நீங்கள் ஏன் அது குறித்த
விவாதங்களை பத்திரிக்கைகளில் பத்து கேள்விகளாக வைக்க கூடாது? மூன்று
நாளில் முற்றுப்புள்ளி பெறும் சமாச்சாரங்களை எல்லாம் பத்து கேள்விகளாய்
வைக்கும் நீங்கள், ஏன் ஒரு நல்ல விவாதத்துக்கு உங்கள் நேரத்தை
செலவிடக்கூடாது? (எங்கள் நேரத்தையும்..)


(10) கடைசியாக, 'ரஜினிகாந்தே நான் அறிக்கை விட்ட மறுநிமிடம்
சமாதானக் கொடி காண்பித்துவிட்டார்...நீ யாரடா பொடியன்?' என்று யாருக்கும்
'சிக்னல்' கொடுத்து விட மாட்டீர்களே? ரஜினிகாந்துக்கும் ராமதாசுக்கும் அடுத்த
வேலைகள் நிறைய இருக்கிறது..ஆனால், அவர்களைப் பின்பற்றும் ரசிகர்களும்,
தொண்டர்களும் ஜென்மத்துக்கும் அடித்துக்கொள்ளப் போகிறார்களே, அந்தக்
கவலையில் தான் கேள்விகள் கேட்டேன். சத்தியமாய்..எனக்கும் நிறைய
வேலை இருக்கிறது!


டாக்டர். ராமதாஸ் திரு.ரஜினிகாந்திற்குப் பத்துக் கேள்விகள் ஆனந்த விகடன் மூலம் கேட்டிருந்த போது, எழுதிய கட்டுரை இது. பாபா படப்பெட்டிகள் சூறையாடப்பட்டு, களேபரங்கள் நடந்து கொண்டிருந்த காலம். இப்போது 'ரஜினி ஒரு நல்ல நடிகர்,அவருக்கும் எங்களுக்கும் பிரச்சினை இல்லை' என்று டாக்டர் அந்தர் பல்டி அடித்துக் கொண்டிருக்கிறார். ரஜினியும் எப்போதும் போல மிஸ்டர்.கழுகாரின் உளவிலும், சுவாமி.வம்பானந்தாவின் கனவிலும்
காய்களை நகர்த்தியபடியே இருக்கிறார். ரசிகர்களும், தொண்டர்களும் அவ்வப்போது கோதாவில் இறங்க, அப்பாவி பொதுஜனம் அத்தனையும் பார்த்தபடி இருக்கிறது

நன்றி - அருண் வைத்யநாதன்

15.3.04

ஐயாவும் ரஜினியும் - ஆனந்தத்தில் அம்மா!!

ஐயாவும் ரஜினியும் - ஆனந்தத்தில் அம்மா!! - மீனா

தமிழகத்தில் எம்.ஜி.யாருக்கு அடுத்தபடியாக மக்கள் செல்வாக்கு கண்மூடித்தனமாக இருக்கும் ஆள் யாரென்று பார்த்தால் அது ரஜினி தான் என்று குட்டிக் குழந்தை கூடச் சொல்லும். அந்த அளவிற்கு ஆறு முதல் அறுபது வரை(ஏன் எண்பது வரை கூட) அனைத்து தரப்பு மக்களையும் தன் விஷ¤க் விஷ¤க் ஸ்டைலால் கவர்ந்தவர் சூப்பர் ஸ்டார். என்ன எம்.ஜி.யார் எல்லா விஷயங்களிலும் தேங்காய் உடைத்தமாதிரி நறுக்கென்று முடிவெடுப்பார். ரஜினியோ வழ வழா கொழ கொழா..

தமிழ் நாட்டில் அ.தி.மு.க எதிர்ப்பு அலை வீசிய காலத்தில், கலைஞர் - மூப்பனார் கூட்டணிக்கு ஆதரவாக பேசி, அவர்களுக்கு அமோக வெற்றி தேடிக் கொடுத்தது அவரது வாய்ஸ். ஆனால் அடுத்த தேர்தலில் அது எடுபடவில்லை. சூப்பர் ஸ்டார் அத்தோடு மெளன சாமியாரானார். பாபா பட விவகாரங்க ளில் கூட வாயைத் திறக்கவில்லை. அதனாலேயே பா.ம.க தலைவர் டாக்டர் ஐய்யாவும் ரஜினியை கண்டபடி திட்டித் தீர்த்தார் (திட்டிக் கொண்டே இருக்கிறார்). பொருத்தது போதும்.. பொங்கியெழு மனோகரா ஸ்டைலில் கடைசியாக பா.ம.கவிற்கு எதிராக தன் ரசிகப் பெருமக்களை பிரச்சாரம் செய்யச் சொல்லி ரஜினி உத்திரவிட்டிருக்கிறார் என்று பிரபல வார இதழ் வெளியிட்டு இருக்கிறது. இது நிஜமா?? உண்மையாகவே அவர் இப்படிச் சொன்னாரா என்பது நிச்சயமாக யாருக்கும் தெரியாது. காரணம் என்னவென்றால் 2 நாட்களுக்கு முன்பு கூட பெங்களூர் போவதற்கு முன்பாக பத்திரிக்கையாளர்கள் அவரிடம் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் "தெரியாது.. தெரியாது" என்று அவரது அரசியல் நிலைப்பாடு பற்றி அனைவருக்கும் தெரிந்த பதிலையே கூறியுள்ளார் சூப்பர் ஸ்டார்.

இந்த எதிர்ப்பு பிரச்சாரம் மகத்தான வெற்றி பெற்றால் - பா.ம.க இருந்த இடம் இல்லாமல் ஆகிவிடும். குதிக்கும் குட்டிக் குரங்குகளைப் போல ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு கட்சியுடன் கூட்டு வைக்கும் அவர்களை தங்களுடன் சேர்த்து வெற்றி வாய்ப்பை கோட்டை விட்டார் தலைவர் என்று தி.மு.க வில் உள்நாட்டுக் கலகங்கள் தோன்ற ஆரம்பிக்கும். அரசியல் கனவில் அடிக்கடி மிதக்கும் விஜயகாந்த் புதுக் கட்சி ஆரம்பிப்பார். தி.மு.கவின் முன்னாள் அனுதாபி ஒருவரே அந்தக் கூட்டணியின் வீழ்ச்சிக்கு சங்கு ஊதுவதைப் பார்த்த சந்தோஷத்தில் முதல்வர் மிதப்பார்.

ஒருவேளை இந்தப் பிரச்சாரம் தோற்றால் - ரஜினியின் பாடு மேலும் திண்டாட்டம் தான். பாபா தோல்விக்குப் பிறகு அடுத்த படம் பண்ணவே வருஷக் கணக்கில் தயங்கும் அவர், இதற்கு மேல் ஊரிலேயே இருக்க மாட்டார். கட்சி ஆரம்பிக்கலாமா வேண்டாமா என்று யோசித்து, அப்போ அப்போ தன் பவரைக் காட்டும் விஜயகாந்த் தான் உண்டு, படப்பிடிப்பு உண்டு, தன் காலேஜ் உண்டு, தன் பஞ்சாயத்து என்று சாதுப் பிள்ளையாக மாறிவிடுவார். ஏற்கனவே சினிமாக்காரர்களைக் கண்டபடி திட்டித் தீர்க்கும் டாக்டர் ஐயா பூஸ்ட் குடித்த ரேன்ஜிற்கு ரஜினியையும், இன்ன பிற கலைஞர்களையும் உண்டு இல்லை என்று ஒரு வழி பண்ணுவார். ரஜினி இனி டோட்டலாக காலி என்ற சந்தோஷத்தில் அப்போதும் முதல்வர் மிதப்பார்.

ஆக ரஜினி அரசியலுக்கு வந்தாலும் வராவிட்டாலும் ஆனந்தப்படும் ஒரே நபர் - அம்மா தான்!!

நன்றி : தமிழோவியம்

11.3.04

வந்தே விட்டார் ரஜினி...?!

ரஜினி லேட்
============

வந்தே விட்டார் ரஜினி...

தமிழ்நாட்டில் அதிமுகவுக்கு எதிராக ஏகப்பட்ட எதிர்ப்பு இருந்த
கடந்த ஆட்சிக் காலத்தில், கலைஞர்ஜி-மூப்பனார்ஜி என்று
பிரசாரம் செய்து, தமிழக மக்களை உய்விக்க வந்த தேவனாக
வாய்ஸ் கொடுத்தார் ரஜினி. அப்போது போல் ரஜினி அலை
அடுத்த தேர்தலில் அடிக்கவில்லை.

தொடர்ந்து பல சறுக்கல்கள். அரசியலும் சரி, சினிமாவும் சரி
ரஜினியோடு கண்ணாமூச்சி ஆடிக் கொண்டு இருந்தன. இதை
சாக்காக வைத்து டாக்டர் ஐயா வேறு அவரை சீண்டிக் கொண்டே
இருந்தார். பாபா படம் வெளிவந்தபோது பல இடங்களில்
பா.ம.க வினருக்கும் ரஜினி ரசிகருக்கும் வெளிப்படையாக மோதல்கள்.

இப்போது, பாமக போட்டி இடும் எல்லா இடங்களிலும் தன் ரசிகர்களை
வேலை பார்க்கச் சொல்லி அவரே கட்டளை இட்டதாக ஜூ.வி சொல்கிறது


* கலைஞரின் ஒரு காலத்திய நண்பரை வைத்தே அவர் கூட்டணியை
கலகலக்க வைப்பதில் அம்மாவுக்கு சந்தோஷம்.

*பாமக தோற்றுப் போனால் அவர்கள் கொட்டம் அடங்குமென்று
கலஞருக்கு(ம்) உள்ளுர சந்தோஷம்

* அறநிலையத்துறை அமைச்சராகலாம் என்று சத்தியநாராயணாவுக்கும்,
'கொஞ்சம் காசு பார்க்கலாம்' என்று ரசிகக்குஞ்சுகளுக்கும் சந்தோஷம்.

* தான் காரணமோ இல்லையோ, ஆனாலும் தன்னைத்தான் எல்லோரும்
சொல்வார்கள் என்று சோ வுக்கு சந்தோஷம்.

* கிடைக்கும் பப்ளிசிட்டியை வைத்து ஆஷ்ரம் சார்பில் இன்னம் ஏழு கேசட்டு
வெளியிடாலம் என்று லதாவுக்கு சந்தோஷம்.

* ரஜினி-பாமக உரசல். அதையே சாக்காக வைத்து அவரை தன் பக்கம் இழுத்து
விடலாம் என்று பாஜக வுக்கு சந்தோஷம்.

* நல்ல சான்ஸ். ரஜினிக்கு மூக்கறுப்போம் என்று ராமதாஸ¥க்கு சந்தோஷம்


இவர்களில் யார் தோற்றுப் போனாலும் எனக்கு சந்தோஷம்.

எனக்கு மேக்கப் அரசியலும் பிடிக்காது. ஜாதீ அரசியலும் உவ்வே...

Courtesy : http://mynose.blogspot.com


கொஞ்சம் காசு பார்க்கலாம்னு ரசிகர்கள் நினைச்சிருந்தால் இன்னும் ரஜினியை பிடித்தே தொங்கிட்டிருக்க மாட்டார்களே!

ரஜினியை நம்பி (?) அரசியல் பிழைப்பு நடத்துமளவுக்கு சோ முட்டாள் என்பதையும் நம்ப முடியவில்லை!

ரஜினி அரசியலுக்கு வந்தால்தான் பப்ளிசிட்டி கிடைக்கும்னு லதா மட்டுமல்ல ரஜினியின் பாப்புலாரிட்டி பற்றி தெரிந்தவர்கள் கூட ஓத்துக்கொள்ள மாட்டார்கள்!

தேர்தல் முடிஞ்சதும் மரம் வெட்டிகள் சாட்டையை சொடுக்கப் போவது நிச்சயம் என்பது விசிலடிச்சான் குஞ்சுகளுக்கு நல்லாவே தெரியும்..

அது சரி, ஜு.வி, குமுதம் ரிப்போர்ட்டர் ரொம்பவும் கவனமாக எழுதியிருப்பதை கவனித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

என்னைப் பொறுத்த வரை, ரஜினியிடமிருந்த இந்த தேர்தலிலும் சிக்னல் கிடைக்காத சிக்கல் தொடரும்...!

Courtesy: http://rajniramki.blogspot.com

தண்ணீர் வேட்பாளருக்கு, ரஜினி ஆதரவு ?

ஈரோடு: நதிகள் ஒருங்கிணைப்பு, வறட்சியை போக்குதல் போன்ற கோரிக்கைகளை முன் வைத்து "தண்ணீர்' என்ற பெயரில் பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்க திட்டமிட்டுள்ள தமிழக விவசாயிகள் கூட்டமைப்பினர், ரஜினியையே வேட்பாளராக நிறுத்த முயற்சி மேற்கொண்டுள்ளன.

தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக பருவ மழை தொடர்ந்து பொய்த்து வருவது, அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையின்மை காரணமாக நீர் வரத்து கிடைக்காமை, கர்நாடக அரசின் காவிரி நீர் புறக்கணிப்பு போன்றவை, தமிழக விவசாயத்தை பெரிதும் பாதித்து வருகிறது.

உணவு தானிய உற்பத்தியில் சிறந்து விளங்கிய காவிரி டெல்டா பாசனப் பகுதிகளும், பவானிசாகர் அணை சார்ந்த பாசனப் பகுதிகளும் தொடர்ந்து வறட்சிக்கு இலக்காகி விட்டன. குறிப்பாக, ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம் மாவட்டங்களில் பாசன விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டிருப்பது உண்மை.

விளைப் பொருட்களுக்கு விலை நிர்ணயம், நிலவரி ரத்து, பயிர்க் கடன் நிலுவை தள்ளுபடி, இலவச மின்சாரம் நீடிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை மட்டுமே விடுத்து போராட்டம் நடத்தி வந்த தமிழக விவசாய சங்கம், தற்போது பாசன நீர் வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முழு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை பிரதானமாகக் கொண்டு போராட்ட களத்தில் குதித்துள்ளனர்.

போராட்டங்கள் நடத்தினாலும், தங்களுக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை என உணர்ந்த விவசாய சங்கங்கள், வரும் லோக்சபா தேர்தலில் எந்த கட்சியையும் ஆதரிக்காமல், தங்களுக்கென தண்ணீர் வேட்பாளர் ஒருவரை நிறுத்த முடிவு செய்தன. இதன் மூலம் தங்களுக்காக குரல் கொடுக்கவும், தங்களின் பிரச்னையை அரசின் கவனத்துக்கு சரியாக கொண்டு செல்லவும், உரிமைகளை முறையாக பெறவும் முடியும் என அவை நம்புகின்றன. தமிழக அளவிலான விவசாய சங்கங்கள் ஒரு கூட்டமைப்பின் கீழ் கொண்டு வரப்பட்டு, தற்போது பல்வேறு கட்ட ஆலோசனைகளும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

தண்ணீர் வேட்பாளர் பொதுவானவர், கட்சி சார்பற்றவர், அவருக்கு விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் மற்றும் மக்களின் ஆதரவு கண்டிப்பாக கிடைக்கும் என ஒரு தீர்மானத்துக்கு வந்துள்ள விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு, தற்போது தண்ணீர் வேட்பாளருக்கு ஆதரவு கோரி நடிகர் ரஜினியுடன் பேச முடிவு செய்துள்ளனர். அதற்கான முயற்சி தீவிரமடைந்துள்ளது.

ரஜினியின் ஆன்மிக குரு மறைந்த சச்சிதானந்தரின், சிஷ்யர் ஒருவர் மூலமாக, ரஜினியின் ஆதரவுக்காக தற்போது பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. ரஜினி, "தேசிய நதிகள் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும்' என வலியுறுத்தி வருகிறார். அத்திட்டத்தை செயல்படுத்த ஒரு கோடி ரூபாயை தனது பங்குத் தொகையாக அளிப்பதாகவும் அறிவித்துள்ளார்.

இதனால், விவசாயிகளின் பிரச்னை உணர்ந்து, விவசாய நலன் கருதி நதிகள் இணைப்பு திட்டத்தை துரிதப்படுத்தும் தண்ணீர் வேட்பாளருக்கு, ரஜினி ஆதரவு தெரிவிக்க வேண்டும் என விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு கோரியுள்ளது.

ரஜினியுடன் விரைவில் நடக்க இருக்கும் பேச்சுவார்த்தையின் போது, "தண்ணீர் வேட்பாளராக ரஜினியே போட்டியிட வேண்டும் அல்லது அவரது ஆதரவாளர் ஒருவர் போட்டியிட வேண்டும் அல்லது விவசாய சங்கங்களில் கூட்டமைப்பு சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்கப்பட உள்ளதாக, தமிழக விவசாய சங்கங்களில் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.


வேலுõர்: அரக்கோணம் லோக்சபா தொகுதியில் பா.ம.க.,வை தோற்கடிக்க ரஜினி ரசிகர்கள் ரகசிய கூட்டங்கள் நடத்தி வருவதால், அ.தி.மு.க.,வினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், நடிகர் ரஜினியை தகாத வார்த்தைகளால் விமர்சனம் செய்ததை தொடர்ந்து பா.ம.க.,வினர் மீது ரஜினி ரசிகர்கள் கடும் ஆத்திரத்தில் உள்ளனர். இதனால், வரும் லோக்சபா தேர்தலில் ஆறு தொகுதிகளில் போட்டியிடும் பா.ம.க., வேட்பாளர்களை தோற்கடித்தே தீருவோம் என்று மாநிலம் முழுவதும் ரஜினி ரசிகர்கள் அறிவித்துள்ளனர். இதன்படி, பா.ம.க., போட்டியிடும் தொகுதிகளில் ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் ரகசிய கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ரஜினிகாந்த் ரசிகர் மன்றத் தலைவர் சத்தியநாராயணா கடந்த சில நாட்களாக வேலுõர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். குறிப்பாக அரக்கோணம் தொகுதிக்குட்பட்ட சோளிங்கர் பகுதியில் ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் சத்யநாராயணா ரகசிய ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில், அரக்கோணம் தொகுதியில் போட்டியிடும் பா.ம.க., வேட்பாளர் வேலுவை தோற்கடிக்க மேற்கொள்ள வேண்டிய யுக்திகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

இந்நிலையில், பா.ம.க.,வை தோற்கடிக்க அணி திரளும் ரஜினி ரசிகர்களால் ஓட்டுகள் சிதறுவது உறுதி என்று கூட்டணி கட்சியான தி.மு.க., அச்சம் தெரிவித்துள்ளது. இதனால், அ.தி.மு.க.,வினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

"பா.ம.க.,வை வீழ்த்த ரஜினி ரசிகர் மன்றங்களே போதும்' என்பதால் அவர்கள் மீது எந்த விதமான நடவடிக்கைகளும் எடுக்காமல், அவர்களுக்கு ஆதரவாக செயல்படும்படி போலீசாருக்கு ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அரக்கோணம் தொகுதியில் பா.ம.க.,வை வீழ்த்த அ.தி.மு.க.,வினரை விட ரஜினி ரசிகர்களே தீவிரமாக களத்தில் இறங்கி பணியாற்றி வருவது பா.ம.க., தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது அ.தி.மு.க.,வினருக்கு எதிர்பாராத "போனஸ்' என்பதால் அதிக உற்சாகமடைந்துள்ளனர்.

Couresy : Dinamalar

4.3.04

பார்லிமென்ட் தேர்தலில் எந்த கட்சிக்கு ஆதரவு ?

நாகர்கோவில்: பார்லிமென்ட் தேர்தலில் எந்த கட்சிக்கு ஆதரவு அளிப்பது என்பது தொடர்பாக உரிய நேரத்தில் தலைவர் ரஜினி முடிவை அறிவிப்பார் என எதிர்பார்ப்பதாக நாகர்கோவிலில் அகில இந்திய ரஜினிகாந்த் நற்பணி மன்ற தலைவர் சத்தியநாராயணன் கூறினார்.
வரும் தேர்தலில் எந்த கட்சிக்கு ஆதரவு அளிப்பது என்பது தொடர்பாக ரஜினி "வாய்சை' ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில், பல்வேறு மாவட்டங்களில் ரஜினி மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களிடையே ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அகில இந்திய ரஜினிகாந்த் நற்பணி மன்ற தலைவர் சத்தியநாராயணன் இந்த ஆலோசனையை நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று கன்னியாகுமரி மாவட்டத்திற்கு அவர் வர முடிவு செய்திருந்ததால் ரஜினி ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

சென்னையில் இருந்து ரயில் மூலம் நேற்று காலையில் நாகர்கோவிலுக்கு அகில இந்திய ரஜினிகாந்த் நற்பணி மன்ற தலைவர் சத்தியநாராயணன் வந்தார். நாகர்கோவில் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தி.மு.க.,வை விமர்சித்து ரஜினி ரசிகர்கள் பெயரில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள் குறித்து விசாரணை நடத்தினார். ஏற்கனவே இந்த செய்தி சென்னைக்கு கிடைத்ததால் தலைவர் ரஜினி இதுகுறித்து விசாரிக்கும்படி உத்தரவிட்டதாக அவர் கூறினார். எதற்கும் அவசரப்பட வேண்டாம். தற்போதைய சூழ்நிலையில் அவசரப்பட்டால் பல்வேறு பிரச்னைகள் உண்டாகும் என்பதால் ரசிகர்கள் அமைதியாக இருக்கும்படி அவர் கேட்டுக் கொண்டார். ரசிகர்களின் உணர்வுகள் அனைத்தும் தலைவரிடம் தெரிவிக்கப்படும். நேரம் வரும் போது உரிய அறிவிப்புகள் வெளிவரும் எனவும் சத்தியநாராயணன் தெரிவித்தார்.

பின்னர் துவரங்காட்டில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள ஆஸ்பத்திரியை திறந்து வைக்க செல்வதற்காக நாகர்கோவிலில் இருந்து புறப்பட முயன்றார். ஆனால் நிர்வாகிகள், ரசிகர்கள் ஆர்வத்துடன் சத்தியநாராயணனை முற்றுகையிட்டு பல்வேறு விபரங்களை கேட்ட வண்ணம் இருந்தனர். பலர் அவருடன் இணைந்து போட்டோக்களையும் எடுத்துக் கொண்டனர்.

பின்னர் நிருபர்களிடம் அவர் பேசியதாவது:

ஒவ்வொரு மாவட்டத்திலும் ரஜினி ரசிகர்களின் நற்பணிகளை தீவிரமாக செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறேன். ரசிகர்கள் பொதுமக்களுக்காக பல்வேறு நற்பணிகளை செய்து வருவது பாராட்டத்தக்கது. வரும் பார்லிமென்ட் தேர்தலில் ரஜினி ரசிகர்கள் என்ன முடிவை மேற்கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த தகவல்களினால் ஏதாவது பிரச்னையும், பாதிப்பும் ஏற்பட்டு விடக் கூடாது என நாங்கள் நினைக்கிறோம்.

ஏனெனில் அனைத்து கட்சிகளிலும் ரஜினி ரசிகர்கள் காணப்படுகின்றனர். உரிய நேரத்தில் தலைவர் முடிவை அறிவிப்பார் என உங்களை போல நானும் எதிர்பார்க்கிறேன். என்ன முடிவை எடுப்பார் என்று அவருக்கு மட்டும் தான் தெரியும். பார்லிமென்ட் தேர்தலில் ஆதரவு அளிக்க தலைவரிடம் ஆதரவு கேட்போம் என பா.ஜ., கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை எந்த கட்சிகளும் அவரிடம் ஆதரவு கேட்டதாக எனக்கு தெரியவில்லை.

தலைவரும், விஜயகாந்தும் தனியாக சந்தித்து பேசியது உண்மை தான். விஜயகாந்த் தனி கட்சி ஆரம்பிக்கப் போவதாகவும், அதற்கு தலைவரின் ஆதரவு கேட்டதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. என்ன பேசினர் என்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும். சென்னையில் ரஜினி ரசிகர்கள் மாநாடு நடத்தும் திட்டம் எதுவும் இல்லை. தலைவரை பா.ம.க., விமர்சித்ததை தொடர்ந்து இதற்கு கண்டனம் தெரிவித்து ஒவ்வொரு மாவட்டத்திலும் மன்ற நிர்வாகிகள் தீர்மானங்களை நிறைவேற்றி தலைமைக்கு அனுப்பியுள்ளனர்.

தலைவர் புதிய படத்தில் நடிப்பது தொடர்பாக தீவிரமாக ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. விரைவில் புதிய படம் தொடர்பான அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Courtesy : Dinamalar dated today.

3.3.04

ரஜினி ரசிகர்கள், பாட்டாளி மக்கள் கட்சியைத் தோற்கடித்துவ?

பெரும்பாலான ரஜினி ரசிகர்கள், எளிதில் உணர்ச்சிவயப்படுகிறவர்கள். ஆகவே, அவர்களை எந்தவிதமாகவும் வழிநடத்தலாம் - ஆனால், யாரும் எதையும் உறுதியாய்ச் சொல்லாத நிலையில், எந்தப் பக்கம் போவது என்று புரியாதபடி, இப்போதைய 'கலவை' மீடியா செய்திகள், அவர்களை பயங்கரமாய்க் குழப்பி, சிண்டைப் பிய்க்கச் செய்துகொண்டிருக்கின்றன என்று நினைக்கிறேன்.

ரஜினியாக வாயைத் திறந்து சொன்னாலாவது ஒரு சிறிய வாய்ப்பு உண்டு - அவர் பேசாதவரை, ரஜினி ரசிகர்களால் யாரையும் தோற்கடிக்கமுடியாது - ஜெயிக்கவைக்கவும்முடியாது !

நன்றி: தமிழோவியம்