24.9.04

ரஜினி ரசிகர்கள் உருவாக்கிய தாஜ்மகால்

திருநெல்வேலியை மாவட்டமாக கொண்ட தென்காசிக்கு சற்று அருகே புல்லுக்காட்டு வலசை எனும் கிராமம் உள்ளது. அந்த கிராமத்திற்கு அதிகமான பேருந்து வசதிகள் கிடையாது. என்னுடைய பனிரெண்டாவது வயதில் நான் அந்த கிராமத்திற்கு செல்ல நேரிட்டது. அங்கே பேருந்து நிற்கும் இடத்தில் ஒரு சிறிய நிழற்குடை ரஜினிகாந்த் ரசிகர்களால் அந்த கிராம மக்களுக்காக அமைக்கப்பட்டிருந்ததை காண நேர்ந்தது. அந்த நிழற்குடையின் திறப்பு விழாவிற்காக நம் தளபதி சத்திய நாராயணா அவர்கள் வந்திருந்தார்கள் என்பதையும் நான் அறிந்தேன். கிராமத்திய இளைஞர்களை சமூக நலனில் அக்கறையுள்ளவர்களாக மாற்றியதில் ரஜினிகாந்த் அவர்களுக்கு அந்த கிராமமே நன்றிப்பட்டிருக்க வேண்டும். அரசியல்வாதிகள் செய்ய முடியாததை ரஜினிகாந்த் ரசிகர்கள் செய்திருக்கிறார்கள் என்பதை எண்ணி எல்லா ரசிகர்களும் பெருமைப்பட வேண்டும். ரஜினிகாந்த்தின் திரைப்படங்கள் இளைய சமுதாயத்தை பாதிப்பதாக குறை சொல்லும் அரசியல்வாதிகளுக்கு, இந்த கிராமத்து இளைஞர்களின் சமூக சேவை ஒரு பாடமாக அமையட்டும். பல வருடங்கள் கழித்து மீண்டும் அந்த கிராமத்திற்கு சென்ற வருடம் டிசம்பரில் சென்றிருந்தேன். அந்த கிராமத்திற்கு அடியெடுத்த முதலே என் மனம் அந்த நிழற்குடையை பார்க்க துடித்தது. அழகாய் வெள்ளையடித்தபடி, ரஜினி ரசிகனான எனை வரவேற்றபடி அமைந்திருந்தது அந்த நிழற்குடை. அதைக் கண்டவுடன் மனதிலே இனம் புரியாத சந்தோசம். சற்றே அந்த நிழற்குடைக்குள் இளைபாறிவிட்டு திரும்புகையில் என் மனதோடு சேர்ந்து, என் நிழலும் என்னுடன் வர மறுத்தது. ரஜினிகாந்த் அவர்களின் மேல் உள்ள எல்லையில்லா அன்பால் அமைக்கப்பட்ட அந்த நிழற்குடை, என் நிழலுக்கு உணர்ச்சிகளை சொல்லித் தந்ததில் ஆச்சரியம் ஏதுமில்லை. அது நிழற்குடை அல்ல, அந்த கிராம மக்களுக்காக ரஜினி ரசிகர்கள் உருவாக்கிய தாஜ்மகால் என்றுதான் சொல்ல வேண்டும். இத்தனை வருடங்கள் கழித்தும் அதை சரியாக பராமரிப்பதை கண்டபோது ரஜினிகாந்த் ரசிகனாய் இருப்பதில் பெருமையடைந்தேன். அதே சமயம் எங்கோ ரஜினியின் பாடல்கள் ஒலிப்பதைக் கேட்டு என் மனம் திரும்பிப்பார்த்தது. அக்கம் பக்கம் விசாரித்ததில் ரஜினிகாந்த்தின் பிறந்த நாள் விழா அங்கே கொண்டாடிக் கொண்டிருப்பதாக தெரியவந்தது. எல்லையில்லா இன்பத்திற்குள் என் மனது சிக்கி தவித்த நாளாய் அன்றைய தினம் அமைந்தது. படித்த இளைஞர்களின் மனதிலும், படிக்காத இளைஞர்களின் மனதிலும் சமுதாய சேவைகள் எனும் விதையை விதைத்த ரஜினிகாந்த் அவர்களின் இதைப்போன்ற சாதனைகள் தமிழ்நாட்டின் ஒவ்வொறு கிராமத்திலும் தொடர்ந்துக் கொண்டுதான் இருக்கின்றன. தன் எல்லா ரசிகர்களையும் சாதனையாளர்களாக மாற்றுவதுதான் ரஜினிகாந்த் அவர்களின் லட்சியமோ? தான் சாதித்து, தனை சார்ந்தவர்களையும் சாதனையாளர்களாய் உருமாற்றிய ரஜினிகாந்த் அவர்களின் லட்சியம் தொடரட்டும். ரசிகர்களின் முயற்சியில் சமுதாய கடமைகள் நம் மண்ணில் செழிக்கட்டும். சாதனைகளை வாழ்த்துவோம்! சாதனையாளர்களை வாழ்த்துவோம்!

குறிப்பு: இந்த கிராமத்தில் மட்டுமல்ல இதனை சுற்றியுள்ள பல கிராமங்களில் இதைப் போன்ற நிழற்குடை ரஜினிகாந்த் ரசிகர்களால் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மா. இரவிசங்கர்
on behalf of www.rajinifans.com

No comments: