16.9.04

தேசிய நீர்வழித் திட்டம்

சென்னையின் தண்ணீர்க் கஷ்டத்துக்கு என்னதான் தீர்வு? கடல் நீரைக் குடிநீராக்குவது ஒரு வழி. லிட்டருக்கு நூறு ரூபாய் ஆகும். இன்னொரு வழி, மிகப்பெரிய ஐஸ்கட்டிப் பாளங்களை கப்பல் மூலம் மலேசியா போன்ற நாடுகளிலிருந்து மாதா மாதம் கொண்டு வருவது. இதற்கு மைனஸ் 140 டிகிரியில் கொண்டுவரக் கூடிய ராட்சஸ டாங்கர் கப்பல்களை கொரியா சாம்சங்கிடமிருந்து வாங்க வேண்டும். சுப்ரீம் கோர்ட்டே ‘நதிகளை இணைக்க ஏதாவது செய்யுங்கள்’ என்று ஆணையிட்டுவிட்டது. அப்துல் கலாமின் 2020 கனவும் இஃது! நமது அரசியல் சட்டத்தில் (ஆர்ட்டிக்கிள் 246, ஏழாவது ஷெட்யூல்) இதற்கு இடம் இருக்கிறது. சுதந்திரம் வந்ததிலிருந்து நதிகளை இணைப்பதற்கான பற்பல திட்டங்களை யோசித்து யோசித்து கமிட்டி அமைத்து, கூடிப்பேசி இதுவரை 15,678 பக்கம் ரிப்போர்ட்டுகள் எழுதிவிட்டோம். கடைசியாக தேசிய நீர்வழித் திட்டம் ( நேஷனல் வாட்டர்வேஸ் ப்ராஜெக்ட்) என்ற அமைப்பில் இன்ஜினீயர் ஏ.சி.காமராஜ் அவர்கள் முன்வைக்கும் திட்டம், மனமிருந்தால் பணமிருந்தால் சாத்தியம் என்று தோன்றுகிறது.

இந்தத் திட்டத்தில், பிரம்ம புத்ராவிலிருந்து தாமிரபரணி வரை அனைத்து நதிகளையும் கால்வாய்கள் மூலம் இணைத்து, அவற்றில் வெள்ளம் வரும்போது மட்டும் வழியும் தண்ணீரை அங்கங்கே சேமித்து, கால்வாய்களை ஏற்ற இறக்கமின்றி சமதரையில் அமைத்து, எங்கே வெள்ளமோ அங்கிருக்கும் உபரிநீரைப் பற்றாக்குறைப் பகுதிக்கு இருதிசையிலும் அனுப்பும்படியான ஏற்பாடு... கர்நாடகா தண்ணீர் கொடுக்க மறுத்தாலும், பருவமழை அதிகமாகி அணைகளில் வெள்ளம் வழிந்து தரம்சிங்கையும் மீறி, மேட்டூருக்கு இந்த வருஷம் தண்ணீர் வந்ததுபோல!

600 மீட்டரிலிருந்து துவங்கி நாடெங்கிலும் பெரும்பாலும் 300 மீட்டரிலேயே, சம தளத்திலேயே சுமார் 15,000 கிலோமீட்டருக்குக் கால்வாய்கள் அமைக்கவேண்டும் (இது துணைக்கண்டத்தின் ஏற்ற இறக்க ஜியோகிரஃபியில்கூட சாத்தியம் என்கிறார் காமராஜ்). போக்குவரத்து, மின்சாரம், குடிதண்ணீர் என மூன்று பிரச்னைகளையும் தீர்க்கலாம்என்கிற பேராசைமிக்க திட்டம்இது. வருஷா வருஷம் கடலில் விரயமாகப் போய்ச்சேரும் வெள்ளப்பெருக்கில் முப்பது விழுக்காட்டை இவ்வாறு தேக்கினாலே போதுமாம். அதிகம் செலவாகாது. ஐந்து லட்சத்து அறுபதாயிரம் கோடி ரூபாய் இருந்தால், பத்து வருஷத்தில் கட்டிவிடலாம் என்கிறார் காமராஜ். நான் நூறு ரூபாய் அனுப்பலாம் என்றிருக்கிறேன்.

Courtesy : Sujatha @ Ananda Vikatan

2 comments:

Badri said...

கடல் நீரைச் சுத்திகரிக்க லிட்டருக்கு ரூ. 100 எல்லாம் தேவைப்படாது. லிட்டருக்கு 6-12 பைசாதான் ஆகும்.

http://www.chennaionline.com/science/Technology/01saltwater.asp

இந்தத் துறையில் பணிபுரியும் என் நண்பர் ஒருவரிடமும் கேட்டு இதை உறுதிப்படுத்திக்கொண்டுள்ளேன்.

இப்படி 'கன்னா பின்னா'வென்று எழுதியது சுஜாதாவா?

ராம்கி said...

Yes, He has written in this week "Kattrathum Pertrathum"