13.9.04

சரணடைந்த கஜேந்திரா

கள்ளக்குறிச்சியில் திருமணவிழாவினை தலமையேற்க சென்ற விஜயகாந்த் மணமக்களை வாழ்த்திய கையோடு கொஞ்சம் அரசியல்வாதிகளையும் கிண்டிவிட்டு வேடிக்கை பார்த்ததின் விளைவு இன்று கஜேந்திரா பட தயாரிப்பாளரை பாமக தலைவரிடம் சரணடையவைத்துவிட்டது. கண்ணீர் வராத குறையாய் துரை அளித்த பேட்டியிலிருந்து அவரின் பாதிப்பை புரிந்துக்கொள்ளலாம். பாமகவின் வன்முறை பற்றி முழுதாய் அறிந்தபோதிலும் விஜயகாந்த் அரசியல் பேசியது வீண் வம்பை விலை கொடுத்து வாங்கியது போல் ஆனது. பத்திரிக்கைகளில் பரபரப்பாய் செய்தி வரவேண்டும் என்கின்ற ஆவல் அவரை பேசத்தூண்டியிருக்கலாம் என்பது என் எண்ணம். கோடிக்கணக்கில் பணத்தை வட்டிக்கு புரட்டி படம் எடுத்த துரை அவர்களின் அணுகுமுறை 100 சதவீதம் சரியானதுதான். தர்மம் காக்க கஜேந்திரா புறப்பட்டுவிட்டார் என்றெல்லாம் சொன்னார்கள். விஜயகாந்த்தின் தர்மம் கஜேந்திரா திரைப்பட தயாரிப்பாளரை கூட காக்க முடியாமல் போனது. இந்த தயாரிப்பாளரின் நிலையை சிறிதும் சிந்திக்காமல் பேசிய இவரின் அரசியல் ஒத்திகை தேவைதானா? மேடை பேச்சோடு முடித்துக்கொள்ளாமல் ஜூனியர் விகடனில் அளித்த பேட்டியிலும் பாமகவை இவர் தீண்டியது அவசியம்தானா? இவரைப்பற்றி புகழ்ந்த பத்திரிக்கைகள் இன்று இவரின் நிலையை இகழ்ந்து பேசுகிறது என்பதை விஜயகாந்த் தெரிந்து கொள்வாரா? தன் பலம் தனக்கு தெரியும் என தன்னைப்பற்றி தானே புகழ்வதே விஜயகாந்த்தின் பலவீனம். ரஜினிகாந்த்தைப்பற்றி தவறாய் பாமக தலைவர் பேசியபோதும் அவர் கடைபிடித்தது அமைதி, கடைபிடிக்க சொன்னதும் அமைதி. பாபா திரைப்படம் திரையிடவிடாமல் நான்கு மாவட்டங்களில் தடுக்கப்பட்ட போதும் ரஜினிகாந்த் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்போவதாக மட்டுமே தனது அறிக்கையில் தெளிவுபடுத்தியிருந்தார். தன்னால் மக்களும், ரசிகர்களும் பாதிப்படையக் கூடாது என்பதுதான் அவரின் விருப்பம் என ஆணித்தரமாக சொல்பவர். இதை கருத்தில் கொண்டுதான் காவிரி தண்ணீர் வேண்டி அவர் நடத்திய உண்ணாவிரதமும் அரசாங்க விடுமுறை நாட்களில் நடத்தப்பட்டது. ரஜினிகாந்த் விசயத்தில் வன்முறைக்கு முழு காரணம் பாட்டாளி மக்கள் கட்சிதான். ஆனால் விஜயகாந்த் விசயத்தில் வன்முறைக்கு முழுக்காரணமும் விஜயகாந்த் மட்டுமே. பாபாவின் தயாரிப்பாளராய் ரஜினிகாந்த் இருந்ததனால் பாமகவின் வன்முறை விநியோகஸ்தர்களை மட்டுமே பாதித்தது. இதற்கு ரஜினிகாந்த்தே பொறுப்பேற்று பணத்தை திருப்பி செலுத்தி நஷ்டமடைந்த விநியோகஸ்தர்கள் அனைவரையும் சந்தோசமடைய செய்தார். இதே நிலையை விஜயகாந்த்தும் கடைப்பிடித்திருப்பாரேயானால் தயாரிப்பாளர் துரை அவர்களுக்கு இப்படி ஒரு இக்கட்டான நிலை ஏற்பட்டிருக்காது. இந்த படத்திற்காக விஜயகாந்த் தனது சம்பளப் பணத்தை கொஞ்சமும் பாக்கி வைக்காமல் வசூல் செய்துவிட்டதாக தயாரிப்பாளர் நொந்து போய் பேட்டியளித்திருக்கிறார். தயாரிப்பாளர் துரை அவர்கள் பாமக தலைவர் ராமதாஸை சந்தித்தது விஜயகாந்த் ரசிகர்களுக்கும், விஜயகாந்த்துக்கும் கடும் அதிர்ச்சியை உருவாக்கியிருக்கிறது. தயாரிப்பாளர் துரை விஜயகாந்த்தை அவமானப்படுத்திவிட்டதாக விஜயகாந்த் ரசிகர்கள் ஆவேசமாய் பேட்டியளித்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது. ராமாதாஸ¤டன் சரணடைந்ததால் விஜயகாந்த் ரசிகர்களே கஜேந்திரா திரைப்படத்தை பார்க்காமல் தயாரிப்பாளர் துரைக்கு பாடம் கற்பிக்க நேரிடலாம். இப் படத்தை ஓட விடாமல் பாமக செய்ய நினைத்த யூகங்களை விஜயகாந்த் ரசிகர்களே இப்போது செய்ய நினைத்திருப்பதை கண்டு, பாமக தலைவர் ராமதாஸ் அவர்களின் மனம் மட்டுமே தற்போது சந்தோசத்தால் பூத்திருக்கின்றது.

மா. இரவிசங்கர்
On behalf www.rajinifans.com

No comments: