25.8.04

'இன்னொரு ரஜினிகாந்த்' - ஞாநியின் கட்டுரைக்கான எதிர்வினை

மதிப்பிற்குரிய ஞாநிக்கு,

புதிதாக விஜயகாந்த் ரசிகர் மன்றத்தில் சேர்ந்து அரசியல் பணியையும் ஆற்ற தொடங்கியிருப்பதற்கு வாழ்த்துக்கள். இதை எப்போதோ எதிர்பார்த்திருந்தோம். ஆக்கபூர்வமான விமர்சனங்கள் எதையும் முன்வைக்காமல் எப்போதும் குறைகளையே அடுக்கும் கூட்டத்தைச் சேர்ந்தவர்களின் கொள்கைகள் ஒத்துப் போய் ஒரு அரசியல் அலைவரிசை ஆனதில் ஆச்சரியம் எதுவுமில்லை.

விஜயகாந்தை பற்றி மட்டுமல்ல விக்டோரியா மகாராணியை பற்றி பேசும்போதும் கூட ரஜினியை பற்றி பேசாமலிருக்க முடியாது என்கிற நிலையில் விஜயகாந்தின் அரசியல் நிலைப்பாட்டையும் எதிர்பார்த்தது போலவே ரஜினியோடு ஒப்பிட்டுத்தான் ஆரம்பித்திருக்கிறீர்கள்! 'அரசியலுக்கு நுழைய முயற்சித்து தோற்றுப் போன ரஜினி' என்கிற முதல் வரி, தீம்தரிகிடவின் சர்க்குலேஷனை குறைந்த பட்சம் பத்து பிரதிகளாவது உயர்த்தியிருக்கும் என்கிற உண்மை தங்களின் மனசாட்சிக்கு தெரியாததல்ல.

நல்லவேளை அதிகமா சினிமா விமர்சனங்கள் எதையும் நீங்கள் எழுதிவிடவில்லை! ஊமை விழிகள் படத்தில் அப்போதே எம்.ஜி.ஆரையும், கருணாநிதியையும் நினைவுபடுத்தும் கேரக்டர்கள் அமைந்ததற்கு காரணம், விஜயகாந்த்க்கு அப்போதே எம்.ஜி.ஆரையும் கருணாநிதியையும் எதிர்க்கும் வல்லமை உண்டு என்பதை நிரூபிப்பதற்காகவா? மட்டமான சினிமா படங்களிலிருந்தும் அருமையான சிந்தாந்தங்களையும், அரசியல் பார்வைகளையும் உங்களால் மட்டுமே எப்படி எடுத்துக் கொள்ள முடிகிறது என்பதுதான் ஆச்சரியம்.

பாமகவின் வன்முறைக்கு பயந்து விஜயகாந்த் ரசிகர்கள் பதில் தாக்குதல் தொடுத்ததை பெருமிதத்துடன் சொல்லியிருப்பதிலிருந்தே நீங்கள் வைத்திருக்கும் அரசியல் செல்வாக்கின் அளவுகோல் எதுவென்பது தௌ¤வாக தெரிந்து விடுகிறது.

ரஜினியின் ரசிகர் மன்றங்கள், சத்தியநாராயணா மூலமே இயக்கப்படுகிறது என்கிற தங்களின் கண்டுபிடிப்பு, ரஜினிக்கும் சத்தியநாரயணாவுக்கும் சம்பந்தமேயில்லை என்கிற அர்த்தத்தில் இருப்பதாக சொல்ல முடியாது. ஆனாலும், ரஜினி தனது ரசிகர்களை அடிக்கடி சந்தித்து அரசியலுக்கு தயார்படுத்திக் கொண்டிருப்பதில்லை என்கிற உண்மையை மறைமுகமா உளறித் தொலைத்துவிட்டீர்களோ என்று நினைக்கத் தோன்றியது. தனது சுயநலத்துக்காக ரஜினி, தனது ரசிகர்களை தூண்டிவிடுகிறார் என்கிற தங்களின் பழைய வாதம் அவ்வளவு சீக்கிரம் காமெடியாகிவிடக் கூடாது என்கிற கவலைதான்!

ரஜினி பத்திரிக்கையாளர்களுக்கு பணம் வைத்து கவர் கொடுத்ததை மறைக்காமல் நேர்மையாக எழுதிய நீங்கள் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பைக் கூட ரஜினி ஒழுங்காக நடத்தியதில்லை என்று சொல்லியிருப்பதில் என்ன விதமான எதிர்பார்ப்போ?

தமிழுணர்வுகளை வெளிப்படுத்தி திராவிடக் கட்சிகளுக்கு துதிபாடுவதுதான் வோட்டு பெட்டியை நிரப்பும் என்கிற அதே வறட்டு சிந்தாந்தம் தமிழகத்தில் எப்போதும் எடுபடும் என்கிற தங்களின் அதீத நம்பிக்கையை தகர்க்க முடியாததற்கு ஓட்டுப்போடாத 42 சதவீத மக்கள்தான் காரணம். புதிதாக ஓட்டு வங்கி எதையும் உருவாக்காமல் கூட்டத்தோடு கூட்டமாக இருந்துவிட்டு போய்விடலாம் என்கிற தங்களின் ஆலோசனையை கேட்கும் பட்சத்தில் விஜயகாந்த் நிச்சயம் இன்னொரு டி.ராஜேந்தர்தான்.

தலித் அமைப்புகளெல்லாம் அரசியல் கட்சிகள் அல்ல என்கிற உங்களின் சமுதாய பார்வையும் இடதுசாரிக் கட்சிகளெல்லாம்தான் ஜனநாயகத்தை வாழ வைக்கின்றன என்கிற தங்களின் வாதமும் தமிழக அரசியலில் இன்னமும் அனாதைகளாகவே இருப்பவர்களுக்கு விஜயகாந்த் மூலமாக ஒரு அங்கீகாரம் கிடைக்கச் செய்யும் முயற்சிகளாகத்தான் எங்களால் பார்க்க முடிகிறது.

விஜயகாந்த், காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து கட்சியை வளர்க்க வேண்டும் என்கிற தங்களின் கோரிக்கையிலிருந்து காங்கிரஸ் கட்சியின் மீது உங்களுக்கு கடும் கோபம் இருப்பதாக சொல்ல முடியாது. இருந்தாலும் 1996ல் 'வாழ்விக்க வந்த காந்தி' என்று ரஜினியை மூப்பனார் நினைப்பதாக விமர்சித்த உங்களால் 'மறுபடியும்' காங்கிரஸ்காரர்களை குறை சொல்வதாகவும் எடுத்துக் கொள்ள முடியாது. காரணம் சம்பந்தப்பட்டிருப்பவர் தமிழுணர்வுள்ள விஜயகாந்த்தானே தவிர கன்னட ரஜினிகாந்த் அல்லவே!

மூன்றாவது அணிக்கு தலைமையேற்க அதாவது கம்யூனிஸ, தமிழ் ஆதரவாளர்களுக்கு கை கொடுக்க விஜயகாந்த் வந்துவிட்டபோது, அவரது படங்களின் பெண்ணடிமைத்தனமான, பிற்போக்கான, நிலவுடமை கருத்துக்களைப் பற்றியெல்லாம் நீங்கள் கவலைப்படுவீர்கள் என்று நாங்கள் எதிர்பார்க்க முடியாது.

விஜயகாந்தின் வித்தியாசமான படமாக, லஞ்ச ஒழிப்பை பற்றிச் சொன்ன ரமணாவை சிலாகிக்கும் நீங்கள் தமிழகம் தோறும் காசு கொடுத்து விஜயகாந்த் மன்றத்திற்கு ஆள் சேர்க்கும் பணியை லஞ்சக் கணக்கில் சேர்க்க மாட்டீர்கள் என்றே நினைக்கிறோம்.

அண்ணா காலத்து எம்.ஜி.ஆர் போல காங்கிரஸ§க்கு விஜயகாந்த் இருப்பார் என்கிற ஆரூடம் புதிதாக பிழைக்க வந்திருக்கும் விஜயகாந்த் ரசிகர்களை மிரள வைத்திருக்கும். கருணாநிதியிடம் ஆட்சியை ஒப்படைத்த பின்னர் ஓரங்கட்டப்பட்ட எம்.ஜி.ஆரின் நிலைமை விஜயகாந்துக்கு ஏற்படும் என்றால் கவலைப்படாமல் என்ன செய்வது? அப்படிப்பட்ட சமயத்திலும் சினிமாக்காரர்களை காட்டமாகவும் அவர்களது ரசிகர்களை படுமுட்டாளாகவும் புத்திசாலித்தனமாக விமர்சித்துவிட்டு விஜய், தனுஷ் ரசிகர் மன்றங்களின் செயல்பாடுகளை அலசி ஆராய உங்களால் மட்டுமே முடியும்!

என்றும் அன்புடன்,
ஜெ. ரஜினி ராம்கி
on behalf of www.rajinifans.com

1 comment:

Anonymous said...

you could have given the link of njaani's writing.