22.7.04

நதிநீர் இணைப்பு - இப்படிப் பார்த்தால் என்ன?

சமீப ஆண்டுகளாக நதிநீர் இணைப்பு பற்றி இந்தியாவில் நிறைய பேச ஆரம்பித்திருக்கிறோம். ஒவ்வொரு மாநிலத்திலும், பருவ காலங்களை நம்பி ஏற்படும் பாரதூரமான விளைவுகளை எதிர்கொண்டு சிரமப்பட்டு, நிரந்தரத் தீர்வு என்று ஒன்றைக் காண முடியுமா என்ற ஆதங்கத்தில் யோசிக்கப்படும் தீர்வுகளில் இதுவும் ஒன்று. அதுவும் இந்தியா என்ற பரந்த நிலப்பரப்பில், பலவிதமான பருவநிலைகள், உறுதியற்ற காலமுறையில் சுழலும் போது, பிரச்சினையின் தீவிரம் அதிகமாகிறது.
ஒருபக்கம், வற்றாத ஜீவநதிகள். மற்றொருபுறம், மழை அதிகம் பெய்யும் பகுதிகள். இன்னொரு புறமோ, 4, 5 ஆண்டுகளாக மழையே காணாத பஞ்சப் பகுதிகள். ஆழ்துளைக் கிணறுகள் போட்டு, கடல்நீரையே அள்ளி விடும் அளவுக்கு தண்ணீர்த் தட்டுப்பாடு. விவசாயம் மழைநீரையோ, நிலத்தடி நீரையோ நம்பியே இருப்பதனால், பல இடங்களில் ஒருவித சமனற்றதன்மை உருவாகியுள்ளது. பொருளியல் ரீதியாக உருவாகி வரும் இத்தகைய சமனற்ற தன்மை, மக்களின் மனநிலையையும் வாழ்நிலையையும் பெருமளவில் பாதித்து வருகின்றது.
விவசாயம் இல்லாமல், பல கிராமங்கள், நகரங்களை நோக்கி வேலைதேடிப் படையெடுப்பது அண்மைக் காலங்களில் மிகவும் அதிகரித்திருக்கிறது. சென்னை போன்ற பெருநகரங்களில், கட்டடக் கூலிகளாக வேலை செய்யும் பல குடும்பங்கள், பிழைப்பு தேடி சென்னை சேர்ந்த குடும்பங்களே. நிலமிருக்கிறது, ஆனால் விவசாயமில்லை. நீரைப் பெறச் செய்யப்படவேண்டிய செலவு, எந்த வகையிலும் திரும்ப ஈட்டக்கூடியதாகவே இல்லை. அதிகம் தண்ணீர் தேவைப்படாத பயிர்கள் செய்து பார்த்து, அதுவும் ஒரு எல்லையைத் தொட்டுவிடும் நிலையை எட்டியிருக்கிறது.
கிராமப் பொருளாதாரம் என்பது எப்போதும் விவசாயம் சார்ந்தே உருவாகி வருவது. ஆனால், தண்ணீரைப் பெறச் செய்யப்படவேண்டிய செலவு மிகக் கூடுதலாக ஆகிவருகின்ற வேளையில், விவசாயத்துக்கான முனைப்பே குறைந்து வருவது கண்கூடு.
மற்றொருபுறம், சிறுநகரங்கள், பெருநகரங்கள். நகரவாழ்வின் முக்கிய தேவை, தண்ணீர். இடப்பெயர்ச்சியின் காரணமாகவும், பல ஆண்டுகளாக நிர்வாக, தொழில் வளர்ச்சியின் காரணமாகவும் அபரிதமான வேகத்தில் வளர்ந்து வரும் நகரங்களின் தண்ணீர்த் தேவை, மிக அதிகமாக அதிகரித்துள்ளது. மக்கள், இந்த நகரங்களில் இருந்தாக வேண்டும். அப்போதுதான், தொழில் வளர்ச்சி சாத்தியம். அதேநேரம் அவர்களது தேவையான தண்ணீரும் நிறைவு செய்யப்படவேண்டும்.
கிராமங்களைப் போல், நகர்களிலும் தண்ணீர், மக்களின் பொருளியலையே நிர்ணயிக்கக்கூடிய ஒன்றாக மாறிவிட்டது. மனநிலையையே நிர்ணயிக்கக்கூடிய ஒன்றாகவும் மாறிவிட்டது.
இன்றைக்கு, இதற்கெல்லாம் நிரந்தரத் தீர்வாகக் கருதப்படுவது, நதிநீர் இணைப்பு. இந்தியாவில் உள்ள அனைத்து நதிகளையும் இணைப்பது ஒரு திட்டம். குறைந்தபட்சம், தென்னக நதிகளை இணைப்பது மற்றொரு திட்டம்.
சென்ற வாஜ்பாயி அரசில், நதிநீர் இணைப்பு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்ற பேச்சு எழுந்தவுடனேயே, மாற்றுக் கருத்துடையோரின் கட்டுரைகள், எண்ணங்கள், பத்திரிகைகளை அலங்கரிக்கத் தொடங்கிவிட்டன. நதிநீர் இணைப்பின் சாத்தியமற்ற தன்மையை விளக்கி, அதில் உள்ள பல்வேறு சிக்கல்கள் மற்றும் குறைபாடுகளை விளக்கி ஆய்வுபூர்வமான கட்டுரைகள் பல இதழ்களில் படிக்கக் கிடைத்தன.
நதிநீர் இணைப்புக்கு மாற்றாக முன்வைக்கப்படும் திட்டங்களும் இருக்கின்றன. முக்கியமாக மழைநீர் சேகரிப்பு. தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட இந்த மழைநீர் சேகரிப்பின் பலன்களை சென்னைவாசிகள் இப்போது அனுபவித்துக் கொண்டிருப்பது உண்மை. பல இடங்களில் இந்த கடுமையான ஜூன் - ஜூலை மாதங்களில் கூட, நிலத்தடி நீரின் இருப்பு, போதுமான அளவு இருப்பதைக் காண்கிறோம்.
ஆனால், கேள்வி, இது எவ்வளவு மாதங்கள் தாங்கும் என்பதுதான். அடுத்த பருவமழை வழக்கம்போல், போதிய அளவு பெய்யாமலோ, அல்லது தொடங்கவே தொடங்காமல் போகுமானால் (ஆந்திராவில் ஏற்பட்ட கடும் வறட்சிக்குக் காரணம், கடந்த 5 ஆண்டுகளாக மழை பெய்யாமல் போனதனாலேயே. நாயுடு அரசு தோற்றதற்கு அதுவே முக்கிய காரணம்) நிலைமை என்ன?
ஒருவகையில் மாற்றுக் கருத்துடையோரின் கட்டுரைகள், நிஜத்தை விளம்பும் தன்மை கொண்டிருக்கின்றன. போகும் வழியில் உள்ள சிக்கல்களை, அபாயங்களை, இழப்புகளை வரிசைப்படுத்தியே இவை காட்டுகின்றன.
1. சூழலியல் ரீதியாக ஏற்படக்கூடிய மாற்றங்கள் 2. மக்களின் இடப்பெயர்ச்சி 3. திட்டத்துக்குத் தேவைப்படும் ஏராளமான நிதி.
இவையெல்லாம், இந்தியா போன்ற ஒரு ஏழை நாட்டால் தாங்க முடியுமா என்பதுதான் கேள்வி. மேலும் சர்வதேச கடனை அதிகப்படுத்தும், மேலும் இயற்கை வாழ்நிலையைப் பாதிக்கும் என்றெல்லாம் எதிர்காலம் கணிக்கப்படுகிறது. இதில் உண்மையில்லாமல் இல்லை. இவை அபாயங்கள்.
ஆனால், நிஜம் அதைவிட அபாயமாக இருக்கிறது. மாறிவரும் பருவநிலைகள் காரணமாக, மேன் மேலும், தண்ணீர்த் தட்டுப்பாடு அதிகரிக்குமோ என்ற ஐயம் ஏற்படாமலில்லை. ஏதோ ஒரு வகையில், அந்த அபாயத்தை எதிர்கொள்ளவும், நம்மாலான குறைந்தபட்ச மாற்று நடவடிக்கைகளை எடுத்து, பிரச்சினைக்குத் தீர்வு காணவுமே நாம் விரும்புகிறோம்.
அந்த வகையில், இன்றைக்குக் கண்ணில் தெரியக்கூடிய தீர்வு, நதிநீர் இணைப்புத்தான். இதன் குறைகளைக் களைந்து, அபாயங்களை உள்வாங்கிக்கொண்டு, அதற்கான மாற்றுகளை உருவாக்கிக்கொண்டு, திட்டத்தை முன்னேற்றுவதில் கவனம் செலுத்துவது பொருத்தமாக இருக்கும்.
மாறாக, முளையிலேயே, இந்த எண்ணத்தைக் கிள்ள நினைப்பது ஆரோக்கியமானதாகத் தோன்றவில்லை. இதில் இருந்து, ஒரு நல்ல வாழ்வு கிடைக்கும் என்ற முகாந்திரம் இருக்குமானால், அதைச் செய்து பார்ப்பதில் தவறில்லையே. 

Courtesy :  Sify Venkatesh  (The author is well known writer in Tamil, working as Business Manager in Sify, Chennai)

No comments: