21.5.04

ரஜினி வாய்ஸ் தந்த மாஸ்!

எலெக்ஷன் ரிசல்ட் நான் எதிர்பார்த்த மாதிரி இருந்ததோ இல்லையோ எலெக்ஷனுக்கப்புறம் வந்த ரஜினி வாய்ஸ் பத்தின அலசல் கரெக்டாதான் இருந்தது. ரஜினி வாய்ஸ் தெளிவா இல்லை, ஆட்சிக்கு எதிரான அதிருப்தி அலை, அதிமுகவுக்கு ஆதரவான நிலை என்று ஏகப்பட்ட காரணங்களை எல்லோரும் அடுக்கினார்கள்.

ரஜினி வாய்ஸ் தெளிவா இல்லைன்னு யாரும் எலெக்ஷனுக்கு முந்தியே சொல்லலைங்கிறதை இங்கே சொல்லியே ஆகணும். தன்னுடைய நிலையை மெஜாரிட்டி மக்கள் ஏத்துக்க மாட்டாங்கங்கிறது ரஜினிக்கே நல்லாவே தெரிஞ்சதாலதான் உறுதியா தன்னுடைய நிலையை எடுத்துச் சொல்லலைங்கிறதுதான் நிஜம். திமுக தலைமையிலான கூட்டணியே பெரும்பான்மையான இடங்களை பிடிக்கும் என்பது எல்லோரும் எதிர்ப்பார்த்த விஷயம்தான். எதிர்பார்க்காதது அதிமுக தலைமையிலான கூட்டணி ஒரு இடங்களை கூட பிடிக்காது என்பதுதான்.

ரஜினி எந்த நிலையிலும் அதிமுகவுக்கு ஆதரவாக தனது கருத்தை சொல்லவேயில்லை. மீடியா சந்திப்பில் கூட சர்வ ஜாக்கிரதையாக பாஜக பத்தி பேசினாரேயொழிய அதிமுக பத்தி எதுவும் சொல்லவில்லை. டில்லியில் தேர்தல் கமிஷன் ஆபிஸ் வாசலில் பத்திரிக்கையாளரிடம் பேசும்போது கூட அதிமுகவுக்கு தனது ஆதரவு இல்லையென்றுதான் குறிப்பிட்டார். சென்னைக்கு வந்த வாஜ்பாயை ரஜினி சந்திக்கப் போனதால் அம்மா ஏர்போர்ட் வரவேற்பை புறக்கணித்தது எல்லோருக்கும் தெரியும். வாக்களித்துவிட்டு வெளியே வந்த ரஜினியிடமிருந்து ரொம்ப கஷ்டப்பட்டு ரிப்போர்ட்டர்கள் வாங்கிய பதிலை ஏதோ ரஜினியே கூப்பிட்டு சொன்ன மாதிரி நியூஸ் போட்டது மீடியாவின் கைங்கர்யம்.

தண்ணீர் பிரச்சினை என்பது மக்கள் பிரச்சினை; அது அரசியல் பிரச்சினை அல்ல. இன்றும் காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் அரசியல் தலையீடின்றி மைசூர் பகுதி விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். எந்த அரசியல்வாதியும் காவிரி பிரச்சினையில் தலையிட வேண்டாம் என்பதுதான் பெரும்பாலான விவசாயிகளின் கருத்து. நதிநீர் இணைப்பை ரஜினி கையிலெடுக்கிறார் என்பதற்காகவே அத்திட்டத்தை பற்றிய கடுமையான விமர்சனங்கள் தமிழகத்தில் உலா வரும் என்பது இரண்டு வருடங்களுக்கு முன்பே எதிர்பார்த்த சங்கதிதான். நதிநீர் இணைப்பை வலியுறுத்தி காவிரி டெல்டா பகுதிகளில் ரஜினி சுற்றுப்பயணம் செய்திருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள், தமிழக அரசியலில் ரஜினியின் இடத்தை புரிந்து கொள்ளவில்லையோ என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. ரஜினி முழுநேர அரசியல்வாதியோ அல்லது வெறும் பிரபலமான சினிமா நடிகர் மட்டும் தான் என்றோ சொல்லிவிட முடியாது. அரசியல் ஆர்வமில்லாத ரஜினி, தன்னால் முடிந்த அளவு சூழலுக்கு ஏற்ற மாதிரி தன்னுடைய கருத்தை தெரிவிக்கிறார். இப்போதைக்கு ரஜினியால் முடிந்தது அவ்வளவுதான். எம்.ஜி.ஆர் ஸ்டைல் அரசியலை மக்கள் எதிர்பார்க்கலாம். அரசியல் பார்வையாளர்களும் எதிர்பார்க்கலாமா?

என்.டி.ஏ கூட்டணி நதிநீர் கொள்கையை முன்வைக்கிறது என்பதற்காகவே அதற்கு எதிரான ஒரு கொள்கை முடிவை தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி எடுத்தது. நதிநீர் இணைப்பு என்பது நீண்டகால திட்டம். தேசத்தின் நீர் ஆதாரங்களை பெருக்கும் பல்வேறு திட்டங்களில் நதிநீர் இணைப்பும் ஒரு திட்டம். கடல் நீரிலிருந்து குடிநீர் தயாரிப்பது என்பது இன்னொரு திட்டம். இது சென்னை நகரின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க வல்லது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் , நதி நீர் இணைப்பு காவிரி டெல்டா பகுதி விவசாயிகளின் பாசன நீர் பிரச்சினையை தீர்க்கவல்லது. இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை அரசியல்வாதிகளுக்கு மக்கள்தான் புரிய வைக்கவேண்டும்.

பாமக தலைவர்கள் பற்றி ரஜினியோ, ரஜினி ரசிகர்களோ தரக்குறைவாக பேசியது இல்லை. எம்.ஜி. ஆரில் ஆரம்பித்து எல்லா ஆக்ஷன் ஹ¥ரோக்களும் பக்கத்து நாட்டு தீவிரவாதிகளில் ஆரம்பித்து ஜாதிக் கட்சி தலைவர்கள், அரசியல்வாதிகள் என எல்லோரையும் பக்கா வில்லனாக்கி பக்கம் பக்கமாக வசனம் பேசி நடிக்கும் போது அரசியல்வாதிகளை பற்றிய நாகரீகமான விமர்சனங்களையே ரஜினி தனது படங்களில் முன்வைத்தார். தனிப்பட்ட எந்த நபரையும் ஆதரித்தோ, எதிர்த்தோ ரஜினி சினிமாவிலோ அல்லது நிஜ வாழ்க்கையிலோ செயல்பட்டு ரசிகர்களை தவறாக பாதைக்கு அழைத்துச் சென்றதில்லை.

இந்த தேர்தலில் ரஜினி ஒரு நிலை எடுத்தே ஆகணும்னு ரசிகர்கள் எதிர்பார்த்தாங்களோ இல்லையோ வம்பானந்தாக்களும் கழுகார்களும் ரொம்பவே எதிர்பார்த்தாங்க. எலெக்ஷனுக்கு முந்தியும் அதற்கு அப்புறமும் மதுரை அட்டாக் பத்தி யாரும் வாய் திறக்கவேயில்லை. உண்மையில் மதுரையில் அட்டாக் நடந்திராவிட்டால் வோட்டுப் போடுவதற்கு மட்டும்தான் ரஜினி சென்னை திரும்பியிருப்பார்.

ரஜினி ரசிகர்களை வெளிப்படையாக முட்டாள் என்று சொல்ல பாமக நிறுவனருக்கு இருக்கும் தைரியம் ஒரு தனி ரகம். ஜனநாயக முறையில் செயல்படும் மன்றங்களை கலைக்கும் அதிகாரத்தை யார் இவருக்கு கொடுத்தார்கள் என்பதைப் பற்றியெல்லாம் விமர்சிக்க மீடியாவுக்கு நேரமில்லை. தேர்தலுக்கு முன்பும் இப்போதும் தொடரும் மிரட்டல்கள் பற்றி ரசிகர்கள் கவலைப்படாததற்கு காரணம் ரசிகர்களிடம் ரஜினி நெருக்கமாக வந்திருப்பதுதான். ரஜினி ரசிகர்கள் பெற்றிருக்கும் உண்மையான வெற்றி இதுதான்.

தனது பாமக எதிர்ப்பு நிலைக்கு சுயநலமே காரணம் என்று சொல்லிவிடுவார்களே என்பதற்காகவே ரஜினி தனது கருத்தை மட்டுமே தெரிவித்தார். மக்களையோ தனது ரசிகர்களையோ தன்னுடைய பேச்சை கேட்டாக வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கவில்லை என்பது குறிப்பிட வேண்டிய விஷயம். பாமகவை எதிர்க்கும் ரசிகர்களின் பாதுகாப்பு கருதி தான் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்பட தன்னுடைய ஒப்புதலை தெரிவித்ததாகவும் அறிக்கையில் சொல்லியிருக்கிறார். எம்.ஜி.ஆர் ஸ்டைலில் தோள் மீது கை போட்டே எதிரியை அழித்துவிடலாம் என்கிற அரசியல் தந்திரத்தை அப்ளை பண்ணும் அளவுக்கு யாரும் இங்கே அரசியலில் தேறவில்லை!

ரஜினி எந்தக் கூட்டணிக்கும் தனது ஆதரவில்லை என்று சொன்னதை தேசிய அளவிலான மீடியாக்கள் மட்டுமே செய்தியாக்கியின. உள்ளூர் பத்திரிக்கைகளோ வேறு மாதிரியாக எழுதி வைத்ததை சொல்லத் தேவையில்லை. சன், ஜெயா, ராஜ் டிவிக்கள் ரஜினியின் அறிக்கையிலிருந்து தேவையானதை மட்டும் எடிட் செய்து கொண்டதை தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும்.

ரஜினியின் அரசியல் தலையீட்டிற்கு காரணம் பழிவாங்கும் தன்மை என்று கொச்சைப்படுத்துபவர்களுக்கு ஒரு வார்த்தை. நள்ளிரவு கைது விஷயத்துக்கு பிரச்சாரத்தில் ஏன் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது? ராதிகா செல்வி ஏன் எலெக்ஷனில் நின்று எம்பி ஆனார்? வைகோ வாஜ்பாய் அரசுக்கு தனது ஆதரவை விலக்கிக் கொண்டது ஏன்? திருமாவளவனால் ஏன் திமுக கூட்டணிக்கு ஆதரவை தரமுடியவில்லை? நக்கீரன், ஹிந்து, கல்கி, இந்தியா டுடே பத்திரிக்கைகள் ஏன் அதிமுகவுக்கு எதிரான நிலை எடுத்தன? இதற்கான உண்மையான பதில்கள் கிடைக்குமா?

எல்லாவற்றிற்கும் மேலாக, மதுரை தாக்குதலை கண்டித்து எந்தக் கட்சியும் ஒரு சின்ன வருத்தத்தை கூட தெரிவிக்கவில்லை. (ப. சிதம்பரம் உட்பட) ஒரு நடுநிலையான பத்திரிக்கை ஒரு படி மேலே போய் இவர்கள் ஏன் போய் கருப்புக் கொடி காட்டவேண்டும் என்று எழுதி வைத்தது. தமிழ்நாட்டில் கருப்புக் கொடி காட்டுவது அதிகப்பிரசங்கித்தனம் என்கிற தனது கருத்தை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டால் சந்தோஷப்படுவோம்.

ரஜினி வாய்ஸ் வலுவிழந்து போய்விட்டது என்று நினைக்கும் அரசியல்கட்சிகளுக்கும் மீடியாக்காரர்களுக்கும் கடைசியாக சில பணிவான கோரிக்கைகள்.

1. நதிநீர் இணைப்போ, கடல்நீரிலிருந்து குடிநீர் திட்டமோ, வீராணம் திட்டமோ தமிழகத்தின் தண்ணீர் தேவையை சமாளிப்பதற்கு ஏதாவது செய்ய முடியுமா?

2. மத்தியிலும், கர்நாடகத்திலும் தேவ கெளடா உதவியுடன் ஆட்சியமைக்கும் காங்கிஸை காவிரி நதி நீர் பிரச்சினையில் தமிழகத்தின் கூட்டணி கட்சிகள் ஒரு நிரந்தர தீர்வு ஏற்பட முயற்சியெடுக்குமாறு கேட்டுக் கொள்ளுமா?

3. மதவாதத்தை தேர்தலில் ஒழித்துக் கட்டிய கட்சிகளால் வரும் தேர்தலில் ஜாதீயத்தையும் ஒழிக்க முடியுமா?

4. எலெக்ஷன் நேரத்தில் ரஜினி மற்றும் ரஜினி ரசிகர்களின் அரசியல் நிலைப்பாடு பற்றி கவலைப்படாமல் உங்கள் வேலையை பார்க்கமுடியுமா?

ரஜினியை விமர்சிப்பதை நிறுத்திக் கொள்ளுங்கள் என்று கோரிக்கை விடுப்பது அநாகரீகமான விஷயம். 'விமர்சனங்களை வரவேற்கிறோம்' என்கிற பதில் எங்களிடமிருந்து எப்போதும் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், ரஜினியை பாராட்டி புகழ்ந்து எழுதுவதையும், பேசுவதையும் நிறுத்திக் கொள்ளலாமே என்கிற எங்களது கோரிக்கைக்கு உங்களால் செவி சாய்க்க முடியுமா?

அன்புடன் ஜெ. ரஜினி ராம்கி.

No comments: