7.5.04

சத்தியுடன் ஒரு சந்திப்பு!

இரண்டு நாட்களாக சென்னையில் தொடர்ந்த மழை, தன்னை கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்த நேரம். வானம், கருமையான மேகக்கூட்டங்களுடன் இடி மின்னலுக்கு தயாராய்... பா.ம.க போட்டியிடும் தொகுதிகளைப் போல்!

போன மாதம் ரஜினி அறிக்கையின் மூலம் பரபரப்பு காட்டிய அதே ராகவேந்திரா திருமண மண்டபம்.... அரசியல் பரபரப்பு ஏதுமின்றி அமைதியாய்! வியாழக்கிழமை இருள் சாயும் நேரம். முன்கூட்டியே அனுமதி வாங்கியிருந்ததால் உள்ளே அழைத்துப்போய் உட்கார வைத்து, காத்திருக்க சொன்னார்கள். கூடவே உள்ளுர், வெளியூரிலிருந்து உதவி தேடி வந்த ரசிகர்களும் தளபதியின் வருகைக்காக காத்திருந்தார்கள்.

அரை மணி நேர காத்திருப்புக்கு பின்பு புயலென வந்தார் அந்த தளபதி! தமிழ்நாட்டின் மிகப்பெரிய இளைஞர் படையை பொறுப்போடு கட்டிக் காக்கும் ரஜினியின் பி.ஆர்.ஓ! பேச்சு, நடை, பார்வை என்று எல்லாவற்றிலும் அறுபது சதவிகித ரஜினியை ஞாபகப்படுத்தினார். எத்தனையோ முறை சந்திருந்தாலும் இந்த முறை ஏதோ 'சம்திங் ஸ்பெஷல்' சந்திப்பு என்றே மனப்பட்சி சொன்னது.

தேர்தல் வேலைகளில் ஒன்றிப்போயிருந்த களைப்பு கண்களில் தெரிந்தாலும் எல்லோரையும் தனித்தனியாக வரவேற்க தவறவில்லை. நம்மை கொஞ்சம் நேரம் காத்திருக்கச் சொன்னவர், விருகம்பாக்கத்திலிருந்து உதவி கேட்டு வந்திருந்த பெண்மணியிடம் ஏற்கனவே கொடுத்திருந்த எலெக்ட்ரிக் ஹ¥ட்டர் என்னாச்சு என்றார். எலெக்ட்ரிக் பில் ஏகத்துக்கும் வருவதாக சொன்ன பெண்மணியிடம் குடும்பத்தின் பொருளாதார நிலைமை பற்றி கேட்டறிந்தவர். உதவியாளர்களை கூப்பிட்டு ஆபிஸில் வைத்திருந்த சாதாரண ஹ¥ட்டரை எடுத்து வந்து கொடுக்கச் சொன்னார். போட்டோ வேண்டாமே...ப்ளீஸ் என்று மறுத்தவரிடம் கெஞ்சி நமது வலைத்தளத்துக்காக பயன்படுத்த வேண்டி போட்டோ எடுத்துக் கொண்டோம்.



தன்னால் கண்களை மூட முடியவில்லை என்று மருத்துவ உதவி கேட்டு வந்த ரசிகரின் உடல்நிலையை வாஞ்சையுடன் விசாரித்தவர், அவர் சிகிச்சை பெறும் மருத்துவமனை மற்றும் அவரது பொருளாதார நிலைமை பற்றி கேட்டுவிட்டு மறுநாள் வந்து டெஸ்ட்டிங் செய்து கொள்வதற்கான தொகையை வாங்கிச் செல்லுமாறு பணித்ததும், இமைகள் மூடாத அந்த கண்களிலிருந்து கரைபுரண்டு வந்த கண்ணீரை நம்மால் கவனிக்க முடிந்தது.

நாம் வந்திருந்த நோக்கத்தை சொன்னவுடன் வெகுவாக பாராட்டியவர் www.rajinifans.com பற்றி மற்ற விபரங்களையும் கவனமுடன் கேட்டுக் கொண்டார். தனக்கு கம்யூட்டர் பற்றிய அறிவு இல்லை என்று தன்னடக்கமாய் மறுத்தாலும் ஒரு Non-Profit ஆக எப்படியரு வலைத்தளத்தை தொடர்ந்து நடத்துகிறீர்கள் என்று ஆச்சர்யப்பட்டு தட்டிக் கொடுத்து பாராட்டினார். ரஜினி ரசிகர்களின் தேவையை கவனிக்கவே தான் இருப்பதாக சொன்னவர், நமது வலைத்தள அன்பர்கள் கொடுத்த தொகையை பல்வேறு பொதுக்காரியங்களுக்கு பயன்படுத்தலாமே என்று ஆலோசனையும் கொடுத்தார். ரசிகர்களுக்கு செய்வதை விட எப்போதும் சமூகத்தில் ஒதுக்கப்பட்டுவரும் ஏழை எளிய மக்களுக்கு சிறு சிறு உதவிகளாக செய்வது மகிழ்ச்சியளிக்கும் விஷயம் என்றார்.

பத்து ரூபாய் பெறுமானமுள்ள அலுமினியத் தட்டு கூட இல்லாமல் மதிய உணவுக்காக தடுமாறும் கிராமப்புற குழந்தைகளுக்கும் தர்மாஸ்பத்திரியில் குறைவான படுக்கை வசதிகளுடன் நெருக்கியடித்து படுத்திருக்கும் ஏழை நோயாளிகளும் பயன்பெறும்படி நல்ல காரியத்துக்காக இத்தொகையை செலவிட வேண்டுமாறு கேட்டுக்கொண்டவர், அப்படியரு நல்ல காரியங்களை www.rajinifans.com நடத்தும் பட்சத்தில் விழாவில் கலந்து கொண்டு தானே முன்னின்று உதவிகள் வழங்கிட நிச்சயம் வருவேன் என்றும் உறுதியளித்தார்.

'ஜக்குபாய்' படம் பற்றிய பொய்யான செய்திகள் மீடியாவில் உலா வருவதை தடுத்து அதிகாரபூர்வமான செய்திகளை ரசிகர்களுக்கு வழங்க நமது வலைத்தளத்திற்கு அங்கீகாரம் தரவேண்டும் என்கிற நமது கோரிக்கை¨யும் தேர்தல் முடிந்ததும் தீவிரமாக பரிசீலிப்பதாக சொன்னார். படித்துவிட்டு நல்ல வேலையிலிருக்கும் ரசிகர்கள் தாங்கள் படித்த படிப்பை பயன்படுத்தி ரஜினிக்காக இப்படியரு சிரத்தையெடுத்து செய்திருக்கும் வேலையில் தான் மிகவும் பெருமைப்படுவதாக சொன்னவர், நமக்கென நேரமெடுத்து சில ஆலோசனைகளையும் சொன்னார்.

'தளபதி' சத்தியநாராயணா, ஒரு சினிமா நடிகரின் ரசிகர் மன்ற தலைவர் என்கிற இமேஜையெல்லாம் உடைத்துவிட்டு இன்று நம்பிக்கை தரும் தலைவராக 'மன்னனாக' உருவெடுத்திருக்கிறார் என்பதுதான் நிஜம். அரசியல் அழுத்தங்களுக்கு ஈடுகொடுக்கும் மனப்பக்குவமும் அனுபவ முதிர்ச்சியும் மனிதரிடம் ஏராளமாக இருக்கிறது. அவரால், வட சென்னையிலிருந்து வீட்டுக் கூரைக்காக உதவி வேண்டி வரும் வயோதிகரிடமும் முகம் கொடுத்து பேச முடிகிறது; சேலம் பக்கத்திலிருந்து கோயில் திருப்பணிக்காக உதவி கேட்டு வருபவராலும் அணுக முடிகிறது; ரசிகர்களின் விருப்பத்திற்கேற்ப தேர்தல் நேரத்தில் பலமான அரசியல் கட்சியையும் எதிர்த்து வேலை செய்ய முடிகிறது. சூப்பர் ஸ்டாரின் மீது அன்பு வைத்திருக்கும் லட்சக்கணக்கான ரசிகர்களை நல்வழிப்படுத்தும் இமாலாய பொறுப்பை அநாயாசமாக சுமக்கிறார் அவர்.

அடிக்கிற அரசியல் அனலில் தமிழகமே அரண்டுபோய் கிடந்தாலும் அரைமணி நேரப் பேச்சில் அரை நொடி கூட அரசியல் நெடி அடிக்காமல் பார்த்துக்கொண்டார். காவிரி பாசன பகுதி விவசாயிகளுக்காக 'விகடன்' கிராமங்களை தத்தெடுத்த திட்டத்தை பாராட்டியவர், அதில் www.rajinifans.com பங்கேற்றதையும் விரிவாக கேட்டு தெரிந்து கொண்டார். இலவச கணிணி வகுப்புகள் நடத்தி வருவதை பற்றி கேட்டவர், சந்தோஷத்தின் உச்சிக்கே போய் வந்திருந்த ரசிகர்களிடம் நம்மை 'Helping Hands' என்று பெருமையுடன் அறிமுகப்படுத்தி வைத்தார். லேட்டஸ்ட் தகவல் தொழில்நுட்ப டெக்னாலஜி பற்றி படித்தவர்களுக்கு சொல்லிக் கொடுப்பதைவிட ஏழ்மையின் காரணமாக படிக்கும் வசதி கிடைக்காதவர்களுக்கும் எழைக் குழந்தைகளுக்கும் இலவச கம்ப்யூட்டர் கல்வி கிடைக்குமாறு செய்தால் தான் இன்னும் சந்தோஷப்படுவதாக சொன்னார். தேர்தல் முடிந்ததும் இன்னொரு நாள் தானே கூப்பிடுவதாகச் சொல்லி நமது செல்போன் நம்பரையும் வாங்கி வைத்துக் கொண்டவர், நல்ல காரியங்கள் செய்யும்போது எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறு சொல்லி வாழ்த்தி, வழியனுப்பி வைத்தார்.

வெளியே வரும்போது வானம் இருட்டியிருந்தது. மழை தனது தூறலை ஆரம்பித்திருந்தது. போக வேண்டிய பாதை எது என்பது பற்றிய தெளிவு வந்ததால் மனசுக்குள் சந்தோஷக் கீற்று ஜொலிக்க ஆரம்பித்திருந்தது!

அன்புடன் ஜெ. ரஜினி ராம்கி.

No comments: