சந்திரமுகியின் 800வது நாள் விழா முதல்வர் கருணாநிதி தலைமையில் சென்னையில் நடக்கிறது.
தமிழ்த் திரையுலகில் இதுவரை தியாகராஜ பாகவதர் நடித்த ஹரிதாஸ் படம்தான் அதிக நாட்கள் ஓடி சாதனை படைத்திருந்தது. 1944ல் வெளியான 770 நாட்கள் ஓடிய ஹரிதாஸ் படத்தின் சாதனை, சந்திரமுகியால் முறியடிக்கப்பட்டுள்ளது.
ஹரிதாஸ் 3 காட்சிகள் ஓடியது; சந்திரமுகியோ ஒரே ஒரு காட்சிதானே ஓடியது என்று குறை சொல்பவர்களும் இருக்கிறார்கள். 150 நாட்கள் வரை சந்திரமுகி ஹவுஸ் புல் காட்சிகளாக ஓடியிருந்தது. சந்திரமுகி, முதல் 200 நாட்கள் நான்கு காட்சிகளாகவும் அடுத்து வந்த 600 நாட்கள் பகல் காட்சியாகவும் ஓடியது.
சந்திரமுகி, சிவாஜி பிலிம்ஸ் கம்பெனிக்கு சொந்தமாக சாந்தி தியேட்டரில் ஓடியது. ஹரிதாஸ், திருச்சி ராயல் டாக்கீஸார் கம்பெனிக்கு சொந்தமான ராயல் டாக்கீஸில் ஓடியது.
எத்தனை வாரங்கள் ஓடியது என்பதில் மட்டுமே சந்திரமுகியுடன் ஹரிதாஸை ஒப்பிட முடியுமே தவிர படத்தில் தரம் போன்ற விஷயங்களில் சந்திரமுகியோடு ஹரிதாஸை ஒப்பிடவே முடியாது என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள்.
ஹரிதாஸ் வெளியான அறுபதாவது நாளே லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் தியாகராஜ பாகவதர் கைது செய்யப்பட்டார். பாகதவர் நடித்த கடைசிப்படம் இதுதான் என்று தொடர்ந்து ராயல் டாக்கீஸார் விளம்பரப்படுத்தியதன் விளைவாக ஹரிதாஸ் 3 தீபாவளிகளைக் கண்டது. சிறையிலிருந்து மீண்டு வந்த பின்னர் பாகவதர் நடித்த படங்கள் ஒரு மாதம் ஓடவில்லை என்பது வெளிப்படை.
சந்திரமுகி, 800 நாட்களைத் தொட்டுள்ளது. இது தமிழில் மட்டுமல்லாது தென்னிந்தியாவிலும் புதிய சாதனை ஆகும். சந்திரமுகியின் சாதனையை பாராட்டி விழா எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சிவாஜி புரடக்ஷன்ஸ் நிறுவனமும், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கமும் இணைந்து இந்த விழாவை வருகிற 25ம் தேதி நடத்தவுள்ளன. விழாவுக்கு முதல்வர் கருணாநிதி தலைமை தாங்குகிறார்.
பெரிய ஹீரோக்கள் நடித்த படங்கள் இரண்டு வாரங்கள் ஓடினாலே போஸ்டர் அடித்து, ஆரத்தி எடுத்துஅமர்க்களப்படுத்தும் ரசிகர்களுக்கு மத்தியில் சந்திரமுகியின் சாதனையை சத்தமில்லாமல் கொண்டாடும் ரஜினியின் ரசிகர்களை பாராட்டியே ஆகவேண்டும்.