31.12.03

அனைவருக்கும் இனிய '2004' புத்தாண்டு வாழ்த்துக்கள்!

இந்த வருஷத்திலாவது வெள்ளித்திரையில் தலைவரை பார்க்க முடியுமா என்கிற ஏக்கத்துடன்.....

- ஜெ. ரஜினி ராம்கி

17.12.03

ஒரு சின்ன பிளாஷ்பேக்:-
''கஷ்டப்படுகிறவர்களுக்கு, துன்பம் அனுபவித்தவர்களுக்கு ஆண்டவன் ஒருநாள் உதவாமல் போக மாட்டான். எப்பொழுதுமே கஷ்டப்படட்டும் என்று யாரையும் ஆண்டவன் கை விட்டுவிடவும் மாட்டான். ஆரம்பத்திலிருந்தது கடைசி வரை கஷ்டப்பட்டே வாழ்ந்து செத்தவர்கள் இந்த உலகத்தில் யாரும் கிடையாது. அதுபோல் இறுதி வரை சந்தோஷத்துடன் வாழ்ந்து மடிந்தவர்களும் கிடையாது. அப்படி இருக்கவும் முடியாது, இருக்கவும் கூடாது, இருப்பதும் கிடையாது. அதுதான் இயற்கை.

இயற்கை என்று சொல்லும்போது, அதில் பல அம்சங்களும் அடங்கியிருக்கும். கஷ்டம் - சுகம், பாவம் - புண்ணியம், நல்லது - கெட்டது... என்று பல வகையான அனுபவங்களையும் கொண்டதுதான் இயற்கையின் போக்கு. வாழ்க்கையில் கஷ்டத்தையும் ஓரளவாவது அனுபவித்தால்தான், சுகத்தின் பலன் நமக்கு முழுமையாக கிடைக்கும். ஒரு ஏர் கண்டிஷன் ருமில் தொடர்ந்து இருந்து கொண்டிருந்தால் அதன் அருமை தெரியாது. கொஞ்ச நேரம் வெயிலில் இருந்து விட்டு அதன் பிறகு ஏ.சிக்கு போனால்தான் அதன் அருமை நன்றாக தெரியும்,

ஆகையால், மனிதர்களின் இந்த இயல்பை அறிந்த ஆண்டவன், கஷ்டம், சுகம் இரண்டையுமே வாழ்க்கையில் சேர்த்தே வைத்திருக்கிறான். சுகத்தை மட்டும் விரும்பி ஏற்கிற மனிதன், கஷ்டம் வரும்போது அதைப் பொறுத்துக் கொள்ள மாட்டேன் என்று சொன்னால் அவன் இறைவனையோ, இயற்கையையோ புரிந்து கொள்ளவில்லை என்றுதான் அர்த்தம்.

வாழ்க்கையில் எதுவும் நிரந்தமான விஷயமல்ல என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். நமக்கு இன்பம் கிடைக்கும்போது, அது நிலையானது அல்ல என்ற உணர்வு நம்முள் இருந்தால்இ நாம் அடக்கத்துடன் அந்த இன்பத்தை அனுபவிப்போம். அதுபோல், கஷ்டம் வரும்போது அதுவும் நிலையானதல்ல என்று நாம் உணர்ந்து கொண்டால், அந்த கஷ்டத்தின் சுமை தாங்க முடியாமல் நொறுங்கி விட மாட்டோம். வாழ்க்கையில் இரண்டும் கலந்துதான் இருக்கும். அதுதான் நல்லதும் கூட''

- 28.2.1996 நாளிட்ட துக்ளக் வார இதழில் ரஜினிகாந்த்

- ஜெ. ரஜினி ராம்கி

12.12.03

பிறந்த நாள் குறிப்பு

பிறந்தநாளை முன்னிட்டு யாரும் போஸ்டர், நோட்டீஸ்னு ஆடம்பரமா எதுவும் செய்யக்கூடாதுன்னு போன வாரமே சொல்லியிருந்தும் யாரும் கேட்குற மாதிரி தெரியலை. ரஜினியை தென்னிந்தியாவின் காந்தின்னு விளிக்கும் ஆளுயர போஸ்டர் மெய்யாலுமே டு மச்தான்!

எந்த சேனலை போட்டாலும் ரஜினி, ரஜினி, ரஜினி தான். அசத்தியது என்னவோ ஸ்டார் விஜய்தான். நேற்று, இன்று, நாளைன்னு எப்போதும் எல்லோரும் ரசிக்கற மாதிரி ஒரு புரோகிராம். விஜய் டிவிக்கு நன்றி சொல்லியே ஆகவேண்டும். ராஜ் டிவியும் தன் பங்குக்கு ரஜினி படத்தில் வெர்க் பண்ணியவர்களையெல்லாம் கூப்பிட்டு பேட்டி கண்டது. கூடவே ஒரு ரஜினி படம். என்ன படம்னுதான் எல்லோருக்குமே தெரியுமே.. (வீரா இல்லாட்டி பாண்டியன்!) ஜெயா டிவி கூட ஸ்பெஷலாய் ஒரு ரஜினி படம் காண்பித்தது. ஆனா ஒரு டிவி மட்டும் கண்டுக்கவேயில்லை. அது எதுன்னு சொல்லவும் தேவையில்லை?!

வழக்கம் போலவே எல்லாமும் நடந்து முடிந்தது. 'என்ன வழக்கம்போலவே தலைவரு ஊரில் இல்லையா'ன்னு நண்பர் ஒருவர் கேட்ட கேள்வியில் நக்கல் இருந்தாலும் ஒரு விஷயம் ஆச்சரியமாத்தான் இருக்கு...

இவ்வளவும் தலைவரு தலையை காட்டாமலே நடக்குது, பகிரங்கமாக பிறந்த நாள் கொண்டாடினா எப்படி இருக்கும்... ஐயோ....

தமிழ்நாடு தாங்கதாப்பா!

பி.கு - தலைவர் பிறந்த நாள் அன்னிக்குதான் இயக்குனர் சேரனுக்கும் பிறந்தநாளாம். அதனால சேரனை இயக்குனர்களின் Super Starனு சொல்லி ஊர் பூரா யாரோ போஸ்டர் ஒட்டியிருக்காங்க

- ஜெ. ரஜினி ராம்கி



5.12.03

'ஊர்' வலம் :-

அந்த காலத்துல ராஜாக்களெல்லாம் மாறுவேடத்துல நகர்வலம் போவாங்களாம். ஆனாலும் தலைவர் ரொம்ப மோசம். எப்ப வருவார் எங்கே வருவார்னு யாருக்கும் தெரியமாட்டேங்குது!

போன வாரம் சிவசங்கா பாபாவின் பிறந்தநாள் விழாவுக்கும் மாறுவேஷத்துல வந்தவரை சில பேர் கண்டுபிடிச்சதும் இடத்துலேர்ந்து ஜூ ட் . ஆனா, இதெல்லாம் உண்மைதானா அல்லது 'அவுத்து' விடற சங்கதியான்னுதான் தெரியம மண்டை காய வேண்டியிருக்கு!

இப்பெல்லாம் தலைவரை அங்கே பார்த்தேன், இங்கே பார்த்தேன்னு சொன்னாலே பயமாத்தான் இருக்கு.. நம்பமா இருக்கவும் முடியலை. ஒரு தடவை திருவல்லிக்கேணி ராகவேந்திரர் மடத்துக்கு போக வழி கேட்டாராம். எப்போ? ராத்திரி பதினோருமணிக்காம்... காதுல கனகாம்பரம்தான்!

லேட்டஸ்டா, ஒளிப்பதிவாளர் சங்கம் நடத்தின விழாவுக்கு கடைசி நேரத்துல வருவார்னு புரளியை கிளப்பி எல்லே £ரும் ஏமாந்துதான் போனாங்க... இரண்டு வருஷத்துக்கு முந்தி இளையராஜாவுக்கு நடத்தின பாராட்டு விழாவில் சத்தம் போடாம வந்து ஆடியன்ஸோடு ஆடியன்ஸாய் இருந்தவரை கண்டுபிடிச்சு மேடைக்கு ஏத்தி விட்டாங்க. ஒரு தடவை துக்ளக் ஆண்டு வழாவுக்கு திடீர்னு பிரசன்னமாகி வந்திருந்தவங்களுக்கெல்லாம் ஷாக் கொடுத்தாரு. நாலு மாசம் முந்தி, பொண்ணுங்களோட வந்து Hemamalini பரதநாட்டிய பங்கஷனுக்கும் ஆஜர்.

கொஞ்ச நாளைக்கு முந்தி இப்படித்தான் ஒரு பௌர்ணமி நாளன்னிக்கு திருவண்ணாமலையில், முக்காடு போட்டுட்டு வந்த முகங்களையெல்லாம் நான் சந்தேகத்தோடு பார்த்துகிட்டே கிரிவலம் வந்தது தனி கதை. தலைவரும் வந்தார்... அதற்கடுத்த பௌர்ணமிக்கு!

இதெப்பத்தி நினைச்சுகிட்டே நைட் படுத்தா... செமத்தியான கனவு. தலைவர் கோடம்பாக்கம் பக்கம் ஒரு Browsing Centreல் நம்ம சைட்லேர்ந்து டவுண்லோடு பண்ணிட்டிருக்கார். நட்டுவும் நானும்தான் பிரிண்ட் எடுத்து பிளாப்பியில் போட்டுகிட்டிருக்கும்போதே வில்லன் எண்டராகி, தலைவர் கூட சண்டை போடுறார்....
வில்லன் துப்பாக்கி எடுக்க, தலைவர் தடுக்க, நட்டுவை நோக்கி தோட்டா பறக்க, சினிமாவுல வர்ற மாதிரி நான் குறுக்கே புகுந்து தியாகியாகி.... பயங்கரமான கனவுதாங்கோ!

அய்யோ... தாங்க முடியலை... ஆளை வுடுங்கறீங்களா?

இப்போதைக்கு ஜுட்!

- ஜெ. ரஜினி ராம்கி