17.12.03

ஒரு சின்ன பிளாஷ்பேக்:-
''கஷ்டப்படுகிறவர்களுக்கு, துன்பம் அனுபவித்தவர்களுக்கு ஆண்டவன் ஒருநாள் உதவாமல் போக மாட்டான். எப்பொழுதுமே கஷ்டப்படட்டும் என்று யாரையும் ஆண்டவன் கை விட்டுவிடவும் மாட்டான். ஆரம்பத்திலிருந்தது கடைசி வரை கஷ்டப்பட்டே வாழ்ந்து செத்தவர்கள் இந்த உலகத்தில் யாரும் கிடையாது. அதுபோல் இறுதி வரை சந்தோஷத்துடன் வாழ்ந்து மடிந்தவர்களும் கிடையாது. அப்படி இருக்கவும் முடியாது, இருக்கவும் கூடாது, இருப்பதும் கிடையாது. அதுதான் இயற்கை.

இயற்கை என்று சொல்லும்போது, அதில் பல அம்சங்களும் அடங்கியிருக்கும். கஷ்டம் - சுகம், பாவம் - புண்ணியம், நல்லது - கெட்டது... என்று பல வகையான அனுபவங்களையும் கொண்டதுதான் இயற்கையின் போக்கு. வாழ்க்கையில் கஷ்டத்தையும் ஓரளவாவது அனுபவித்தால்தான், சுகத்தின் பலன் நமக்கு முழுமையாக கிடைக்கும். ஒரு ஏர் கண்டிஷன் ருமில் தொடர்ந்து இருந்து கொண்டிருந்தால் அதன் அருமை தெரியாது. கொஞ்ச நேரம் வெயிலில் இருந்து விட்டு அதன் பிறகு ஏ.சிக்கு போனால்தான் அதன் அருமை நன்றாக தெரியும்,

ஆகையால், மனிதர்களின் இந்த இயல்பை அறிந்த ஆண்டவன், கஷ்டம், சுகம் இரண்டையுமே வாழ்க்கையில் சேர்த்தே வைத்திருக்கிறான். சுகத்தை மட்டும் விரும்பி ஏற்கிற மனிதன், கஷ்டம் வரும்போது அதைப் பொறுத்துக் கொள்ள மாட்டேன் என்று சொன்னால் அவன் இறைவனையோ, இயற்கையையோ புரிந்து கொள்ளவில்லை என்றுதான் அர்த்தம்.

வாழ்க்கையில் எதுவும் நிரந்தமான விஷயமல்ல என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். நமக்கு இன்பம் கிடைக்கும்போது, அது நிலையானது அல்ல என்ற உணர்வு நம்முள் இருந்தால்இ நாம் அடக்கத்துடன் அந்த இன்பத்தை அனுபவிப்போம். அதுபோல், கஷ்டம் வரும்போது அதுவும் நிலையானதல்ல என்று நாம் உணர்ந்து கொண்டால், அந்த கஷ்டத்தின் சுமை தாங்க முடியாமல் நொறுங்கி விட மாட்டோம். வாழ்க்கையில் இரண்டும் கலந்துதான் இருக்கும். அதுதான் நல்லதும் கூட''

- 28.2.1996 நாளிட்ட துக்ளக் வார இதழில் ரஜினிகாந்த்

- ஜெ. ரஜினி ராம்கி

No comments: