4.4.08

அரசியலுக்காக ஆட்டம் போடாதீர்கள் - ரஜினி


கர்நாடகாவில் தமிழ் மக்கள் தாக்கப்பட்டதற்கு எனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ் மக்கள் மீதான வன்முறைக்குக் காரணமானவர்களைக் கண்டிக்கிறேன். பல ஆண்டுகளுக்கு முன்பே ஒகேனக்கல்லின் ஒரு பகுதி கர்நாடகாவுக்கும், மறுபகுதி தமிழகத்துக்கும் என ஒதுக்கப்பட்டது. தனக்காக ஒதுக்கப்பட்ட பகுதியிலிருந்து தண்ணீர் எடுத்துக்கொள்ளத் தமிழகத்தை எதிர்ப்பது எந்த விதத்தில் நியாயம்... உதைக்க வேண்டாமா, இதை எதிர்ப்பவர்களை?

நாடு எங்கே போய்க் கொண்டிருக்கிறது? அரசு, சுப்ரீம் கோர்ட் எல்லாம் இருக்கிறதா...? மக்கள் யார் பேச்சைக் கேட்கிறார்கள்...? யார் சொன்னால் கேட்பார்கள்...? புரியவில்லை. என்ன நடந்தாலும் கைகட்டி வேடிக்கைப் பார்க்க எதற்கு அரசாங்கம்? இந்த வட்டாள்... நாராயணகவுடாவை எல்லாம் விடுங்கள். கொஞ்சம் பெரிய தலைவர்கள் ரேஞ்சுக்குப் பேசுவோம்.

கர்நாடகத்தைச் சேர்ந்த நான் மிகவும் மதிக்கிற ஒரு தலைவர் அவர். ஒரு பெரிய கட்சியின் சார்பில் முதல்வராகக் கூட இருந்தவர். சில தினங்களுக்கு முன் அவர் கர்நாடக மக்களைத் தூண்டிவிடும் விதத்தில் பேசியிருக்கிறார். இதை அந்தக் கட்சி சும்மா வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கிறது.

காரணம் அங்கே விரைவில் வரப் போகிற சட்டசபைத் தேர்தல். அரசியல் ஆதாயத்துக்காக அப்படிச் செய்கிறார்கள். மக்கள் என்ன முட்டாள்களா.. அவர்களுக்கு ஒன்றுமே தெரியாதா...? எல்லாவற்றையும் மேலிருந்து பார்த்துக்கொண்டிருக்கும் கடவுளுக்குச் சமமானவர்கள் மக்கள். அவர்களை யாரும் ஏமாற்ற முடியாது. உண்மையாகப் பேச வேண்டும். மனசாட்சிக்கு விரோதமில்லாமல் நடந்துகொள்ள வேண்டாம்.

மக்களுக்கு ஒரு நாள் நீங்கள் பதில் சொல்லியே தீர வேண்டும். நான் கர்நாடகத்திலிருக்கும் மதிப்புக்குரிய தேவ கெளடா, குமாரசாமி, எடியூரப்பா, சித்தராமையா போன்றவர்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்கிறேன். அரசியலுக்காக ஆட்டம் போடாதீர்கள்... அப்புறம் நீங்கள் இருக்க மாட்டீர்கள். அழிந்து போவீர்கள்.

இந்த பிரச்னைக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும். நகத்தால் கிள்ளி எறிய வேண்டிய இந்தப் பிரச்னைக்கு இப்போது தீர்வு காணாவிட்டால், பிறகு கோடாலி கொண்டும் வெட்டித் தீர்வு காண முடியாது. இந்த அரசியல் விளையாட்டில் பாதிக்கப்படுவது மிகச் சாதாரண மக்கள் தான். இதனால் உண்மையைப் பேசுங்கள், அரசியல் லாபத்துக்காக எதையும் பேசாதீர்கள்.

4 comments:

வல்லிசிம்ஹன் said...

Well done.

OSAI Chella said...

This is SUPER!

Anonymous said...

ஒரு தடவை சொன்னாலும்,நூறு தடவை சொன்ன லெவலில் சூப்பர் ஸ்டார் சூப்பராக பேசியிருக்கார்னு தான் சொல்லவேண்டும்.

தாயுமானவன்

நந்தா said...

ரொம்ப நாட்கள் கழித்து ர்ஜின் இது போன்று நேரடியாய் குரல் கொடுத்திருப்பது சந்தோஷமே.

ஆனால் உறுத்தல்கள் முழுதும் அடங்க வில்லை. தனக்கு பிடித்த பேச்சாளராக “வாட்டாள் நாகரஜ்” பெயரைத் தனது தளத்தில், பயோ-டாட்டவில் குறிப்பிட்டிருப்பது ஏனோ விகாரமாய் உறுத்துக்கிறது.

சாய்குமார் தனக்கு பிடித்த நடிகர் என்று சிவாஜி கணேசனை சொன்னதற்குப் பின்பு, அவரை மிரட்டி ராஜ்குமார் என்று சொல்லு என சொன்னதற்கும் இதற்கும் வித்தியாசம் இருக்கிறது என்றே நினைக்கிறேன்.

http://blog.nandhaonline.com