19.11.05

சந்திரமுகி - 225



'அவர்கள்' ராமநாதன்




'சந்திரமுகி' வேட்டையன்



ஏற்றமோ இறக்கமோ
எதையுமே ஏற்பவன்.

கேள்வியாய் வாழ்கிறான்.
மெளனத்தை ஆள்கிறான்.

15.11.05

தலைவர்

கொஞ்ச நாளாகவே (வீ.எம் "பாவம் அவரை விட்டுவிடுவோமே" பதிவு போட்டதிலிருந்து) தலைவரைப் (ரஜினிகாந்த் @ சிவாஜி ராவ் கெய்க்வாட்) பற்றி பதிவிடணும்னு ஆசை. அந்த ஆசையின் விளைவே இந்த பதிவு. இந்த பதிவு நம்ம ரஜினி ராம்கியை பனிக்கட்டி மழையில் நனைக்கணும்னோ அல்லது அடுத்த தலைவர் படத்துக்கு (சிவாஜி) முதல் ஷோ டிக்கட் வாங்கணும்னோ எழுதப்பட்டதல்ல. மேலும் இந்த பதிவு எந்தளவிற்கு தேவை, தேவையில்லை, உபயோகமானது, உபயோகமில்லாதது ஆகிய கருத்தா ய்வுகளை உங்களது கண்ணோட்டத்திற்கே விட்டு விடுகிறேன். இது என் எண்ணங்களின் வெளிப்பாடு அவ்வளவு தான்.

ரஜினி சாரை ஏற்கனவே தலைவர் என்று சொல்லிவிட்டதால் கட்டுரையில் ரஜினி என்று ஒருமையிலேயே அழைக்கிறேன். ரசிகன் என்ற தகுதியில் அவரிடம் கேட்காமலேயே அவரிடம் நான் எடுத்துக்கொள்ளும் உரிமை இது.

நான் சிறுவனாக இருந்த பொழுது என் வீட்டினருகே ஒரு அண்ணன் வசித்து வந்தார். பெயர் அந்தோணி. தீவிர ரஜினி ரசிகர். அவரிடம் எப்பொழுது பேசினாலும் ரஜினி ரஜினி ரஜினி தான். "அவன் இப்படி அடிப்பான் அப்படி அடிப்பான் அவன் ஸ்டைலே ஸ்டைலப்பா" ஆகிய புகழாரங்கள் தான் எப்போதும். போதாக்குறைக்கு வீட்டு எதிர்ப்புறமிருக்கும் மின்கம்பத்திலிருந்து முச்சந்தி விநாயக ர் கோயில் சுவர் வரை "ரஜினி" தான். எனக்கு அப்போ வயசு எட்டு. அந்தோணி அண்ணன் என்னை விட ஒரு எட்டு வயது மூத்தவர். தளபதி படம் பத்து நாளில் ரிலீஸ் ஆகயிருந்தது. வழக்கம் போல் அந்தோணி அண்ணனின் ப்ரிரிலீஸ் (pre-release) வேலைகளும் ஆரம்பித்தன. தட்டி போர்டு, கலர் பெயிண்டு என மும்முரமானார். சும்மா ஐந்து நாள் ஒரு சூறாவளி சுற்றுப்பயணத்தை முடித்தார். விளைவு எங்க ஏரியாவுல இருக்கிற தென்னை மரம், பஞ்சாயத்து அடி பம்பு என எல்லா இடங்களிலும் தளபதி என்ற வாசகம்.


அவர்கிட்ட போய் கேட்டேன். எண்ணன்னே வேலை எல்லாம் முடிஞ்சாதுன்னு. ஆமாம்பா முடிஞ்சது ஒரு ரெண்டு நாள் ரெஸ்டெடுத்திட்டு தலைவர் படம் முதல் ஷோ பார்த்துற வேண்டியது தான். "என்னையும் கூட்டிட்டுப் போவீங்களாண்ணே?" அவர் ஆர்வம் எனக்கு தொற்றிக் கொண்டது. என்னைப் பார்த்து சிரித்தவர் சரியென்று சொல்லிவிட்டு தளபதி போஸ்டர் ஒன்றை காண்பித்தார். தளபதி படத்தில் வரும் "சுந்தரி கண்ணால் ஒரு சேதி" பாட்டிற்காக ரஜினி தலை முடியைக் கொண்டை போட்டிருப்பார் அந்த கெட்டப்பில் இருந்த போஸ்டர். தட்டி போர்டு க்காக வைத்திருந்த பெரிய சைஸ் போஸ்டர் என்பதால் எனக்கு மிகவும் பிடித்துப் போனது. நான் மனதில் பதித்த முதல் ரஜினி போஸ்டர் அதுதான். அன்றிலிருந்து பசையிடாத போஸ்டர் ஒன்றும் மனதில் ஒட்டிக்கொண்டிருக்கிறது அதிலும் ரஜினிதான். அந்தோணி அண்ணன் தந்த ஊக்கம் அடம்பிடித்து அப்பாவுடன் சென்று தளபதி முதல் ஷோ பார்த்தேன். புரியாத விஷயங்களை அப்பா விளக்கினார். இப்படியாக விவரம் தெரிந்து நான் புரிந்து பார்த்த படம் "தளபதி". மகாபாரதக் கதையென்பதால் சீக்கிரமே பிடித்துக் கொண்டேன் போல. அன்றிலிருந்து நான் ரஜினி ரசிகன்.

அன்றைக்கு எனக்கிருந்த மனவளர்ச்சியில் ரஜினி யார்? அவனது பின்புலம் என்ன? நன்றாக நடிப்பானா? என்றெல்லாம் எனக்கு கேட்கத் தெரியவில்லை. அப்பொழுதிருந்து அநேகமாக ரஜினியின் அனைத்து படங்களையும் பார்த்து விடுகிறேன். ரஜினி திரையில் வில்லனை அடித்தால் இங்கே எனது உள்மனம் வீறு கொண்டெழும். இந்த மாதிரி உணர்ச்சிகளை திரைப்படம் பார்க்கும் அனைவரும் ஏதேனும் ஒரு வயதில் அனுபவித்திருப்பார்கள். அதே உணர்வு தான் எனக்கும்.
அவ்வப்போது அந்தோணி அண்ணனுடன் போஸ்டர் வேலை அப்படி இப்படியென்று நானும் ஜோதியில் ஐக்கியமாகி விட்டேன்.

பின்னர் வயது ஏற ஏற பக்குவம் வந்தது. சினிமாவை அலசி ஆராயும் தெளிவும் வந்தது. ஆனால் இந்த பக்குவமும் தெளிவும் மற்ற நடிகர்களின் படங்களிற்கு மட்டும் தான். ரஜினி படங்களை அலசிப்பார்க்க ஆராய என்னால் முடியவில்லை. எனக்கு ஆங்கிலத்திற்கு ABCD போல சினிமாவுக்கு ரஜினி. ரஜினி படம் ரிலீஸ் ஆவதற்கு ஒரு வாரம் முன்னர் ஆரம்பிக்கும் இந்த உணர்ச்சி மழை முதல் நாள் முதல் ஷோ படம் முடிந்ததும் குறைந்து விடும். பின்பு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி விடுவோம். இன்று வரை இப்படித்தான் செல்கிறது. ஒவ்வொரு முறை ரஜினி படம் பார்க்கையிலும் அதே பழைய சிந்தனைகள் தான். தன்னிலை உணராமல் என்னை மறந்த நிலையிலேயே இன்றும் ரஜினி படங்களைப் பார்த்து வருகிறேன். இதில் பகுத்தறிவை என்னால் புகுத்த முடியாது. அப்படி புகுத்துகிறேன் என்றால் நான் திரும்பவும் ABCD படிக்க ஆரம்பிக்கிறேன். எனக்கு அது தேவையில்லை. உணர்ச்சிகளால் வரும் அந்த சந்தோஷத்தை அறிவால் இழக்க நான் தயாராக இல்லை.

டெல்லியில் தமிழ் சினிமாக்கள் திரையிடப்படுவது அரிது. அதனால் பெரும்பாலும் திருட்டு சிடிக்களிலேயே படங்கள் பார்ப்பதுண்டு. (யாரும் போட்டுக்கொடுத்துறாதீங்க சாமி...) சந்திரமுகி ரிலீஸ் ஆகும் பொழுது என்னையும் அறியாமல் ஒருவித ஏமாற்றம் முதல் ஷோ பார்க்கமுடியவில்லையே என்று. ஆனால் தியேட்டருக்கு சென்று தான் பார்க்க வேண்டும் என்று மட்டும் உறுதி எடுத்துக் கொண்டேன். என் ஆசை வீண் போகவில்லை. டெல்லியில் சந்திரமுகி திரையிடப்பட்டது. போய் பார்த்துவிட்டு வந்து நான் எழுதிய பதிவுதான் "ரசிகனின் ஆட்டோகிராஃப்". அன்றும் நினைத்துப் பார்த்துக்கொண்டேன் "என்னையும் கூட்டிட்டுப் போவீங்களாண்ணே?" என்று அந்தோணி அண்ணனிடம் கேட்டதை.

தமிழ்மணத்திற்கு வரும் வரை ரஜினி என்பவன் நான் செய்ய முடியாததைத் திரையில் செய்யும் ஒரு பெரிய சக்தி அவ்வளவு தான். ஆனால் தமிழ்மணத்திற்கு வந்த பிறகு ரஜினி என்னும் அந்த திரை சக்தியின் சில பரிணாமங்களையும் என்னால் பார்க்க முடிந்தது. சந்திரமுகி விமர்சனம் எழுதிய அல்வாசிட்டி அண்ணாவின் வலைப்பதிவை ஒரே நாளில் 1000 பேருக்கு மேல் பார்த்திருக்கிறார்கள். இதெப்படி சாத்தியமாயிற்று. ஒவ்வொரு வலைப்பதிவரும் பார்த்தார் என்றால் எண்ணிக்கை 800ஐத் தாண்டியிருக்க முடியாது. இதில் பகுத்தறிவுவாதிகள் பாதி பேர். (எழுத்தாளர்கள் அல்லவா...). நான் இப்படி சொல்கிறேனே என்று யாரும் தவறாக எண்ண வேண்டாம் இருந்தாலும் எனக்கு பெரிய புதிராகவே உள்ளது. ஒருவேளை என்னிடம் இருக்கும் அந்த "தளபதி" மனம் ஒவ்வொருவரிடமும் இருக்கிறது போல.

இன்னொரு பரிணாமம் ரஜினி ராம்கி. என்னால் ரஜினி ராம்கி போல் பெயரை மாற்றிக்கொள்ள முடியாது. அதற்கு என் ஆளுமை ஒப்பவில்லை (இது தான் பகுத்தறிவு என்று சொல்பவர்களுக்கு வாயில் அவல்). ஆனால் என்று ரஜினி என்பவனுக்கு இத்தனை பெரிய ரசிகர் மன்றம் இருக்கிறதென்று தெரிந்ததோ அதில் இத்தனை நல்ல விஷயங்கள் நடக்கிறதென்று தெரிந்ததோ (பார்க்க http://rajinifans.com/activities/index.asp) அதுவும் ரஜினி ராம்கி போன்ற அன்பர்களால் நடக்கிறதென்று தெரிந்ததோ அன்றே என்னையும் அந்த குழுமத்தில் இணைத்துக் கொண்டேன் (இன்றுவரை அந்த குழுமத்திலிருந்து உபயோகமாக ஒன்றும் செய்யவில்லை என்றாலும்). தன்னலமில்லாமல் கட்டப்பட்ட ஒரு வீடு அது. தெரிந்தோ தெரியாமலோ என் தலைமுறைக்கு ரஜினி என்பவன் உணர்வுகளில் கலந்து விட்டான். பகுத்தறிவிற்கு முதலிடம் தரும் அன்பர்கள் இந்த உணர்ச்சியை வெற்றிக் கொள்கின்றனர். நான் உணர்வுகளால் ஆனவன் நான் இங்கு தோல்வியுறுகிறேன் எனக்கு ரஜினி என்னும் ஆளுமையின் தாக்கம் இருந்தது, இருக்கிறது, இனியும் இருக்கும்.

பி.கு

வீ.எம் பதிவுக்கு நானளித்த பின்னூட்டத்தில் சொன்ன வரிகள் "இப்படி ஒருத்தன் மக்களை சந்தோஷப்படுத்துகிறான், அரசியல் வேண்டாமென்று யோசிக்கிறான், அமைதி தேடி இமயமலை போறான், இவனிடம் அரசாங்கத்தை கொடுத்தால் "கொஞ்சம்" நல்லது செய்ய மாட்டானா என்ன? ரஜினி என்னும் தனிப்பட்ட மனிதன் மீது எனக்கு நம்பிக்கை அதிகம். அவனால் என் நாட்டிற்க்கு ஏதேனும் செய்ய முடியுமென்று நான் முழுவதுமாக நம்புகிறேன். "
 

5.11.05

ரஜினியைப் பின்பற்று: ராமதாசு

ரஜினியைப் போல மற்ற நடிகர்களும் திரைப்படங்களில் புகைப்பிடிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் தலைவர் மருத்துவர் ராமதாசு கூறியுள்ளார். நவ.3ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசியபோது இதனை அவர் தெரிவித்தார்.

மத்திய அமைச்சர் அன்புமணி, திரைப்படங்களில் புகை பிடிப்பது, மது அருந்துவது போன்ற காட்சிகளுக்குத் தடை விதிக்கவேண்டும் என்று கூறியது, தேசிய அளவில் பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. இப்போது தொலைக்காட்சிகளில் அத்தகைய காட்சிகள் வரும்போது, திரையில் புகை பிடிப்பது உடல் நலனுக்குத் தீங்கானது; மது அருந்துவது உடல்நலனுக்குத் தீங்கானது என்று குறிப்பிடுகிறார்கள்.

இந்நிலையில் நவ.3ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய ராமதாசு, "சிகரெட் பிடிப்பதை நிறுத்தி விடுவேன் என்று இந்தி நடிகர் ஷாருக்கான் கூறியிருக்கிறார். இதே கருத்தை நாங்கள் தொடர்ந்து வýயுறுத்தி வருகிறோம். நடிகர் ரஜினிகாந்த்கூட திரைப்படங்களில் சிகரெட் பிடிப்பதைத் தவிர்த்துவிட்டார். அவரைப் பின்பற்றி மற்ற நடிகர்களும் திரைப்படங்களில் சிகரெட் பிடிப்பதைத் தவிர்க்க வேண்டும்" என்றார்.

புகை பிடிப்பவர்கள் காதில் இது விழுந்தால் சரி.

Courtesy : Sify.com