17.4.05

சந்திரமுகி : விமர்சனம்

1992. மன்னன் படத்திற்கான குமுதம் விமர்சனம். தளபதியில் சீரியஸான ரஜினியை பார்த்து சோர்ந்து போயிருந்த ரசிகர்களை மனதில் வைத்துக்கொண்டு எழுதியது போல அந்த கடைசி பன்ச் லைன் 'மீண்டும் ரஜினி'

படத்தில் நிறைய ஆச்சர்யப்பட வைக்கும் விஷயங்கள். டைட்டில் கார்டிலேயே கமலுக்கு நன்றி சொல்கிறார்கள். ரஜினி படத்தில் வழக்கமாக வரும் விஷயங்களுக்கெல்லாம் கெட்அவுட் சொல்லியிருக்கிறார்கள். அரசியல் முலாம் பூசப்பட்ட டயலாக் இல்லை; தனிமனித துதி பாடும் பக்கவாத்தியங்கள் இல்லை; ஆர்ப்பரிக்கும் செயற்கையான பின்னணி இசை இல்லை. லாஜிக்கை மீறிய மேஜிக் காட்சிகள் இல்லவே இல்லை. ரஜினி படம்தானா என்று கொஞ்சம் கிள்ளிப்பார்த்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. சர்ச்சைக்கு தீனி போடும் மேட்டர் கிடைக்காமல் மீடியாதான் அல்லாடப்போகிறது, பாவம்!

லாங் ஷாட்டில் ஓடி வந்து, வில்லனை உதைக்க தாவி குதித்து அதை தூக்கிப்போட்டு வாயில் பிடித்து...அதுதான் சிகரெட் அல்ல... சூயிங்கம்! மத்திய சுகாதாரத்துறை அமைச்சரகம், சிகரெட்டை மறந்து விட்டு இன்னும் கொஞ்ச நாளைக்கு சூயிங்க விஷயத்தை மென்று வைக்கலாம்!

எப்போதும் ரஜினியை சுத்திதான் கதை. சந்திரமுகியில் கதையைச் சுற்றி ரஜினி! படத்தின் பெரிய பிளஸ் பாயிண்ட் ரஜினியின் கிளாமரா அல்லது ஜோவின் நடிப்பான்னு பட்டிமன்றம் வைக்கலாம். கிளைமாக்ஸில் ஜோதிகா அசத்துகிறார் என்றால் படம் முழுக்க ரஜினி காட்டும் கிளாமர் கைதட்டலை அள்ளிக்கொள்கிறது. படு கச்சிதமான திரில்லர் திரைக்கதை. ஆவி, பழைய பங்களா என்றெல்லாம் காட்டினாலும் ஸ்பிளிட் பர்ஸனாலிட்டி பற்றிய சுவராசியமான விளக்கங்களுடன் திரைக்கதையை கவனமாக பின்னியிருக்கிறார்கள். கதையோட்டத்துடன் வரும் காமெடி, அரண்டு போயிருப்பவர்களை சிரிக்க வைக்கிறது.

ரஜினி ஏதோ சொல்ல வருகிறார்னு காதை தீட்டிக்கொண்டு கவனமாக இருந்தால் பெரிதாக எதுவுமில்லை. படத்தின் மைனஸ் பாயிண்ட், டயலாக்தான். ரஜினிக்கொன்று ஏதும் ஸ்பெஷலாக எழுதாமல் சாதாரண டயலாக்கை வைத்ததால் ரசிகர்களுக்கு ஏமாற்றம். ரஜினி படத்தில் இல்லாத சங்கதியான நான் வெஜ்
டயலாக், நாசர்-வடிவேலு ஜோடி உபயத்தில். உரைநடை தமிழையே பேச்சுத் தமிழக்கு பயன்படுத்தியிருக்கிறார்கள். சாம்பிளுக்கு ஒன்று. பிரபு ஒரு காட்சியில் மல்லிகை மணம் என்கிறார். மல்லிகை வாசனை என்று சொல்லியிருந்தால் கொஞ்சம் நேட்டிவிட்டி இருந்திருக்கும்.

ஜோதிகாவா இது? சில குளோஸப் ஷாட்டுகளில் ஆச்சர்யப்படுத்துகிறார். அம்மிணிக்கு ஏதாவது அவார்டு கிடைத்தால் ஆச்சர்யப்படுவதற்கில்லை. திரைக்கதையில் அதிகமான வேலையில்லை என்றாலும் படம் முழுக்க வருகிறார் நயன்தாரா. சான்ஸ் கிடைத்தால் தன்னாலும் நன்றாக நடிக்கமுடியும் என்று சொல்லியிருக்கிறார். ரஜினிக்கு ஜோதிகா, நயன்தாராவை விட சொர்ணாவுடன்தான் காம்பினேஷன்!

'என்னை மட்டும் அவுட்டோருக்கு அனுப்பி வையுங்க.. அசத்திப்புடறேன்'னு சொல்கிற மாதிரி படத்தின் ஒளிப்பதிவு. அரண்மனைக்குள் கொஞ்சம் அடக்கி வாசிக்கும் காமிரா, வெளியே வந்தால் மிரட்டுகிறது. பின்னணி இசை பரவாயில்லை ரகம். ஆர்ட் டைரக்டர் ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார். ரிசல்ட்டும் நன்றாகவே வந்திருக்கிறது. தோட்டா தரணிக்கு வாழ்த்துக்கள். மொத்தத்தில் தமிழ்சினிமாவில் சந்திரமுகி முக்கியமான படமாகவிருக்கிறது. வருஷக்கணக்கா டி.வியோடு முடங்கியிருக்கும் தாய்க்குலங்களை தியேட்டருக்கு அழைத்துவரப்போகிறது. தியேட்டரில் மட்டுமே பார்க்கத்தூண்டும் திரைக்கதை வி.சி.டி வியாபாரிகளை திணறவைக்கும்.

இன்னொரு புல் மீல்ஸ் படம் ரஜினியிடமிருந்து. ஆனால், ரஜினி ரசிகர்களுக்கு அல்ல; தமிழ் சினிமாவின் ரசிகர்களுக்கு!

2 comments:

Anonymous said...

do you have any idea why they thanked Kamal?

Anonymous said...

chandramukhi is great to watch! i have to struggle to take tickets even after i week in malaysia. i watched twice and superstar did really very well..especially laka laka laka laka.. today as i pass by the coleseum theatre in KL at 11am, i saw the similar crowd buying the tickets. this never happen to other actors in Malaysia!

LAKA LAKA LAKA LAKA

sam
kuala lumpur