
www.rajinifans.com - It's only because of Super Star
ரஜினி ·பேன்ஸ் கிரியேட்டிவ் டீம் நிஜமாகவே ஆச்சர்யத்தில் உறைந்து போனது. நதி நீர் இணைப்புக்காக சூப்பர் ஸ்டர் ஒரு கோடி ரூபாய் வழங்கும்போது ரஜினி ·பேன்ஸ் சார்பில் ஒரு லட்சம் வழங்கப்படும் என்கிற நோக்கத்தோடுதான் இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. நன்கு பழகிய நண்பர்களிடமிருந்தே நல்ல விஷயங்களுக்காக நிதி பெறமுடியாத காலத்தில் இணையத்தின் மூலம் அறிமுகமான முகம் தெரியாத நண்பர்களிடமிருந்து ஒரு லட்ச ரூபாய் திரட்டிவிட முடியுமென்பது அசட்டு நம்பிக்கையாகத்தான் இருந்தது. ஆனால், சுனாமி தாக்குதலுக்கு பின்னர் வந்து குவிந்த உதவிகளால் எங்கள் அவநம்பிக்கை தரைமட்டமானது.

December 2003 - www.rajinifans.com Creative Team with Shajahan
சுனாமி மீட்பு நடவடிக்கை நம்முடைய பங்கும் இருக்கவேண்டும் என்பதே ஆரம்ப கட்ட எதிர்பார்ப்பு. முதலமைச்சர் நிவாரண நிதிக்காக 21 லட்ச ரூபாயை சூப்பர் ஸ்டாரே நேரில் தலைமைச்செயலகத்துக்கு சென்று முதல்வரிடம் வழங்கியது பெரிய திருப்பு முனை. அமெரிக்காவிலிருந்து ஆஸ்திரேலியா வரை திசையெங்கிலிருந்தும் வந்த நிதிகளை (Total Contributions - Rs. 1,09,596/-) பெற்றுக்கொண்டு ஓப்புகை அனுப்பி வைப்பதே அடுத்து வந்த இரண்டு வாரங்களுக்கு முக்கிய வேலையாகிப்போனது. Contributors List
26.1.2005. ரஜினியையும் ரஜினியின் ரசிகர்களையும் நம்பி உதவிக்கு ஓடி வந்து தங்களால் இயன்ற தொகையை அனுப்பி வைத்த நண்பர்களின் நம்பிக்கைக்கு தகுந்த மரியாதை அளிக்க களத்தில் இறங்கினோம். மாடரேட்டர் நடராஜ் தலைமையிலான சென்னை நண்பர்களின் டீம், பட்டினப்பாக்கத்தில் ஆரம்பித்து மகாபலிபுரம் வரையிலான சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிலைமையை நேரில் பார்க்கச் சென்றது. எங்களுக்கு கிடைத்த முதல் அறிக்கையில் ஒரு தெளிவான செய்தி இருந்தது. சுனாமியால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்களுக்கு தேவைக்கும் அதிகமான உதவிகள் கிடைத்துக்கொண்டிருக்கிறது என்பதுதான். First Report

December 2004 - Moderators with Thalapathi
நாகை மாவட்டத்து கடலோர கிராமங்களில் சுனாமி மீட்பு பணிகளில் இருந்த மாடரேட்டர் ராம்கியும் சுனாமி பாதிப்புக்குள்ளான பகுதிகளில் தேவையான உதவிகள் கிடைப்பதாக தெரிவித்தார். கிடைத்த நிதியை மற்ற அமைப்புகள் போல அரசாங்கத்திடம் சேர்த்துவிட்டு சுலபமான விஷயம்தான். களத்தில் இறங்கி வேலை செய்ய ரஜினி ரசிகர்கள் இருக்கும்போது அதற்கான அவசியமுமில்லை என்று உலகெங்கும் இருந்த நண்பர்கள் உற்சாகப்படுத்தினார்கள். ஷாஜகான், நடராஜ், ராம்கி, தர்மா, தீபா, வாசு, தினகர், செந்தில் உள்ளிட்ட நண்பர்கள் உதவிக்கு வந்தார்கள். கிரியேட்டிவ் டீம் உறுப்பினர்களும் ரஜினி ·பேன்ஸ் குழுமத்தின் சீனியர் நண்பர்களும் விவாதித்து பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களின் நீண்ட கால கல்வித்தேவையை நிறைவு செய்யும் வகையில் ஒரு புதிய ஏற்பாடு செய்யலாம் என்று ஏகமனதாக முடிவு செய்யப்பட்டு அது குறித்து கருத்து கேட்டு தலைமை ரஜினி மன்றத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டது. Evaluation
'நம்ம சார்பா ஸாரே 21 லட்சம் கொடுத்துட்டாங்க... சுனாமி வேலைகளும் திருப்தியா நடக்கிறதா செய்தி வருது. இந்த நேரத்துல இவ்வளவு பெரிய தொகையை பசங்க படிப்புக்காக செலவு பண்றதுதான் சரியா இருக்கும். நல்ல முடிவுதான் எடுத்திருக்கீங்க! ஸார் கிட்ட சொன்னா சந்தோஷப்படுவார். பொறுமையா உட்கார்ந்து சரியா திட்டமிட்டு பணியை நல்ல படியா முடிச்சுட்டு சொல்லுங்க' என்று உற்சாகப்படுத்தினார் சத்தியநாராயணா. கூடவே திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் இருக்கும் சிக்கல்களையும் விரிவாக சொல்ல ஆரம்பித்தார். அரசுப் பள்ளிகளை தேர்ந்தெடுப்பதிலும் அதில் படிக்கும் தகுதியான மாணவர்களை தேர்ந்தெடுப்பதிலும் உதவ வேண்டும் என்ற எங்களது வேண்டுகோளையும் ஏற்றுக்கொண்டார்.
கிடுகிடுவென்று லிஸ்ட் தயாரானது. சென்னையிலிருக்கும் பெரும்பாலான பள்ளிகளுக்கு கணிசமான உதவிகள் கிடைப்பதால் ஆரம்ப கட்டத்திலேயே நீக்கிவிட்டோம். மரக்காணம், மகாபலிபுரம் பகுதிகளை சேர்ந்த அரசுப்பள்ளிகளை மட்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டோம். பள்ளிகளை தரம் வாரியாக பிரித்து சம்பந்தப்பட்ட பகுதிகளின் ரஜினி மன்ற பிரதிநிதிகளிடம் விவரங்கள் கேட்டுப் பெறப்பட்டன. பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு தானே கடிதம் எழுதி ஒவ்வொரு வகுப்பிலும் 70 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெறும் மாணவ, மாணவியர்களின் பட்டியலை தயார் செய்து கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார் சத்தியநாராயணா.

April 2005 - Chandramukhi Celebrations
தகவல்களை சேகரிப்பதும் அதை சரி பார்ப்பதும் அவ்வளவு எளிதான வேலையாக இருக்கவில்லை. ஏகப்பட்ட தடங்கலை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. கூடவே ஏகப்பட்ட விசாரணைகளும். கேட்டவர்களுக்கெல்லாம் பதில் சொல்வதிலேயே பாதி நேரம் போனது. சந்திரமுகி வெளியாகி நூறு நாட்களை கடக்கும் வரை சுனாமி சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளை நிறுத்துவதாக முடிவு செய்யப்பட்டது. திரும்பவும் ஆகஸ்ட் மாதத்தில் பள்ளிகளை பட்டியலெடுக்கும் வேலை ஆரம்பமானது. ஒரு சில பள்ளிகளிலிருந்து சரியான ஒத்துழைப்பு வராத காரணத்தால் உற்சாகம் குறைந்தாலும் சுனாமி ஒராண்டு நிறைவுக்குள் பணியை முடிக்கவேண்டுமே என்கிற முனைப்பே முன்னெடுத்துச் சென்றது.

December 2005 - Auditor Dharma with Thalapathi
26.12.2005. சத்திய நாராயணா தலைமையில் ரஜினி ·பேன்ஸ் சென்னை நண்பர்கள் சுனாமி தாக்குதலில் குழந்தைகளை இழந்த குடும்பத்தினரை சந்தித்தார்கள். கராத்தே வகுப்புக்கு மெரீனா பீச்சுக்கு போன பிள்ளையை சுனாமியால் பறிகொடுத்து விட்டு இன்னும் சோகத்தின் சுவடோடு இருக்கும் இரண்டு குடும்பங்களுக்கும் ரஜினி ·பேன்ஸ் சார்பில் உதவி வழங்கப்பட்டது. Tsunami - First Year

December 2005 - Ramki with Thalapathi
மாணவர்கள் பட்டியலை பெறுவதில் இருக்கும் சிக்கல்களையும் அதனால் ஏற்படும் தாமதம் பற்றியும் சென்னை நண்பர்கள் குழு விவாதித்தது. சிங்கப்பூரிலிருந்து வந்திருந்த ரஜினி ·பேன்ஸ் ஆடிட்டர் தர்மா சொன்ன ஆலோசனைகளும் பயனளித்தது. திரும்பவும் உதவிக்கு வந்தார் தளபதி சத்தியநாராயணா. சம்பந்தப்பட்ட பகுதிகளிலிருக்கும் ரஜினி ரசிகர்களும் களத்தில் இறங்கினார்கள். 40 பேர் கொண்ட பட்டியலில் இருந்த பெயர்களை சத்தியநாராயணா தலைமையிலான டீம் சரிபார்க்க ஆரம்பித்தது.
6.1.2006. மாணவர்களின் ஜாதகம் தவிர மற்ற விபரங்களெல்லாம் கிடைத்துவிட்டன. அவ்வப்போது ரஜினி ரசிகர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு சத்தியநாராயணா பணியை விரைவுபடுத்தியதால் ஒரே மாதத்தில் அனைத்து விபரங்களும் கையில் கிடைத்துவிட்டன.அடுத்து ஆரம்பமானது ரஜினி ·பேன்ஸ் நண்பர்களின் இரண்டாவது பயணம். சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு நேரில் போய் மாணவர்களிடம் கலந்து பேசி அவர்களின் தேவைகளை கேட்டோம். Action Plan

January 2006 - Thalapthi & Natraj in Mahabalipuram School
பள்ளி ஆசிரியர்களிடம் மாணவர்களின் குடும்ப சூழ்நிலை குறித்தும், என்ன மாதிரியான உதவிகள் தேவை என்கிற விபரத்தை கேட்டுப்பெற்றோம். 120 பேர் கொண்டு மாணவ மாணவியர்களின் பட்டியல் தயாரானது. நடராஜ், செந்தில் போன்ற சென்னை நண்பர்கள் பட்டியலை இறுதி செய்தார்கள். விடுமுறைக்கு பின்னர் பள்ளி திறந்ததும் மாணவர்களுக்கு உதவி செய்யலாமே என்கிற தளபதி சத்தியநாராயணாவின் ஆலோசனையை ஒப்புக்கொண்டு பள்ளிகள் திறக்கப்பட்டதும் உதவிகள் வழங்க ஒரு நாள் குறிக்கப்பட்டது.

July 2006 - Thalapathi with Mahabalipuram fans
10.7.2006. காலையில் சென்னையிலிருந்து கிளம்பி மகாபலிபுரம் போய் பள்ளி மாணவர்களுக்கு வழங்கிவிட்டு அங்கிருந்த மரக்காணத்துக்கு பக்கத்தில் இருக்கும் ஒரு அரசு உதவி பெறும் பள்ளி. மதிய சாப்பாட்டையும் ஒத்திப்போட்டுவிட்டு மாலை வரை தங்கிருந்து பணியை நிறைவாக முடித்துவிட்டு சென்னைக்கு திரும்பும்போது இருட்டிவிட்டது. மகாபலிபுரத்தில் பிளாஷ் வெளிச்சத்தில் பரிசுப்பெருட்களை அடுக்கி வைத்து கொடுத்ததை தளபதி சத்தியநாராயணா ரசிக்கவில்லை. மரக்காணம் பள்ளியில் ஒரு சின்ன வகுப்பறையில் பரிசுப்பொருட்களை அடுக்கி வைத்துவிட்டு மாணவர்களை அழைத்து வந்து அவர்களையே எடுத்துக்கொள்ளச் சொல்லிவிட்டோம்.

July 2006 - Kadapakkam School students
ஸ்கூல் யூனி·பார்ம் இரண்டு செட், பெரிய பேக், நான்கு பேனா, பதினைந்து நோட்டு, ஜாமிண்ட்ரி பாக்ஸ், தோல் செருப்பு. 1500 மதிப்பிலான ஒவ்வொறு செட்டையும் தேடி அலைந்து வெவ்வேறு இடங்களில் வாங்க உதவியாக இருந்தது சம்பந்தப்பட்ட பகுதி மன்றத்து நண்பர்கள்தான். சென்னையில் துணி வாங்கி, டெய்லரை பள்ளிக்கு அழைத்து வந்து அளவெடுத்து தைக்கச் சொல்லிவிட்டு, செருப்புக்கடைக்காரரை அழைத்து மாணவர்களின் கால் அளவுக்கு ஏற்றபடி செருப்புகளை ஏற்பாடு செய்து கொடுத்ததில் ஆரம்பித்து எந்தவித ஈகோவும் பார்க்காமல் நோட்டு புத்தகங்களை தலைமீது தூக்கி வந்து அடுக்கி வைப்பது வரை படு உற்சாகமாக களப்பணி செய்த மகபாலிபுர ரஜினி ரசிகர்களை பாராட்ட வார்த்தைகளில்லை. ஒன்றரை வருஷமாக உலகெங்கிலும் இருக்கும் ரசிகர்களை ஒருங்கிணைத்து நிறைவுடன் பணியை முடித்து வந்தது ரஜினி என்கிற ஒற்றை வார்த்தைதான்.


July 2006 - Senthil with Thalpathi
தளபதி சத்தியநாராயணா தலைமையிலான டீம் சென்னையிலிருந்து கிளம்பும்போது மணி காலை 6.30. மகாபலிபுரம் பெருமாள் கோயில் பக்கத்திலிருக்கும் அந்த அரசு தொடக்கப்பள்ளிக்கு சென்று சேரவும் பிரேயர் ஆரம்பிக்கவும் சரியாக இருந்தது. பிரேயர் ஹாலில் பரிசுப்பொருட்கள் தயாராக இருந்தன. மாணவ, மாணவியர் தலைமையாசிரியர் பட்டியலை படிக்க ஆரம்பித்ததும் ரஜினி ·பேன்ஸ் கிரியேட்டிவ் டீம் நண்பர்கள் கொடுக்க ஆரம்பிக்க, மாணவர்கள் வரிசையில் நின்று உதவிகளை பெற்றுக்கொண்டார்கள். பிரேயருக்கு பின்னர் தளபதி சத்தியநாராயணா சொன்ன விஷயம்தான் முக்கியம்.

'இதெல்லாம் ரஜினி ஸார் கொடுத்தது கிடையாது. உங்களை போலவே ஸ்கூல்ல நல்லா படிச்சுட்டு அமெரிக்கா, சிங்கப்பூர் போய் நல்ல வேலையிலிருக்கிற நண்பர்களெல்லாம் ஒண்ணா சேர்ந்து தங்களுக்கு வர்ற வருமானத்திலேர்ந்து ஒரு சின்ன தொகையை சேர்த்து வைத்து உங்களுக்காக கொடுத்திருக்காங்க. இதையெல்லாம் வாங்கி உங்ககிட்டே சேர்க்கிறதோட என்னோட வேலை முடிஞ்சு போச்சு. இதுல எங்களுக்கு எந்த கஷ்டமுமில்லை. ஆனா, அடுத்த வருஷமும் இதெல்லாம் வேணும்னா நல்ல மார்க் வாங்கினாத்தான் உண்டு. என்ன உதவி வேணும்னாலும் உங்க ஸ்கூல் ஹெச்எம் கிட்ட சொல்லுங்க. படிக்கிறதுக்காக எது வேணும்னு கேட்டாலும் நிச்சயம் செஞ்சு தருவோம்'

நன்றி சொல்ல வந்தது ஒரு பத்தாங்கிளாஸ் படிக்கும் மாணவன். 'இதெல்லாம் பார்க்கும்போது எங்களுக்கு சந்தோஷமா இருக்கு. வேலை தேடி வெளிநாட்டுக்கு போறவங்க நம்ம நாட்டை மறந்துடுவாங்கன்னுதான் நாங்க நினைச்சுட்டிருந்தோம். நாங்க நினைச்சது தப்புதான். இதைப் பார்க்கும்போது நாங்களும் நல்லா படிச்சு, நல்ல வேலைக்கு போய் இதே மாதிரி நிறைய உதவி செய்யணும்னு ஆசைப்படறோம்!'
சபாஷ்டா கண்ணா! இதைத்தான் நாங்க எதிர்பார்த்தோம்'. வாய் விட்டுச் சொல்லி வாழ்த்திவிட்டு வெளியே வந்தோம். அடுத்த வருஷத்துக்கு இப்பவே ஆரம்பிச்சு குக்கிராமத்தில் இருக்கும் ஸ்கூலுக்குப் போய் இதை விட கஷ்டப்படற மாணவர்களுக்கு செஞ்சாகணும் என்கிற கவலையோடு பேசிக்கொண்டே வந்தார் சத்தியநாராயணா. ஓன்றரை வருஷமாக கூடவே இருந்து ஏகப்பட்ட பிஸியான வேலைகளுக்கு நடுவேயும் பணியை செவ்வனே செய்து கொடுத்த சத்தியநாராயணாவை பற்றி வார்த்தைகளில் விவரிக்க முடியாது. அதற்கான அனுமதியும் கிடையாது. சம்பந்தப்பட்ட நண்பர்களின் உணர்வில் நிறைந்துவிட்ட விஷயம் அது.

இன்னும் போகவேண்டிய தூரம் நிறைய. செய்யப்பட வேண்டிய பணிகளும் நிறைய. ரஜினி ·பேன்ஸை பொறுத்தவரை இது இன்னொரு கமா. நிச்சயம் புல் ஸ்டாப் இல்லை!