
இவன் திரையின் கதவடைத்து
இமயம் நோக்கி
நடந்தபோதெல்லாம்
இமையின் கதவுடைத்து
இதயங்கள் அழுதன.
இவனோடு
உரசிக் கொண்டால்
அரசுகளும் தீப்பிடிக்கும்.
ஆனாலும்
இவனுக்கோ
ஆன்மீகப் பூ பிடிக்கும்
அரசியல் இருக்கை
தலைநகரத்தில்
இவனுக்காய்
தயாராகையில்
இமயமலை இடுக்குகளில்
கிழிந்த உடையில் நடந்தவன் இவன்.
கடவுளா? உலகமா ?
எனும் கேள்வி எழுகையில்
கடவுளே உலகமடா
என்றவன் இவன்.
இவன்
ஓய்வெடுக்க உறங்கினால்
சாய்ந்து விட்டான் என்பார்கள்,
அமைதியாய் இருந்துவிட்டால்
பயந்து விட்டான் என்பார்கள்,
எப்படியோ
இவனைப் பற்றிப் பேசாமல்
இருந்ததில்லை தமிழ்நாடு.
இவன் தமிழனில்லை
என்று
தகராறுகள் எழுகையில்,
இனி நாங்கள்
இந்தியர்கள் என்றனர் தமிழர்கள்.
Courtesy : xavi.wordpress.com