'எங்க ஆளு உள்ளங்கள்; எல்லாமே வைரங்கள்.. நீ கொஞ்சம் பட்டை தீட்டுடா!'
நாளை ஜொலிக்கப் போகும் வைரங்களை இன்றே பட்டை தீட்டும் எங்களது முயற்சி
ஸ்டார் டாக் - ஷாஜகான்
இணையம் சம்பந்தப்பட்ட ரஜினி ரசிகர்களுக்கு ஷாஜகான் ரொம்பவே பரிச்சயம். சிவப்பான சிங்கப்பூர் பார்ட்டி. ரஜினி ரசிகர்களுக்காக (கவனிக்க, ரஜினிக்காக அல்ல!) ஒரு இணையத்தளம் ஆரம்பிக்கவேண்டும் என்ற நண்பர்களின் முயற்சிகளுக்கு இவர்தான் பிள்ளையார் சுழியாக இருந்தவர். ஷாஜகானை பொறுத்தவரை ரஜினியும் கமலும் இணைந்து நடித்த படங்களும் அதை பார்த்து ரசித்த நாட்களும்தான் பொற்காலம். பத்து வயசில் 'போக்கிரி ராஜா'வை பார்த்துவிட்டு சிங்கப்பூருக்கு பறந்தவர் என்றாலும் மனது இன்னும் மாயவரத்துக்கு பக்கத்தில்தான். சொந்த ஊர், மாயவரத்துக்கும் செம்பொன்னார்கோயிலுக்கும் நடுவே சிக்கிக்கொண்டிருக்கும் வடகரை!
எப்போதும் கைலி; எப்போதாவது பேண்ட். இளையராஜா பாட்டு, பில்டர் காபி....பிடித்த பத்து லிஸ்ட் போடச் சொன்னால் இதெல்லாம் கட்டாயமிருக்கும். பத்து வயது பையன்களுக்கு என்னென்ன பிடிக்குமோ அதெல்லாம் அப்போது ஷாஜகானுக்கும் பிடித்திருந்தது. ரஜினியின் ஸ்டைலும் சண்டைக்காட்சிகளில் காட்டும் வேகமும்தான் இவரை ரஜினி ரசிகனாக்கியிருக்கிறதாம். முப்பது வருஷமாகவா அந்த ஸ்டைல் பிடித்திருக்கிறது என்று கேட்டால் 'இல்லை' என்று பதில் வருகிறது. சரி, ரஜினியிடம் ரொம்ப பிடித்த விஷயம் என்னவென்று கேட்டால் எல்லா ரஜினி ரசிகர்களும் சொல்வதைத்தான் இவரும் சொல்கிறார். 'தெரியாது'!
சினிமா பார்ப்பதே தப்பான விஷயமாக பார்க்கப்பட்ட ஒரு கட்டுப்பெட்டித்தனமான குடும்பம் ஷாஜகானுடையது. ரஜினியை பிடிக்கும் என்று சொன்னாலே நிறைய பேருக்கு முகம் இஷ்டத்திற்கு அஷ்டகோணலாகிவிடும். சுற்றுவட்டாரத்தில் ரஜினி என்றாலே நிறைய பேருக்கு கசக்கும். காரணம், அழகை மட்டுமே ஆராதித்து பழக்கப்பட்டுப்போன சொந்தங்களுக்கு சூப்பர் ஸ்டார் வேப்பங்காயாகவே இருந்தார். ஒரு மழை நாளில் தீபாவளி கொண்டாட்டமாய் வெளியாகியிருந்த 'நல்லவனுக்கு நல்லவ'னை பியர்லெஸ் தியேட்டர் வாசலில் கால்கடுக்க நின்று டிக்கெட் வாங்கி படம் பார்த்தது ஷாஜகானுக்கு ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்திருக்கிறது. அதுவே பின்னாளில் தீராத தாகமாகிவிட்டது. கல்யாணமாகி இரண்டு குழந்தைகளோடு சிங்கப்பூரில் செட்டிலாகிவிட்ட ஆசாமிக்கு இன்னும் பியர்லெஸ் தியேட்டரை மறக்கமுடியவில்லை. நாலு வருஷத்துக்கு ஒரு முறை ஊருக்கு வந்தால் முதல் விசிட் பியர்லெஸ் தியேட்டருக்குத்தான்.
கருத்த உருவமும், ஆக்ஷன் ஹீரோ இமேஜூம் ரஜினிக்கு பெண்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றுத்தராது என்றுதான் எல்லோரையும் போல ஷாஜகானும் ஆரம்பத்தில் நினைத்திருந்தார். சக கல்லூரி மாணவிகள் தனியறையில் ஒட்டியிருந்த அந்த பெரிய பெரிய ரஜினி போஸ்டர்களை அன்று பார்த்திராவிட்டால் இன்றுவரை அப்படித்தான் நினைத்துக்கொண்டு இருந்திருப்பார். ஒரே மாதிரியான செய்திகளை திரும்ப திரும்பக் கொடுத்து காசு பார்க்கும் ரஜினி ரசிகன், திரைச்சிற்பி, யெஸ் நோ போன்ற பத்திரிக்கைகளை சளைக்காமல் வாங்கிப் படித்துதான் ரஜினி பற்றிய செய்திகளை சிங்கப்பூரில் தெரிந்து கொள்ள முடிந்திருக்கிறது. இவற்றையெல்லாம் ஒரு நாள் இணையத்தில் தொகுத்து தர வேண்டியிருக்கும் என்று நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டார். சரி, இப்படியொரு தீவிர ரஜினி ரசிகர், ரஜினியை நேரில் பார்த்திருக்கிறாரா? இல்லையென்றுதான் சொல்லவேண்டும். 1992 ஆம் வருஷம் ரஜினி சிங்கப்பூருக்கு வந்தபோது மேடையில் பார்த்ததோடு சரி. எப்போதாவது ரஜினியை பார்த்து பேச நினைத்ததுண்டா என்று கேட்டால் பார்த்து என்ன ஆகப்போகிறது... தூரத்திலிருந்து ரசிப்பதே போதும் என்கிறார், லேசான சிரிப்புடன்.
- ஜெ. ராம்கி
ரஜினி - வெற்றிகரமான சினிமா நடிகராக தொடங்கி ஆன்மீகம், அரசியல் என சகல தளங்களிலும் விரவி இன்று தமிழகத்தின் தவிர்க்க முடியாத சக்தியாக திகழ்வதை யாரும் மறுக்க முடியாது. கணிணி மயமாகிவிட்ட இவ்வுலகில் ரஜினியின் மீது அன்பு கொண்டிருக்கும் அனைவரையும் இணையத்தின் வாயிலாக இணைக்க விழைந்துள்ளோம். www.rajinifans.com - ரஜினியை பற்றிய அனைத்து விஷயங்களையும் பகிர்ந்து கொள்ளவும், ரஜினி சம்பந்தப்பட்ட விஷயங்களை விவாதிக்கவும், எதிர் வினைகளை பதிவு செய்யவும் அன்புடன் அழைக்கிறோம்.
20.10.05
1.10.05
சந்திரமுகி - 175
எங்களுக்கும் காலம் வரும்;
காலம் வந்தால் வாழ்வு வரும்;
வாழ்வு வந்தால் அனைவரையும்
வாழ வைப்போமே!
Subscribe to:
Posts (Atom)